மீன் வாங்கி சுத்தம் செய்த பாத்திரத்தில் அதன் வாடை போகாமல் இருந்தால், சீயக்காய் மற்றும் புளி சேர்த்து தேய்த்து விடுங்கள். நாற்றம் போயே போச்சு.காபி போட்ட பின் மிஞ்சிய காபி சக்கையை உலர்த்தி சமையல் பாத்திரம் துலக்கும் சபீனாவுடன் சேர்த்து பயன்படுத்தினால் பாத்திரங்கள் பளபளக்கும்.நான்ஸ்டிக் தோசைக்கல்லை தேய்த்து தேய்த்து கரைத்துவிட வேண்டாம். பயன்படுத்திய பின்னர் ஒரு ஈரத்துணியால் துடைத்துவிட்டு பின்னர் ஒரு செய்தித்தாளால் துடைத்து விட்டால் பிசுபிசுப்பு போய்விடும். எடுத்து வைத்து விடலாம்.
பிரியாணி செய்யும்போது அரிசி உடையாமல் இருக்க வேண்டுமானால், ஒரு சில துளி எலுமிச்சம் சாறை அதில் விட்டால் அரிசி உடைவது குறைந்துவிடும்.
சமையல் அறையில் வைத்திருக்கும் பருப்பு, மசாலாப் பொடிகளில் பூச்சி பிடிப்பதால் பெரும் தொல்லை ஏற்படுவதைத் தவிர்க்க 5, 6 கிராம்புகளை பூச்சி பிடிக்கும் பொருட்கள் இருக்கும் டப்பாக்களில் போட்டு வைத்தால் பூச்சிகள் அண்டாது.
முட்டை கோஸ் பொறியல் செய்யும் போது, அதில் சிறிது பால் ஊற்றி சமைத்துப் பாருங்கள், நிறமும், சுவையும் கூடுதலாக இருக்கும். உடலுக்கும் ஏற்றது.
பருப்பை பாத்திரத்தில் வைத்து வேக வைத்தால் நேரம் அதிகமாவதுடன், பொங்கி வழிவது பெரும் பிரச்சினையாக இருக்கும். இதனைத் தவிர்க்க பருப்பை வேக வைக்கும் முன் அதனுடன் சிறிது எண்ணெயும், மஞ்சள் தூளையும் சேர்க்கவும். இதனால் பருப்பு சீக்கிரமாக வெந்துவிடும். பொங்கி வழியாது.
சாம்பார் போன்ற குழம்பு வகைகளில் உப்பு அல்லது காரம் அதிகமாகிவிட்டால் ஒன்று அல்லது இரண்டு தக்காளிகளை சிறு துண்டுகளாக நறுக்கிப் போட்டுக் கொதிக்க வையுங்கள். உப்பு அல்லது காரம் சரியாகிவிடும்.
தேன் வாங்கும்போது அது அசல் தேனா என்பதை கண்டறிய ஒரு சிறிய டெஸ்ட். ஒரு கப் தண்ணீரில் ஒரு சொட்டுத் தேனை விட்டுப் பாருங்கள். அந்த சொட்டுத் தேன் முத்துப்போல் கப்பின் அடியில் உட்கார்ந்து கொண்டால் நல்ல தேன். கரைந்துவிட்டால் சர்க்கரைப்பாகு.
சாதம் செய்யும் பாத்திரத்தில் அடி பிடிப்பதைத் தவிர்க்க பாத்திரத்தின் உட்பக்க அடிப் பகுதியில் சிறிது தேங்காய் எண்ணெய் தடவினால் அடிபிடிக்காது
வீட்டில் நெய் காய்ச்சும் போது சீக்கிரமே அதன் மணத்தை இழந்து விடுகிறது. இதனைத் தவிர்க்க வெண்ணெய் காய்ச்சி இறக்கியதும் அதில் சிறிது வெந்தயத்தைப் போட்டு வைத்தால் நெய் நல்ல மணமாக இருக்கும்.
உங்களுக்குத் தெரிந்த குறிப்புகளையும் எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பெயருடன் அவைகள் வெளியிடப்படும்.