உலகப் புகழ்பெற்ற இதிகாசங்களில் ஒன்றான ராமாயணம் புதிய தொழில்நுட்ப அமைப்புகளுடன் சன் டிவியில் தமிழில் ஒளிபரப்பாகிறது.
1950ஆம் ஆண்டு நிறுவப்பட்ட சாகர் ஆர்ட்ஸ் நிறுவனம்தான் ஏற்கனவே ராமாயணத்தை தொடராக எடுத்து பெரும் வரவேற்பைப் பெற்றது.
அதே நிறுவனம்தான் ராமாயணத்தை மீண்டும் தற்போதைய நவீன தொழில்நுட்பத்துடன் படமாக்கி தமிழில் வெளியிட உள்ளது.
அயோத்தியில் அரச குடும்பத்தில் பிறக்கும் ராமர் வனவாசம் சென்று அங்கு பல்வேறு சிக்கல்களை சந்தித்து பின்னர் சீதையை மீட்டு அயோத்திக்குத் திரும்பும் வரை ராமாயணத்தின் அனைத்து முக்கிய அம்சங்களும் தொடராக்கப்பட்டுள்ளது.
இதற்காக பரோடாவில் உள்ள சாகர் பிலிம் சிட்டியில் அயோத்தி நகரின் பிரம்மாண்ட தெருக்கள், மாட மாளிகைகள், அரண்மனைகள் போன்ற செட்கள் ஏராளமான பொருட்செலவில் அமைக்கப்பட்டு படமாக்கப்படுகின்றன.
யூ டிவி நிறுவனம் வழங்கும் இத்தொடர் சன் டிவியில் வரும் 16ஆம் தேதி முதல் ஞாயிறு தோறும் காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை ஒளிபரப்பாகும்.