Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சுமார் 1 லட்சத்திற்கு மேற்பட்டோரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இல்லை..! அண்ணாமலை புகார்..!!

Advertiesment
Annamalai

Senthil Velan

, வெள்ளி, 19 ஏப்ரல் 2024 (18:46 IST)
கோவையில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்று அந்த தொகுதியின் வேட்பாளர் அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார்.

பாஜக மாநில தலைவரும் கோவை மக்களவைத் தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை ராம் நகர் பகுதியில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் நடைபெற்ற வாக்குப்பதிவினை நேரில் பார்வையிட்டார். 
 
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்பது தெரியவந்துள்ளது என்றார். மேலும் கணவருக்கு ஒரு வாக்கு சாவடி, மனைவிக்கு மற்றொரு வாக்குச்சாவடி மையத்திலும் ஒதுக்கப்பட்டுள்ளது என்று அவர் புகார் தெரிவித்தார்.
 
கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அங்கப்பா பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் 830 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது என்றும் தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் திருத்தம் மற்றும் தயாரிப்பில் உரிய முனைப்பும் நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை இது காட்டுகிறது என்றும் அண்ணாமலை குற்றம் சாட்டினார்.
 
ஒரு பாராளுமன்ற தொகுதியின் ஒரே இடத்தில் இருந்து 830 வாக்காளர்களின் பெயர்கள் எந்த அடிப்படையில் நீக்கப்பட்டு உள்ளது என்பது கேள்விக்குறியாக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.  எனவே, இந்த வாக்கு சாவடி மையத்தில் மறு தேர்தல் நடத்த வேண்டும் என கோரிக்கை வைப்பதாக குறிப்பிட்ட அண்ணாமலை, தேர்தல் ஆணையம் முதியோர்களுக்கான போக்குவரத்து வாகன ஏற்பாடு செய்வதிலும் சுணக்கம் காட்டியுள்ளது என்றும் விமர்சித்தார். 
 
வாக்காளர் பட்டியலில் பெயர் மொத்தமாக நீக்கப்பட்டது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரிடம் கேட்டபோது எந்த பதிலும் கிடைக்கவில்லை என்று அவர் குற்றம் சாட்டினார்.  இதுபோல், ஒவ்வொரு பூத்திலும் 20 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது என்றும் பாரம்பரிய பாஜக தொண்டர்களின் வாக்குரிமை ஆங்காங்கே மறுக்கப்பட்டுள்ளது என்றும் அண்ணாமலை புகார் தெரிவித்தார்.
 
இந்த முறைகேடுகள் குறித்து அறிக்கை தயாரித்து ஆவணமாக கொடுக்க உள்ளதாகவும், வாக்காளர் பட்டியல் தயாரிப்பதில் தேர்தல் ஆணையம் சரியாக செயல்படவில்லை என்பதை இது காட்டுகிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

 
பெயர் அளவிற்கு தேர்தல் பட்டியலுக்கான பணிகளை தேர்தல் ஆணையம் செய்திருப்பதாக விமர்சித்துள்ள அண்ணாமலை,  நேரடியாக ஒவ்வொருவரின் வீட்டிற்கு சென்று வாக்காளர்களின் பெயரை ஆய்வு செய்து பட்டியல் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் கூறினார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நிறைவு..! சென்னையில் வாக்குப்பதிவு மந்தம்..!!