Entertainment Tourism Religious 0706 01 1070601025_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கடன் தொல்லை தீர்க்கும் ஸ்ரீ அப்பன் வெங்கடேச பெருமாள்

Advertiesment
அப்பன் வெங்கடேச பெருமாள்

Webdunia

சென்னைக்கு அருகிலுள்ள மாவட்டமான செங்கல்பேட்டை அடுத்த பழைய சீவரத்தில் உள்ள ஸ்ரீ அப்பன் வெங்கடேச பெருமாள் திருக்கோயில் கீர்த்திமிக்கதாக பக்தர்களிடையே போற்றப்படும் கோயில்களின் ஒன்று.

மும்மூர்த்திகள் உருவில் காட்சி :

செய்யாறு, பாலாறு, வேகவதி ஆகிய மூன்று ஆறுகளின் சங்கமத்தில் ஆற்றங்கரையையொட்டியே இந்த ஆலயம் கம்பீரமாக அமைந்துள்ளது. திருமுக்கூடலில் எழுந்தருளும் வெங்கடேச பெருமாள், மும்மூர்த்திகளின் உருவாக காட்சி தருவது இந்த தலத்தின் சிறப்பம்சமாகும்.

கையில் சங்கு, சக்கரம் இருப்பதால் விஷ்ணு ரூபமாகவும், தலையில் ஜடாமுடியும், நெற்றிக்கண்ணும் இருப்பதால் சிவரூபமாகவும், கையிலும், திருவடியிலும் தாமரை புஷ்பம் இருப்பதால் பிரம்மரூபமாகவும் வெங்கடேச பெருமாள் சேவை சாதிக்கிறார்.

தனிக் கோயில்கள் :

பெருமாளின் திருமார்பில் அலமேலு மங்கை ஒரு புறமும், பத்மாவதி தாயார் மறு புறமும் உள்ளனர். நாச்சியார், ஸ்ரீதேவி, பூமாதேவிக்கு தனிக்கோயில்கள் உண்டு. மேலும் தாயார் அலமேலு மங்கை, ஆண்டாள், சக்கரத்தாழ்வார், கருமாணிக்க வரதர் மற்றும் கர்ண குண்டல அனுமார் சன்னதியும் இங்கு உள்ளது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்த ஆலயம் வரலாற்று சிறப்புக்கும் உரியதாகும். முகுந்தன் திருவடிகளைத் தவிர வேறொன்றிற்கும் அவன் தலைவணங்கவில்லை என்று தண்டன் தோட்டம் பட்டயம் கூறும் நந்திவர்ம பல்லவன் ஆண்ட காஞ்சியின் கிழக்கு திசையில் செங்கல்பட்டிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது. கோயில் அருகே இரு குன்றுகளுக்கு இடையே பாய்ந்தோடும் நதி, முப்புறமும் பச்சைப்பசேல் என திகழும் வயல்வெளிகள் என உள்ளத்தை கொள்ளை கொள்ளும் வகையில் உள்ள இயற்கை எழில் எல்லோரையும் மயங்க வைப்பதாகும்.

சீனிவாச பெருமாள் :

தொண்டைமான் சக்ரவர்த்தி, திருப்பதி சீனிவாச பெருமாள் மீது அளவுகடந்த பக்தி கொண்டு நாட்டை மகனிடம் ஒப்படைத்து விட்டு திருப்பதி செல்கிறார். அப்போது பெருமாள் அசரீரி குரலில் நாட்டுக்கு திரும்பிச் செல்லுமாறு மன்னனுக்கு கூறுகிறார். அதனை பொருட்படுத்தாமல் சீனிவாச பெருமாள் வசம் சரணாகதி அடைந்தார் மன்னன். அப்போது சீனிவாச பெருமாள் தன் கையிலிருந்த சங்கு, சக்கரத்தை அனுப்பி தொண்டமானின் நாட்டை காப்பாற்றினார்.

அதன் பின் திருப்பதி செல்லும் போது பெருமாளின் சங்கு, சக்கரம் திருமுக்கூடல் ஆலயத்திலேயே தங்கி விட்டது. அதனால் தான் இன்றும் அந்த கோயில் சங்கு, சக்கரம் மட்டும் தனியாக ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.


அப்பன் வெங்கடேச பெருமாள் :

பிறகு பெருமாளின் கட்டளைக்கு இணங்க தொண்டமான் சக்கரவர்த்தி திருமுக்கூடலுக்கு திரும்பி அப்பன் சீனிவாச பெருமாளை வணங்க வந்தார். அப்போது சயன கோலத்தில் இருந்த பெருமாள் நின்ற கோலத்தில் எழுந்து பிரம்மா, விஷ்ணு, சிவன் என மும்மூர்த்திகளின் வடிவமாக ஒன்று கலந்து ஓருருவில் காட்சி கொடுத்தார். அதை பார்த்த தொண்டமான் சக்கரவர்த்தி, அப்பன் வெங்கடேசா என்று பெருமாளை கட்டித்தழுவி கசிந்துருகி வேண்டினர்.

அதனால் தான் இங்குள்ள பெருமாளுக்கு ஸ்ரீ அப்பன் வெங்கடேச பெருமாள் என்ற திருநாமம் ஏற்பட்டது. இங்கு பிருகு முனிவரின் தவத்திற்கு பெருமாள் காட்சி அளித்ததாகவும் புராண வரலாறு கூறுகிறது.

ஒப்பிலியப்பன் போல் பெருமாளின் திருவடியில் பூமாதேவியும், மார்க்கண்டேயனும் இங்கு தவம் செய்கிறார்கள். திருப்பதி சீனிவாச பெருமாளின் கையில் உள்ள சங்கு சக்கரமும் இங்கு உள்ளது.

இத்தலத்தின் குறிப்பிடத்தக்க தனிச்சிறப்பு என்னவென்றால் இங்கு உறையும் பெருமாள் மார்க்கண்டேயனுக்கு நாதனாகவும், பூமாதேவிக்கு கண்ணனாகவும், காஞ்சியை ஆண்ட தொண்டைமானுக்கு திருப்பதி சீனிவாச பெருமாளாகவும் காட்சி கொடுத்தார் என்பதே.

கடன் தொல்லை தீர :

இங்குள்ள ஆஞ்சநேயர் கர்ணகுண்டல ஆஞ்சநேயராகவும் திருக்கோலம் பூண்டுள்ளார். இவருக்கு வடமாலைக்கு பதிலாக தென்குழல் மாலை சாற்றப்படுகிறது. இவரை வணங்கினால் கடன் தொல்லை நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அப்பன் வெங்கடேசனை தொழுதாலும் கடன் சுமைகள் தீரும் என்பது ஐதீகம்.

63 நாயன்மார்களில் ஒருவரான அப்பரும் (திருநாவுக்கரசர்) பழைய சீவர பெருமானை நெக்குருகி புகழ்ந்து பாடியுள்ளார். ஸ்ரீ அப்பன் வெங்கடேச பெருமாள் என்று அப்பரால் அழைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டதாக வரலாறு கூறுகிறது.

இக்கோயிலின் ஸ்தல விருட்சம் வன்னிமரம். தேவதாரு (சந்தன மரம்) ஆகும்.

விழாக்கள் :

கிருஷ்ண ஜெயந்தி, விஜயதசமி, கார்த்திகை தீபம், வைகுண்ட ஏகாதசி, பார்வேட்டை, ரதசப்தமி, மாசிமகம், யுகாதி ஆகிய உற்சவங்கள் இங்கு வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

தற்போது இந்த ஆலயம் தொல்லியல் துறையின் பராமரிப்பில் இருந்து வருகிறது.

பாலாற்றின் தென் கரையில் இந்த ஆலயம் அமைந்திருப்பதை போல வடகரையில் ஒரு அழகிய பெருமாள் கோயில் மலையின் மீது அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் எழுந்தருளும் பெருமாளுக்கு ஸ்ரீ நரசிம்ம பெருமாள் என்பது திருநாமம்.

தொண்டை நாட்டில் அமைந்துள்ள பல்வேறு ஆலயங்களுள் இவ்விரு ஆலயங்களும் ஆற்றின் கரையில் அமைந்திருப்பது பக்தர்களின் நெஞ்சங்களுக்கு பரவசம் ஊட்டுவதோடு கண்களுக்கும் விருந்தாக அமைந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil