தாய், தந்தைக்காக ஊடல், கூடல், ஆடல் போன்றவையும், தாத்தா பாட்டிக்கு என ஆன்மீகச் சிற்பங்களும் இடம்பெற்றிருக்கின்றன.இந்த கோயிலைப் பற்றி நிறையச் செய்திகள் சொல்லப்படுகிறது. இவை எல்லாம் பார்க்க முடிந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.அதாவது, கோயிலில் மூன்று பிரிவுகளாகப் பிரித்து அதன் அமைப்பு இருந்துள்ளது. அதன்படி ஒவ்வொரு 4 மாதத்திலும் ஒவ்வொரு பிரிவின் வழியாக சூரிய ஒளி சூரியநார் சிலை மீது படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. நாழிகை, நேரத்தை துல்லியமாகக் கணக்கிடும் வகையில் இதன் அமைப்பு இருந்துள்ளது.பெரும்பாலும் சிதிலமடைந்து, தன் தனித்தன்மையை இழந்து கொண்டிருக்கும் இந்த கோயிலை இந்த நிலையிலேயாவது நிலைநிறுத்தி எதிர்கால சந்ததிகளுக்கு காட்டும் வகையில், உலகப் பாரம்பரிய சின்னமாக அறிவித்து பராமரித்து வருகிறது யுனெஸ்கோ.கோனார்க் சூரியக் கோயிலைக் காணச் செல்வது என்று முடிவெடுத்துவிட்டால் குறைந்தபட்சம் ஒரு நாள் முழுவதையும் அங்கேயே கழிக்கும் வகையில் திட்டமிட்டுச் செல்லுங்கள்.
அங்குள்ள நல்ல வழிகாட்டி ஒருவரை கட்டாயம் உடன் அழைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் கோனார்க் கோயிலில் புதைந்து கிடக்கும் அரிய கலைகள் பற்றி அவர்கள் எடுத்துரைப்பார்கள்.
இந்த பாரம்பரிய இடத்திற்குச் செல்லவதற்கு நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதாவது இந்தியர்கள் மற்றும் சார்க் உறுப்பு நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு ரூ.10 கட்டணம். மற்ற நாட்டவர்களுக்கு ரூ.250 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கட்டணமில்லை.
எப்படிச் செல்வது?
சாலை மார்கம் : ஒரிசா மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் இருந்து தேசிய நெடுஞ்சாலைகள் கோனார்க்கை இணைக்கின்றன. பூரி, புவனேஸ்வர், பிப்லி போன்ற பல நகரங்களில் இருந்து பேருந்துகள் மூலமாகவோ, சொந்த வாகனம் மூலமாகவோ கோனார்க் செல்லலாம்.
ரயில் மார்கம் : பூரி ரயில் நிலையத்தில் இருந்து 31 கி.மீ. தொலைவிலும், புவனேஸ்வர் ரயில் நிலையத்தில் இருந்து 64 கி.மீ. தொலைவிலும் கோனார்க் உள்ளது.
விமான மார்கம் : புவனேஸ்வர் விமான நிலையத்தில் இருந்து 64 கி.மீ. தொலைவில் கோனார்க் உள்ளது. சென்னை, டெல்லி, ஹைதராபாத், கொல்கட்டா, நாக்பூர் விமான நிலையங்களில் இருந்து புவனேஸ்வருக்கு நேரடி விமானங்கள் இயக்கப்படுகின்றன.