சென்னையில் அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் சேவை செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கும் என்று தமிழ்நாடு கேபிள் டி.வி. உரிமையாளர் சங்க தலைவர் ஆர்.எஸ்.காயல் இளவரசு கூறினார்.
இது குறித்து காயல் இளவரசு பேசுகையில், சென்னையில் அரசு கேபிள் டி.வி. சேவை செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கும். கட்டண சேனல்களுக்கு எவ்வளவு தொகை செலுத்தப்படவேண்டும் என்பது பற்றி இறுதி முடிவு இதுவரை எடுக்கப்படவில்லை.
அரசு கேபிள் டி.வி. மாதம் ரூ.40 கட்டணம் வசூல்செய்யும் என்று சிலர் தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள். இப்போது உள்ள கட்டணத்தை விட குறைவாகவே அரசு கேபிள் டி.வி. கட்டணம் இருக்கும். அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷனில் எவ்வளவு கட்டணம் என்பதை தமிழக அரசு நிர்ணயம் செய்யும் என்றார்.
டி.டி.எச். நிறுவனத்திற்கு மற்ற மாநிலங்களைபோல கேளிக்கை வரி, ஆடம்பர வரி விதிக்க வேண்டும் என்று கூறிய காயல் இளவரசு, மதுரையில் எந்த சேனலையும் இருட்டடிப்பு செய்யவில்லை என்றும் சன் குழுமம் நிகழ்ச்சிகளை அவர்களே கொடுக்க மறுப்பதால் தான் அந்த பகுதியில் சன் குழும நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுவது இல்லை. அதுவும் டிராய் அமைப்பு மூலம் பெறப்பட்டு விரைவில் வழங்கப்படும் என்றார்.