எழில்மிகு வெஸ்டர்ன் கேட்ச்மென்ட் - 1
Publish Date: Sat, 08 Sep 2007 (15:18 IST)
Updated Date: Sat, 08 Sep 2007 (15:17 IST)
நீலமலை என்றும், மலைகளின் அரசி என்றும் புகழப்படும் மேற்குத் தொடர்ச்சி மலையின் தமிழகக் - கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ள அழகிய மற்றொரு வனப்பகுதியே வெஸ்டர்ன் கேட்ச்மென்ட்-1.
|
| webdunia photo | K. AYYANATHAN | |
|
ஊட்டியில் இருந்து பார்சன் வேலி என்று அழைக்கப்படும் தமிழக மின்வாரியம் அமைத்துள்ள நீர் மின் நிலையத்திற்காக கட்டப்பட்டுள்ள பார்சன் அணைக்கட்டுப் பகுதியில் இருந்து முக்குறுத்தி காட்டுப் பகுதிக்குள் செல்லும் பாதையில் (வனத்துறையினரின் சிறப்பு அனுமதி பெற்று) ஒரு 10, 15 கி.மீ. சென்றால் அதன் முடிவில் நாம் எழில் கொஞ்சும் மலைத் தொடரையும், எப்போதும் சாரலும் மழையுமாக இருக்கும் மிகக் குளிர்ந்த பிரதேசத்தை அடைவோம். இதுவே வெஸ்டர்ட்ன கேட்ச்மென்ட்-1.போகும் வழியில் இரு பக்கத்திலும் விண்ணுயர்ந்த மலைகள். சூரிய ஒளியில் பட்டு மிளிரும் சிகரங்கள். கீழே ஆங்காங்கு கட்டப்பட்டுள்ள அணைக்கட்டுகளில் ஓவிய வடிவமாய் தேங்கி நிற்கும் நீர் பரப்புக்கள். தரைகளில் ஊசியிலைக் காடுகளை ஒத்து இருக்கும் உயர்ந்த வளர்ந்த மரங்கள். இடையிடையே பச்சைக் கம்பளம் விரித்தது போன்ற புல் வெளிகள். நாம், வாழ்க்கையில் காணாத நறுமணம் வீசும் தாவரங்கள், மூலிகைச் செடிகள் என்று எங்கு நோக்கினும் அழகு அழகு. அள்ள முடியாமல் கொட்டிக் கிடக்கும் இயற்கையின் பேரழகு.பொதுவாக இப்பகுதியை நன்கு கண்டுகளிக்க வேண்டுமெனில் (பாருங்கள் புகைப்படத் தொகுப்பை) 10 பேர் குழுவாக அதற்கென்றே உள்ள பாதையில் நடந்து செல்ல வேண்டும் (டிரக்கிங்). இதற்கான ஏற்பாடுகளை ஊட்டியில் உள்ள சில அமைப்புக்கள் செய்து தருகின்றன.
|
| webdunia photo | K. AYYANATHAN | |
|
பார்சன் வேலி அணைக்கட்டு மிக அழகான பகுதியாகும். இந்த அணைப் பகுதியில் மட்டும் அரை நாளைக் கழிக்கலாம். காஷ்மீரைப் போல் இருக்கும் பகுதி இது. அதனால்தான் ரோஜா படத்தின் கதாநாயகன் தீவிரவாதியின் பிடியில் இருந்து விடுபட்டு இந்தியப் பகுதிக்குள் ஓடி வரும் காட்சி இங்கு படம்பிடிக்கப்பட்டது.
|
| webdunia photo | K. AYYANATHAN | |
|
சற்று உள்ளே செல்லுங்கள். மலை முகட்டில் இருந்து கீழே பார்த்தால் பார்சன் வேலி மின் நிலையம் தெரியும். செக்கோஸ்லாவாகிய நாட்டின் தொழில்நுட்ப உதவியுடன் உருவாக்கப்பட்ட சத்தம் போடாத டர்பைன் மூலம் மின் உற்பத்தி செய்யும் மின் நிலையம் இது. பார்சன் வேலியில் இருந்து வரக்கூடிய தண்ணீரைக் கொண்டு இயங்கும் இந்த மின் நிலையத்தில் இருந்து வெளியேறும் தண்ணீர், அங்கிருந்து எமரால்ட் எனும் மற்றொரு அணைக்குச் செல்கிறது.எமரால்ட் அணைப் பகுதியும், கொஞ்ச தூரம் சென்றால் அவலாஞ்சி அணைப் பகுதியும் நெஞ்சில் நீங்காத இயற்கை காட்சிகளுடன் அமைந்துள்ளதைக் காணலாம்.
|
| webdunia photo | K. AYYANATHAN | |
|
இப்பகுதியில் யானைகள் உள்ளிட்ட விலங்குகளின் நடமாட்டம் மிக அதிகம். தப்பித்துச் செல்வதற்கெல்லாம் இடமில்லை. அதனால் உங்களது விதியையும், அதிர்ஷ்டத்தையும் நம்பித்தான் செல்ல வேண்டும். சிறுத்தைகள், புலிகள், நாயைப் போலவேக் குரைத்து நாயை அடித்து சாப்பிடும் ஒரு வகை சிறுத்தையும் இங்கு உண்டு. பயங்கர செந்நாய் கூட்டத்தையும் காணலாம். காட்டுக் கோழியைக் கண்டால் அசந்து விடுவீர்கள். அதன் மீது அத்தனை வண்ணங்கள். அதனையும் மிஞ்சம் அழகுடன் சேவல்.
காலையில் புறப்பட்டுச் சென்று மாலை முடிவதற்குள் வந்து விடுங்கள். பாதுகாப்பானது.
வாழ்க்கையில் கண்ணாறக் காண வேண்டிய இடங்களில் வெஸ்டர்ன் கேட்ச்மென்ட் 1ம் முக்கியமானது.
Webdunia
Publish Date: Sat, 08 Sep 2007 (15:18 IST)
Updated Date: Sat, 08 Sep 2007 (15:17 IST)