நாடாளுமன்ற தேர்தலையொட்டி பிரதமர் மோடி கர்நாடகாவில் இன்று பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார். அவரது வருகையை முன்னிட்டு அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கர்நாடக மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தல் 2 கட்டமாக வருகிற 26, மே 7-ந் தேதி நடைபெற உள்ளது. பெங்களூரு உள்பட அதனை சுற்றியுள்ள 14 தொகுதிகளில் இந்த முதல்கட்ட தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தல் களத்தில் 247 பேர் உள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு பிரதமர் மோடி 3 முறை கர்நாடகம் வந்து பிரசார பொதுக்கூட்டம், வாகன பேரணியில் பங்கேற்று உள்ளார். இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி 4-வது முறையாக அவர் மீண்டும் இன்று கர்நாடகம் வருகிறார். சிறப்பு விமானம் மூலம் கர்நாடகம் வரும் அவர், சிக்பள்ளாப்பூரில் நடைபெறும் பாஜக பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.
தொடர்ந்து மாலை 6 மணியளவில் பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நடைபெறும் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார். இதில் பெங்களூருவில் உள்ள 4 தொகுதிகளின் வேட்பாளர்கள் கலந்து கொள்கிறார்கள். மேலும் முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா, கர்நாடக பா.ஜனதா தலைவர் விஜயேந்திரா உள்ளிட்ட தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.
பிரதமர் மோடி வருகையையொட்டி பெங்களூரு மற்றும் சிக்பள்ளாப்பூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளன.