Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நான்காவதுபடை வீடு : சுவாமிமலை

Advertiesment
நான்காவதுபடை வீடு : சுவாமிமலை

Webdunia

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் நான்காவது படை வீடாகத் திகழ்வது திருவேரகம் என்று போற்றப்படும் சுவாமிமலை. இத்தலத்தில் உறையும் கதிர்வேலன், தனது தந்தை சிவபெருமானுக்கு குருவாக இருந்து பிரணவ மந்திரத்தை உபதேசம் செய்ததாக புராணத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் இங்கு வீற்றிருக்கும் முருகப் பெருமானை சுவாமிநாதன், தகப்பன் சுவாமி என்றெல்லாம் அழைக்கிறோம். இதன் காரணமாகவே இந்தத் திருத்தலமும் சுவாமிமலை என்று அழைக்கப்படலாயிற்று.

அமைவிடம் :

தஞ்சை மாவட்டம் தஞ்சாவூர் நகரிலிருந்து 32 கி.மீ. தொலைவிலும், கும்பகோணத்திலிருந்து 8 கி.மீ. தொலைவிலும் அமைந்திருப்பது சுவாமி மலை. இந்து அறநிலைய ஆட்சித்துறைக்கு உட்பட்ட இந்தக் கோயிலில், திருமண மண்டபங்களும் வசதியான தங்கும் விடுதிகளும் உள்ளன. குடும்பத்தோடு வரும் பக்தர்கள் தங்கிக் கொள்ள தேவஸ்தானம் சார்பில் ஏராளமான குடில்களும் உள்ளன.

சோழ நாட்டையே ஒரு சிவத்தலமாகப் பாவித்து வழிபடும் முறை உண்டு. அந்த வகையில் திருவலஞ்சுழியை விநாயகர் சன்னதியாகவும், சுவாமிமலையை முருகன் சன்னதியாகவும் கொள்வர்.

இத்தலத்தை முருகனின் சிறப்புமிக்க அழகிய படைவீடு என்ற பொருளில் (ஏர்+அகம்) ஏரகம் என்றனர். ஏர்த் தொழிலான விவசாயத்தில் சிறந்த பகுதியில் உள்ள அகம் என்ற பொருளையும் எடுத்துக் கொள்ளலாம்.

இக்கோயிலின் தல வரலாறு சுவாமிமலையில் சுதைச் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது.

பிரணவ உபதேசம் கேட்ட சிவபெருமான் :

படைப்புத் தொழிலில் ஆணவம் முற்றியிருந்த பிரம்மன், முருகப்பெருமானை சந்திக்க நேர்ந்தது. அப்போது பிரம்மனிடம் படைப்புத் தொழில் செய்யும் உனக்கு ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியுமா? என்று முருகப் பெருமான் கேட்கிறார். இக்கேள்விக்கு பிரம்மனால் பதில் சொல்ல முடியவில்லை. பிரணவத்தின் பொருள் தெரியாமல் திகைத்தார். அவரைத் தலையில் குட்டிச் சிறையில் அடைத்தார் முருகன்.

ஈசனே நேரில் வந்து கேட்டுக் கொண்டதால், பிரம்மனை முருகன் விடுதலை செய்தார். பிறகு சிவபெருமான், "பிரணவத்தின் பொருள் உனக்குத் தெரியுமா?" என்று முருகனிடம் கேட்டார். "ஓ நன்றாகத் தெரியுமே" என்றார் முருகன். "அப்படியானால் அப்பொருளை எனக்குக் கூற இயலுமா?" என்றார் ஈசன். "உரிய முறையில் கேட்டால் சொல்வேன்!" என்றார் முருகன்.

அதன்படி சிவபெருமான் இத்தலத்தில் சிஷ்ய பாவத்தில் அமர்ந்து, முருகனிடம் பிரணவ உபதேசம் கேட்டார். அன்று முதல், சுவாமியாகிய சிவபெருமானுக்கே முருகன் குருநாதனாக ஆனார். அதனால் முருகன், சுவாமிநாதன் என்றும், பரமகுரு என்றும், தகப்பன் சுவாமி என்றும் போற்றப்பட்டார். இந்தத் திருத்தலமும் சுவாமிமலை என்று அழைக்கப்பட்டது.

நான்கரை அடி உயர சுவாமிநாதன் :

ஞானாசிரியராகிய சுவாமிநாதன் கம்பீரமாக நான்கரை அடி உயரமுள்ள திருவுருவத்துடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். வலக்கரத்தில் தண்டாயுதம் தரித்து, இடக்கரத்தை இடுப்பில் வைத்து, சிரசில் ஊர்த்துவ சிகாமுடியும், மார்பில் பூணூலும் ருத்திராட்சமும் விளங்கக் கருணாமூர்த்தியாகக் காட்சித் தருகிறார். முகத்தில் ஞானமும் சாந்தமும் தவழ்வதைக் கண்குளிரக் காணலாம்.

மகாமண்டபத்தில் மயிலுக்குப் பதிலாக முருகனுக்கு இந்திரனால் வழங்கப்பட்ட ஐராவதம் என்ற யானை நிற்கிறது. கிழக்கு நோக்கி நின்று திருவருள் பாலிக்கும் சுவாமிநாதனுக்கு, தங்கக் கவசம், வைரவேல், தங்க சகஸ்ர நாம மாலை, இரத்தின கிரீடம் போன்ற பல்வேறு அணிகலன்களும் பூட்டி அடியவர்கள் அழகு பார்க்கின்றனர். சுவாமிநாதன் தங்கத் தேரிலும் அவ்வப்போது பவனி வருவது வழக்கம்.

நெல்லி மரம் சுவாமிமலையின் தல விருட்சமாகும். நெல்லி மரத்தை வடமொழியில் "தாத்ரி" என்பர். அதனால் சுவாமிமலையை "தாத்ரிகிரி" என்றும் குறிப்பிடுகின்றனர். மேலும் சிவகிரி, குருவெற்பு, குருமலை, சுவாமி சைலம் போன்ற பெயர்களும் உண்டு. வடமொழியில் சுவாமிநாதனை "ஞானஸ்கந்தன்" என்று போற்றுகின்றனர்.

முருகனை போற்றிப் பாடல்கள் :

அருணகிரிநாதர் முப்பத்தெட்டு திருப்புகழ்ப் பாடல்களை சுவாமிநாதனுக்குச் சூட்டியுள்ளார். சுவாமிமலையைச் சேர்ந்த கடுக்கண் தியாகராஜ தேசிகர் என்பவர் சுவாமிமலை நவரத்தின மாலை என்ற நூலை இயற்றியுள்ளார். "ஒருதரம் சரவணபவா..." என்று தொடங்கும் நவரத்தின மாலையின் மூன்றாவது பாடல் மிகவும் பிரபலமானது.

அவ்வாறே, சங்கீத மூர்த்தி ஸ்ரீமுத்துசுவாமி தீட்சிதர் இயற்றிய, "சுவாமிநாத பரிபாலயாதுமாம்" என்ற நாட்டை ராகக் கிருதியும் மிகவும் பிரபலமானது.

மாடக்கோயில் :

சுவாமிமலை இயற்கையான மலை அன்று. ஏராளமான கருங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட ஒரு மாடக்கோயில்தான் சுவாமிமலை. மலைகளே இல்லாத தஞ்சை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கில் கருங்கற் கோயில்கள் இருப்பது பிரமிப்பூட்டும் விந்தைகளில் ஒன்றாகும்.

இங்கு மூன்றாவது பிரகாரம் மலையடிவாரத்தில் உள்ளது. இரண்டாம் பிரகாரம் கட்டுமலையின் நடுப்பாகத்திலும் முதற் பிரகாரம் கட்டுமலையின் உச்சியில் சுவாமிநாதப் பெருமானைச் சுற்றியும் அமைந்துள்ளது.

தெற்கு நோக்கிய இராஜகோபுரம் ஐந்து நிலைகள் உடையது. பெரும்பாலும் பக்தர்கள் கிழக்குப்புற மொட்டைக் கோபுரத்தின் வழியாகவே திருக்கோயிலுக்குள் நுழைகின்றனர். ஏனெனில், நுழைந்தவுடன் வல்லப கணபதியின் தரிசனம் கிடைக்கிறது.

மலைக்கோயிலின் கீழ்த்தளத்தில் மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர், விநாயகர், சோமாஸ்கந்தர், விசுவநாதர், விசாலாட்சி, தட்சிணாமூர்த்தி ஆகியோரின் சன்னதிகள் அமையப் பெற்றுள்ளன. சுவாமிநாதனைக் காண நாம் அறுபது படிகள் மேலே ஏறிச் செல்ல வேண்டும். அறுபது தமிழ் வருடங்களின் பெயர்களைத் தாங்கி நிற்கும் அறுபது படிகளும் இரண்டு பகுதிகளாக அமைந்துள்ளன.

மேல்தளத்தில் முதலில் நமக்குக் காட்சி தருபவர் கண்கொடுத்த கணபதி என்ற விநாயகர் ஆவார். இவர் செட்டி நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்மணிக்குக் கண்பார்வையை அருளியதால் "கண் கொடுத்த கணபதி" என்று பெயர் பெற்றதாக செவிவழிச் செய்திகள் தெரிவிக்கின்றன. இன்றும், இவரை வணங்கும் பக்தர்களுக்கு நல்ல கண் பார்வையை அருளி வருகிறார்.

Share this Story:

Follow Webdunia tamil