Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழக–ஆந்திர எல்லையில் அழகிய நீர் வீழ்ச்சி!

Advertiesment
தமிழக–ஆந்திர எல்லையில் அழகிய நீர் வீழ்ச்சி!
, செவ்வாய், 18 மார்ச் 2008 (10:45 IST)
webdunia photoWD
தமிழ்நாடு - ஆந்திரா எல்லைப் பகுதியில் உள்ள வரதய்யா பாளயம் அருகே அற்புதமான ஒரு சிறு நீர்வீழ்ச்சி உள்ளது. தீவிர சுற்றுலா விரும்பிகள் மட்டுமே அறிந்த இடமாக இருந்தாலும் அனைவராலும் ரசிக்கக் கூடியது.

தமிழ்நாடு - ஆந்திர எல்லையில், நெல்லூர் மாவட்டத்தில் தடாவைத் தாண்டியதும் தெற்காகத் திரும்பும் ஸ்ரீ காளஹஸ்த்தி செல்லும் சாலையில் 11 கி.மீ சென்றால் வரதய்யா பாளையத்தை அடையலாம்.

அங்கிருந்து சிறிது தூரம் சென்றால் மீண்டும் தெற்காக ஒரு சிறிய சாலை பிரியும். ஜப்பலமடுவு நீர்வீழ்ச்சி எங்கு என்று அங்கிருப்பவர்களைக் கேட்டால் வழி சொல்வார்கள். (அதன் உண்மையானப் பெயர் உப்பலமடுவு நீர்வீழ்ச்சி. ஆனால் தடா நீர்வீழ்ச்சி என்று அறியப்பட்டுள்ளது).

ஜப்பலமடுவு நீர்வீழ்ச்சிக்குச் செல்லும் சாலை (10 கி.மீ. தூரம்) கரடு முரடாக இருக்கும். பாதி தூரத்திற்கு சரளைக் கற்களால் நிறம்பிய பாதைதான். அதன்பிறகு மண் பாதை, சிறிது தூரத்திற்கு கூழாங்கல் நிறைந்த மிக்க் கடினமான பாதை. எனவே எந்த வாகனத்தில் சென்றாலும் மிக எச்சரிக்கையுடன் செல்வது நல்லது.

கண்ணிற்கு எட்டியவரை நீண்ட பாதை மட்டுமே தெரியும். சாலை என்று அழைக்கப்படும் சிறு சிறு பாறைகள் நிறைந்த அந்த பாதைக்கு இரு மருங்கிலும் விதவிதமான செடிகளும், மரங்களும், கொடிகளும் படர்ந்திருக்கும்.

அப்படியே ஒரு சில கிலோ மீட்டர்கள் பயணித்தால் அந்த சாலை ஓரிடத்தில் முடிவுக்கு வரும். நீங்கள் நான்கு சக்கர வாகனத்தில் சென்றிருந்தால் வேறு வழியே இல்லை. அங்கேயே வாகனத்தை நிறுத்திவிட்டு ஒரு சிறு ஓடையைக் (அந்த நீர்வீழ்ச்சிதான் ஓடையாக) கடந்து நடந்து செல்ல வேண்டும்.

ஒரு வேளை இருசக்கர வாகனத்தில் சென்றால் அந்த ஓடையில் உங்கள் வண்டியை இறக்கி தள்ளிக் கொண்டு சென்று பின்னர் ஓட்டிக் கொண்டு செல்லலாம். ஏனெனில் அது ஒத்தையடிப் பாதை.

நீங்கள் நடந்தாலும் சரி, வாகனத்தில் சென்றாலும் சரி சரியாக 5 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டும். இந்த சுற்றுலாத் தலம் குழந்தைகள், முதியவர்களுக்கானது அல்ல. ஏனெனில் இத்தனை தூரம் அதுவும் கரடுமுரடான பாதையில் நடப்பது இவ்விருவருக்குமே சற்று சிரமமான காரியம்.

நடப்பது வேண்டுமானால் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும் என்று நினைக்கலாம், ஆனால் அவ்வாறு இல்லை, இரு மருங்கிலும் இருக்கும் விதவிதமான செடிகளையும், நடுநடுவே ஓடும் ஓடைகளையும் தாண்டிச் செல்கையில் எந்த வலியும் தெரியாது.

5 கிலோ மீட்டர் தூரத்தில் நீங்கள் நீர்வீழ்ச்சியின் முக்கியமானதொரு இடத்தை அடையலாம். சுற்றிலும் மலைகள் சூழ்ந்து, அடர்ந்த மரங்களுக்கு இடையே அந்த நதியின் ஓரத்தில் உள்ள இடம்தான் ஜப்பலமடுவு. தடா நீர்வீழ்ச்சியில் இருந்து வரும் ஒரு பெரிய ஓடையை காணலாம். அங்கு ஆள் மூழ்கும் ஆழத்திற்கு நீர் இருக்கும். குதித்தும், நீந்தியும், ஆடியும், பாடியும் மகிழலாம். உடலுக்கும், மனதிற்கும் சக்தியை ஏற்றிக் கொண்டு தடா நீர்வீழ்ச்சியைக் காண ஆயத்தமாக வேண்டும்.

2 கிலோ மீட்டர் தூரம் இந்த பயணம் அமையும். இதை மட்டும் நீங்கள் அடைந்துவிட்டால் போதும்.... பூமியில் இருக்கும் அந்த சொர்கத்தை நீங்கள் காணலாம். மலையின் உச்சியில் இருந்து தண்ணீர் அருவியாகக் கொட்டிக் கொண்டிருக்கும். அங்கு நீங்கள் தண்ணீரில் ஆட்டம் போடலாம். நீச்சலடித்து மகிழலாம், ஆனந்தக் குளியல் போடலாம்.

webdunia
webdunia photoWD
மலையின் உச்சயில் இருந்து கண்ணாடி போன்ற கற்களை சல்லென தழுவிக் கொள்ள அருவி மகள் கொட்டுவதையும், அங்கே சூழ்ந்திருக்கும் பாறைகள் அவளை ஏந்திக் கொள்வதையும் காணக் கண் கோடி வேண்டும்.

webdunia
webdunia photoWD
எந்த கலப்படமும் இன்றி மலையின் மூலிகைகளை மட்டுமே தன்னகத்தேக் கொண்டு அருவியில் கொட்டும் அந்த நீரின் தூய்மைக்கு அளவுகோலும் உண்டோ. சுத்தமான நீர் என்பதால் எந்த பயமும் தேவையில்லை. ஆனால் பாறைகளில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

வாரம் முழுவதும் அலைந்து திரிந்து உழைப்பவர்கள் இந்த ஒடையில் (அப்பகுதியில் உள்ள 40 கிராமங்களுக்கு இதுதான் குடிநீர் அளிக்கிறது) குளித்தால் உடல் அசதி விலகும். உடலும், மனமும் புத்துணர்ச்சி பெறும்.
அனுபவிப்போம் என்று நினைத்துக்கொண்டு எக்காரணம் கொண்டும் அங்கு மது அருந்தாதீர்கள். போதையில் அந்த அமைதியான சூழலை உங்களால் அனுபவிக்க முடியாமல் போய்விடும்.

அந்த அருவிக்கு சற்று முன் ஒரு மரத்தடியில் சிவ லிங்கம் ஒன்று இருக்கும். மிக சக்தி வாய்ந்த இடமாகும். சித்திரை பெளர்ணமி தினத்தன்று அங்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து அந்த லிங்கத்தை வணங்கி விட்டுச் செல்வார்கள்.

இவ்விடம் ஸ்ரீ காளஹஸ்தி என்றழைக்கப்படும் சிவபெருமானின் புண்ணியத் தலத்திற்கு அருகிலுள்ளது. எனவே இவ்விடத்தை தென்னாட்டில் உள்ள மிகப் பெரிய தபோ வனம் என்று கூறுவார்கள். எனவே தூய்மையுடன் இருப்பது சிறந்தது.

இங்கு என்னற்ற மூலிகைச் செடிகளும், சில பறவையினங்களும், சிறு சிறு பூச்சிகளும், வண்டினங்களும் உள்ளன. இரவு தங்குபவர்கள் காட்டின் அற்புத ராகங்களையெல்லாம் காசு கொடுக்காமல் கேட்கலாம். இங்கு பொழுது விடிவதைக் காண்பது தனி அனுபவம், சுகம்.

குடும்பம், நண்பர்களோடு செல்பவர்கள் எவ்வளவு ஆட்டம் போட்டாலும் சரி மாலை 3 மணிக்கெல்லாம் அங்கிருந்து கிளம்பிவிடுவது நல்லது. அப்போதுதான் இருட்டுவதற்குள் நீங்கள் வனப்பகுதியை கடந்து நகர்ப்பகுதிக்கு வந்து விட முடியும்.

கொஞ்சம் சிரமமான பயணம்தான் என்றாலும், வாழ்வில் எப்போதும் மறக்க முடியாத அனுபவத்தைத் தரும் இந்த தடா நீர்வீழ்ச்சி.

முக்கியமான தகவல்

15 வயதுக்கு மேல் 50 வயதுக்குள் இருப்பவர்கள் மட்டுமே இங்கு செல்வது நல்லது.

காலை 6 அ‌ல்லது 7 ம‌ணி‌க்கெ‌ல்லா‌ம் ‌நீ‌ங்க‌ள் செ‌ன்னை‌யி‌ல் இரு‌ந்து புற‌ப்ப‌ட்டு‌விட வே‌ண்டு‌ம். அ‌ங்கு எ‌ந்த‌விதமான கடைகளு‌ம் இரு‌க்காது. எனவே உணவு‌ப் பொரு‌ட்களை ‌நீ‌ங்களே எடு‌த்து‌ச் செ‌ல்வது ந‌ல்லது.

webdunia
webdunia photoWD
தடா நீர்வீழ்ச்சியைக் காணச் செல்பவர்கள் அதிக கனமானப் பொருட்களை எடுத்துச் செல்வதைத் தவிர்க்கலாம். உணவு, தேவையான அளவு குடிநீர், முதல் உதவிப் பொருட்கள், மாற்றிக் கொள்ள எளிதான உடை மட்டுமேப் போதும். ஏனெனில் அவ்வளவு தூரம் சுமந்து செல்ல வேண்டியது நீங்கள்தான். எனவே சுமையைக் குறைத்துக் கொள்ளுங்கள்.

எப்போது, எவ்வாறு செல்லலாம்?

பொதுவாக மழைக் காலம் முடிந்து கோடைக் காலம் துவங்கும்போது இங்கு செல்வது உகந்தது. ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகியவை ஏற்ற மாதங்களாகும்.

சொந்த வாகனத்தில் மட்டுமே செல்ல வேண்டும். வேறு வழியே இல்லை.

தடா நீர்வீழ்ச்சி செல்லுங்கள்... மனதை விட்டு என்றென்றும் நீங்காத பசுமையான காட்சிகளை அள்ளிக் கொண்டு வாருங்கள்.


Share this Story:

Follow Webdunia tamil