விஜய் டிவியில் பொங்கல் தின சிறப்பு நிகழ்ச்சிகள்
, திங்கள், 12 ஜனவரி 2009 (15:56 IST)
பொங்கல் திருநாளை முன்னிட்டு விஜய் டிவி இரண்டு நாட்களுக்கு சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறது.
ஜனவரி 14ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு, தரிசனம், மங்கள இசை, அருளுரையுடன் துவங்குகிறது சிறப்பு நிகழ்ச்சிகள். காலை 7:30 மணிக்கு 'சிவகுமாரின் டைரி' நிகழ்ச்சியில், நடிகர் சிவகுமார் தனக்கேயுரிய பாணியில் தனது கலை வாழ்க்கை, லட்சிய வாழ்க்கை என பல்வேறு நிகழ்வுகளை நேயர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.
காலை 9 மணிக்கு இதயம் மந்த்ரா காஃபி வித் அனுவில் இயக்குனர் சிகரம் பாரதிராஜா பங்குபெறும் என் இனிய தமிழ் மக்களே. இதில் தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு சிம்மாசனம் ஏற்படுத்தி அதில் மகுடம் சூட்டி சுமார் 15 ஆண்டுகளாக வெற்றிக்கொடி கட்டி ஆட்சிப்புறியும் இவர் அனு கேட்கும் பல கேள்விகளுக்கு மிகவும் சுவாரஸ்யமாக பேசுகிறார்.
காலை 10 மணிக்கு நடிகர் விஜய் பங்குபெறும் வில்லுக்கு விஜய் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். இதோடு, வில்லு திரைப்படத்திலிருந்து நான்கு பாடல்களுக்கு பல பிரபலங்கள் விஜய்யின் முன்னிலையில் நடனமாடுகின்றனர்.
பகல் 12 மணிக்கு நயன்தாராவின் பேட்டியும், மதியம் 1 மணிக்கு சேரனின் பொக்கிஷம் நிகழ்ச்சி இடம்பெறும். சேரன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில், பிரபலங்களான சத்யராஜ், சிவக்குமார், யூகி சேது, இசையமைப்பாளர் தேவா, எழுத்தாளர் கனிமொழி மற்றும் பலர் பங்குபெறுகிறார்கள்.
மதியம் 2 மணிக்கு 'தி டரான்ஸ்போர்டர்' திரைப்படம் தமிழில் ஒளிபரப்பாகிறது. மாலை 5 மணிக்கு பொங்கலன்று திரைக்கு வரும் புதுப் படங்களிலிருந்து பாடல்கள் இடம்பெறும். மாலை 5:30 மணிக்கு மிஷ்கிண் இயக்கத்தில் திரைக்கு வரவிருக்கும் 'நந்தலாலா' திரைப்படத்தைப் பற்றிய ஒரு சிறப்பு கண்ணோட்டம் இடம்பெறும்.