சென்னையை அடுத்து வேளச்சேரிக்கு செல்லும் முக்கிய சாலையில் அமைந்துள்ளது ஸ்ரீ தண்டீஸ்வரர் திருக்கோயிலாகும்.இந்த கோயிலின் மூல தெய்வம் தண்டீஸ்வரர் - கருணாம்பிகை அம்மன் ஆகும். இந்த கோயிலில் சுவர்களில் உள்ள கல்வெட்டுகளைக் கொண்டு இந்த கோயில் சோழர் காலத்திலேயே இருந்துள்ளது என்பது அறியப்படுகிறது.அதுமட்டுமல்லாமல், ராஜேந்திர சோழன், குலோத்துங்க சோழன், ராஜகேசரி வர்மனின் ஆட்சி காலத்திலும் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் இந்த கோயிலின் சுவற்றில் இடம்பெற்றுள்ளன.தல வரலாறு என்ன கூறுகிறதுநான்கு வேதங்களும் தங்கள் மீதிருந்த தோஷம் நீங்க ஈஸ்வரனை நோக்கி தவம் இருந்ததாகவும், அவர்களது தவத்திற்கு மனமுருகி ஈஸ்வரன் காட்சி தந்து வேதங்கள் மீதிருந்த தோஷத்தை போக்கியதாகவும் கூறப்படுகிறது. வேதங்கள் மீதான தோஷத்தைப் போக்க ஈஸ்வரனே காட்சி அளித்ததால் இந்த திருத்தலம் வேதஸ்ரேணி என்று பெயர் பெற்றது. இதுதான் நாளடைவில் மறுவி பெயரளவில் வேளச்சேரி என்று தற்போது அழைக்கப்படுகிறது.
திருக்கோயிலின் அமைப்பு
கோயிலின் ராஜ கோபுரம் தெற்கு நோக்கி அமைந்துள்ளது. ராஜகோபுரத்திற்குள் நுழைந்து உள்ளே சென்றால் வலது புறத்தில் வேத விநாயகர் அமைந்துள்ளார். அவரை வணங்கி விட்டு கருவறையை நோக்கி செல்லும் வழியில் இரு மருங்கிலும் விநாயகரும், முருகனும் வீற்றிருக்கின்றனர்.
அவர்களைக் கடந்து கருவறைக்குள் சென்றால் நம்மை பார்க்கும் விதமாக கருணாம்பிகை அம்மன் வீற்றிருப்பார். கிழக்கு நோக்கிய வண்ணம் மாணிக்க கல்லால் ஆன தண்டீஸ்வரர் அருள் பாலிக்கிறார். ஈஸ்வரனைப் பார்த்தபடி கருவறைக்கு வெளியே நந்தீஸ்வரர் அமர்ந்திருப்பார்.
திருக்கடையூரில் மார்க்கண்டேயனை காத்தருள எம் பெருமான் எமனின் தண்டத்தை பிடுங்கிக் கொண்டதாக புராணம் சொல்கிறது. இத்திருத்தலத்தில் எமனின் தண்டத்தை எம்பெருமான் கொண்டதால் தண்டீஸ்வரர் என்று திருப்பெயர் பெற்றார். இவர் சுயம்பு என்பது குறிப்பிடத்தக்கது.
தண்டத்தை வாங்க வந்த எமன் உள்ளே வராமல் தடுக்கும் வகையில் கோயிலின் மேற்கு புற வாசல் மூடப்பட்டது. அது இன்று வரை திறக்கப்படுவதே இல்லை என்கிறார்கள் அங்குள்ளவர்கள்.
ஈஸ்வரனையும் கருணாம்பிகை அம்மனையும் வழிபட்டு விட்டு உள்பிரகாரத்தில் வலது புறமாக சென்றால், விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான், சரஸ்வதி சந்நிதிகள் அமைந்துள்ளன. இக்கோயிலில் சரஸ்வதிக்கு தனி சந்நிதி இருப்பது குறிப்பிடத்தக்கது. வெளி பிரகாரத்தில் கிருஷ்ணன், நடராஜர் சந்நிதிகள் உள்ளன. இது தவிர, தட்சிணா மூர்த்தி, துர்க்கை போன்ற பரிவார தெய்வங்களும் இடம் பெற்றுள்ளன.
கோயிலின் தென்கிழக்கு மூலையில் நவகிரகங்களுக்கான சந்நதி அமைந்துள்ளது.
திருக்கடையூருக்கு இணையாக சொல்லப்படும் இத்திருத்தலத்தில், சஷ்டியப்த பூர்த்தி செய்து கொள்வது மிகவும் விசேஷமானது. பெருமானையும், அம்பாளையும் தரிசிப்பவர்களுக்கு பாப விமோசனமும், ஆயுள் மற்றும் ஆரோக்கியமும் அதிகரிக்கும்.
இத்திருத்தலத்தின் விருட்சம் மகா வில்வம் ஆகும். கோயிலின் அருகில் திருக்குளம் அமைந்துள்ளது. எமனால் எம்பெருமானுக்கு அபிஷேகம் செய்ய உண்டாக்கிய குளம் என்பதால் இத்திருக்குளத்திற்கு எம தீர்த்தம் என்ற பெயர் ஏற்பட்டது. இந்த கோயிலில் மாதந்தோறும் பிரதோஷ வழிபாடுகளும், ஆருத்ரா, நவராத்திரி திருவிழாக்களும் சிறப்பாக நடக்கின்றன.
தினமும் இந்த கோயிலில் ஆறு கால பூஜை நடக்கிறது. காலை 6 மணிக்கு கோயில் திறக்கப்பட்டு 11 மணி வரை பக்தர்கள் வழிபட கோயில் நடை திறந்திருக்கும். பிறகு மாலை 4.30 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 8 மணி வரை கோயில் திறந்திருக்கும்.
எப்படி செல்வது
சைதாப்பேட்டையில் இருந்து மேடவாக்கம் செல்லும் பேருந்துகளில் சென்றால் இத்திருக்கோயிலுக்கு செல்ல முடியும். வேளச்சேரிக்கு முன்பு தண்டீஸ்வரம் எனும் இடத்தில் இறங்கிக் கொள்ள வேண்டும்.
கிண்டி ரயில் நிலையத்தில் இருந்து பேருந்து அல்லது ஆட்டோவிலும் செல்லலாம்.