அரசு கேபிள் டி.வி.யின் சேவை முதற்கட்டமாக தஞ்சையில் நாளை தொடங்கப்படுகிறது. அரசு கேபிள் டிவியில் தற்காலிகமாக 60 அலைவரிசைகள் ஒளிபரப்பு செய்யப்படும். இது படிப்படியாக உயர்த்தப்படும் என்று அரசு கேபிள் டி.வி. கழகத்தின் தலைவர் பிரிஜேஸ்வர்சிங் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு சார்பில் அரசு கேபிள் டி.வி. கழகம் தொடங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் குறைந்த கட்டணத்தில் மக்களுக்கு கேபிள் டி.வி. இணைப்பு வழங்கப்படுகிறது. இதற்காக முதல் கட்டமாக தஞ்சை, கோவை, நெல்லை, வேலூர் ஆகிய 4 இடங்களில் கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
இதில் முதல் கட்டமாக தஞ்சையில் செவ்வாய்க்கிழமை முதல் அரசு கேபிள் டி.வி. சேவை தொடங்கப்படுகிறது. இதனை முதலமைச்சர் கருணாநிதி தொடங்கி வைக்கிறார்.
அரசு கேபிள் டி.வி. கழகத்தின் தலைவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி பிரிஜேஸ்வர்சிங் பேசுகையில், தஞ்சையில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு மையம் மூலம் தஞ்சை, நாகை, திருச்சி, திருவாரூர் ஆகிய இடங்களில் ஒளிபரப்பு செய்யப்படும். இதற்கு கட்டணம் அதிக பட்சமாக ரூ.100 வரை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
முதல் கட்டமாக நாளை 60 சேனல்கள் ஒளிபரப்பு செய்யப்படும். பின்னர் படிப்படியாக 70 சேனல்கள் வரை உயர்த்தப்படும். உள்ளூர் சேனல்கள் ஒளிபரப்பு செய்வது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என்று கூறினார்.