சினிமாவை மட்டும் சார்ந்து இயங்காமல் நல்ல தமிழில், பல பயனுள்ள நிகழ்ச்சிகளை வழங்கி வரும் மக்கள் தொலைக்காட்சி, இந்த ஆண்டு முதல் மக்கள் விருதுகள் எனும் விருதுகளை வழங்கவுள்ளது. தமிழ் தொலைக்காட்சிகளில் பொழுதுபோக்கிற்காக மட்டும் அல்லாமல் மக்களுக்கு பயன்படும் வகையில் வித்தியாசமான நிகழ்ச்சிகளை அளித்து வருகிறது மக்கள் தொலைக்காட்சி.
'மண்பயனுற வேண்டும்' என்ற முழக்கத்தோடு தொடங்கப்பட்ட இந்த மக்கள் தொலைக்காட்சி, இப்போது மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இந்நிலையில் மக்கள் தொலைக்காட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியதாவது, உலகமெங்கும் உள்ள சாதனைத் தமிழர்களை அடையாளங்கண்டு பாராட்டும் விதமாக மக்கள் விருதுகளை வழங்க திட்டமிட்டுள்ளோம். அதன்படி 2008ம் ஆண்டின் தமிழகத்தின் 31 துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு "மக்கள் விருது" வழங்கி சிறப்பிக்க உள்ளோம்.
சிறந்த நாளிதழ், கல்லூரி, சிற்பி, வார இதழ், இசையறிஞர், பதிப்பகம், நாடகம், விவசாயி, சிற்றிதழ், நாடகவியலாளர், அறிவியலாளர், எழுத்தாளர், திரைப்படம், இளம் விஞ்ஞானி, சிறந்த தமிழ்ப் பணி, குறும்படம், வணிகவியலாளர், கல்வியாளர், ஆவணப் படம், மருத்துவர், சிறந்த பள்ளி, ஓவியர், சுற்றுச் சூழலியலாளர், சுய உதவிக் குழு, முன் மாதிரி கிராமம், விளையாட்டு வீரர், மாற்று திறனாளர், மழலை மேதை, மக்கள் பணியாளர், சிறந்த குடிமகன், தமிழரல்லாத தமிழ்ப் பணியாளர் போன்ற துறைகளில் விருதுபெறும் 31 பேரை தேர்வு செய்ய 20 பேர் கொண்ட குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டு தேடல் பணி நடைபெற்றது.
விருதுகள் வழங்க உள்ள துறையின் வித்தகர்களைக் கொண்டு பெயர்கள் சேகரிக்கப்பட்டன.
மக்கள் விருது 2008க்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த 32 பேருக்கு வரும் 12ம் தேதி சென்னை ராஜா அண்ணாமலைபுரம் செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியில் நடைபெறும் விழாவில் விருதுகள் வழங்கப்படுகின்றன.
மத்திய மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் இந்த விருதுகளை வழங்குகிறார்.