பெரம்பலூரில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 84-வது பிறந்தநாளை நேரடி ஒளிபரப்பு செய்த ராஜ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பொதுமக்கள் பார்க்க முடியாதபடி பெரம்பலூர் நகரத் தனியார் கம்பிவடத் தொலைக்காட்சி நிறுவனத்தினர் நிறுத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டன. இதனால் தி.மு.க.வினர் கடும் ஆத்திரத்தில் உள்ளனர்.
திமுகவிற்கும், சன் டிவியை நிர்வகிக்கும் குடும்பத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து, தி.மு.கவினர் பார்வை ராஜ் தொலைக்காட்சியின் பக்கம் திரும்பியுள்ளது. நேற்று முன் நாள் கலைஞரின் 84-ஆவது பிறந்த நாள் விழா நேரடி ஒளிபரப்பு ராஜ் தொலைக் காட்சி செய்தது.
பெரம்பலூரில் உள்ள பொதுமக்களும், தி.மு.க.வினரும் ஆவலுடன் தொலைக்காட்சி முன் உட்கார்ந்து ராஜ் தொலைக்காட்சியைத் தேடினார்கள். ஆனால் அதற்கான பொத்தானை அழுத்தியதும், தொலைக்காட்சிப் பெட்டியில் வெறும் புள்ளிகள் மட்டுமே தெரிந்தன.
மற்ற அலைவரிசைகள் அனைத்தும் தெளிவாகத் தெரிந்தன. முதல்வரின் பிறந்தநாளைத் தி.மு.க.வினரும், பொதுமக்களும் கண்டுகளிக்கக் கூடாது என்ற நோக்கத்துடன் தனியார் கம்பி வட நிறுவனம் தடை செய்ததைக் கண்டறிந்த தி.மு.கவினரும், பொதுமக்களும் பெரும் ஆத்திரம் அடைந்தனர்.