Publish Date: Mon, 02 Mar 2020 (18:24 IST)
Updated Date: Mon, 02 Mar 2020 (18:27 IST)
தமிழ் சினிமாவில் திறமை வாய்ந்த நடிகைகள் மட்டுமே நீண்ட நாட்கள் நீடித்திருக்கமுடியும். அதில் மிக முக்கியமானவர் நடிகை ஜோதிகா. பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தின்மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அடியெடுத்து வைத்த ஜோதிகா பின்னர் தொடர்ச்சியாக விஜய் , சூர்யா , அஜித் , விக்ரம் என அடுத்தடுத்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து 2000ம் காலக்கட்டங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
அதனை அடுத்து சூர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட அவர் சில வருடங்கள் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தார். பின்னர் நீண்ட இடைவெளியிக்கு பிறகு 36 வயதினிலே படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்த அவர் நாச்சியார் , காற்றின் மொழி , என கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வந்தார். கடைசியாக இவரது நடிப்பில் வெளிவந்த ராட்சசி படம் நல்ல வரவேற்பை பெற்றது.
அதையடுத்து தற்போது மீண்டும் கணவர் சூர்யாவே தயாரிப்பில் ஜெ.ஜெ.பெட்ரிக் இயக்கும் பொன்மகள் வந்தாள் படத்தில் நடித்து வருகிறார். 96 பட புகழ் கோவிந்த் வசந்தா இப்படத்திற்கு இசையமைதுள்ளார். இந்நிலையில் சற்றுமுன் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வழக்கறிஞராக ஜோதிகா நடிக்கும் இப்படம் வருகிற மார்ச் 27ம் தேதி உலகம் முழுக்க வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.