விஜய் டி.வி.யின் கனா காணும் காலங்கள் தொடருக்கு புதிய முகங்கள் தேடும் பலடம் தொடங்கி உள்ளது.
பள்ளிப் பருவத்தை சின்னத்திரையில் காண்பித்து வெற்றி கண்டுள்ள கனா காணும் காலங்கள் தொடரில் நடித்து வரும் பச்சை, பாண்டி, ராகவி, உன்னி ஆகியோர் இப்போது 12-ம் வகுப்பு படித்து வருகிறார்கள். பள்ளிப் படிப்பை முடிக்கும் இவர்கள், மேற்படிப்பை தொடர உள்ளனர். 11-ம் வகுப்பு படிக்கும் ராக்கி, கிரண், ப்ரியா, மிண்டு ஆகியோர் 12-ம் வகுப்பிற்கு முன்னேற, 11-ம் வகுப்பிற்கு புதிய முகங்கள் தேடும் படலத்தில் இருக்கிறது, விஜய் டி.வி.
இன்று சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள குமாரராஜா முத்தையா ஹாலில் நேர்முக தேர்வு நடைபெறுகிறது. இதில் சென்னையை சேர்ந்தவர்கள் பங்கு பெறலாம். நேர்முகத் தேர்வில் பங்குபெறும் முதல் 500 நபர்களுக்கு நடிக்கும் வாய்ப்பு உண்டு.
மேலும் இதில் பங்குபெறும் நட்சத்திரங்கள் தங்களின் நடிப்பு திறமையை நிரூபிக்க வெவ்வேறு மாறு வேடங்களில் வந்து நிரூபிக்கலாம். இவர்களின் நடிப்பு திறனை தேர்வு செய்ய சின்னத்திரை நடிகர்கள் வர உள்ளனர். நடிகை சுஹாசினி நடுவராக இருந்து 11-ம் வகுப்பு மாணவர்களை தேர்வு செய்ய உள்ளார்.
சென்னையில் நடைபெறும் இந்த நேர்முகத் தேர்வு தொடர்ந்து, கோவை, திருச்சி மற்றும் திருநெல்வேலி ஆகிய ஊர்களிலும் நடைபெற உள்ளது.