சென்னையை அடுத்துள்ள முதலியார்குப்பம் படகு குழாமில் 100 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் அதிவேக படகு அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இது குறித்து சென்னையில் சுற்றுலாத்துறை அமைச்சர் சுரேஷ்ராஜன் பேசுகையில், முட்டுக்காடு, முதலியார்குப்பம், ஏற்காடு, பிச்சாவரம், கொடைக்கானல், ஊட்டி, பைகாரா, குற்றாலம் ஆகிய இடங்களில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் படகு குழாம் வசதியை நடத்தி வருகிறது.
கிழக்கு கடற்கரை சாலையில் ரம்மியமான சூழலில் அமைந்துள்ள முதலியார்குப்பம் படகு குழாமியில் மேலும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் 60 குதிரைத்திறன் கொண்ட அதிவேக விசைப்படகு வாங்கப்பட்டுள்ளது.
இந்த அதிவேக படகு சவாரி துவக்க விழா 25-ந் தேதி மாலை 4.30 மணிக்கு நடைபெற உள்ளது. இந்தப் படகில் ஓட்டுபவரையும் சேர்த்து 4 பேர் பயணம் செய்யலாம். சவாரி செய்ய கண்டிப்பாக கவச உடை அணிய வேண்டும். அதிவேக படகில் பயணம் செய்ய கட்டணமாக ரூ.400 வசூலிக்கப்படும். பாதுகாப்பிற்காக நீச்சல் பயிற்சி பெற்ற உயிர்காப்பாளரும் மற்றொரு படகில் வருவார்கள்.