Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரார்த்தனை தலமாக திகழும் சோளிங்கர் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர்!

Advertiesment
பிரார்த்தனை தலமாக திகழும் சோளிங்கர் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர்!

Webdunia

வைணவத் திவ்ய தேசங்கள் 108ல் குறிப்பிடத்தக்க ஒன்றாகத் திகழ்வது சோளிங்கபுரம் அருள்மிகு லக்ஷ்மி நரசிம்மசுவாமி திருக்கோயில். இத்தலம் மிகச் சிறந்த பிரார்த்தனை தலமாகவும் விளங்கி வருகிறது. இங்கு உறையும் எம்பெருமானை ஆழ்வார்கள் மூவர் மங்களாசாசனம் செய்துள்ளனர்.

சோளிங்கபுரத்தின் புராணப் பெயர் கடிகாசலம். இவ்விடத்தை ஆழ்வார்கள் திருக்கடிகை என அழைத்தனர் என்று அறியப்படுகிறது. ஆச்சாரியார்கள் சோளசிம்மபுரம் என்றும், சைவர்கள் சோழலிங்கபுரம் என்றும் அழைத்து, தற்போது சோளிங்கபுரம், சோளிங்கர் என்று அழைக்ப்படுகிறது.

அமைவிடம் :

வேலூர் மாவட்டம் வாலாஜா வட்டம், அரக்கோணம் ரயில் நிலையத்திலிருந்தும், திருத்தணி ரயில் நிலையத்திலிருந்தும் 27 கி.மீ. தொலைவில் அமைந்திருப்பது திருக்கடிகை என்னும் சோளிங்கபுரம்.

தனிப்பெரும் சன்னதிகள் :

சோளிங்கரில் உள்ள அருள்மிகு லக்ஷ்மி நரசிம்மசுவாமி திருக்கோயில் மூன்று தனிப்பெரும் சன்னதிகளை கொண்டு விளங்குகிறது.

1. திருமலை (பெரியமலை) : அருள்மிகு அமிர்தபலவல்லித் தாயார் உடனுறை அருள்மிகு யோக நரசிம்மசுவாமி எழுந்தருளியுள்ள மலைக்கோயில்.

2. சிறிய மலை (கடிகாசலம்) : அருள்மிகு யோக ஆஞ்சநேயசுவாமி, ஸ்ரீ ராமர், ஸ்ரீ ரங்கநாதர் ஆகிய எம்பெருமான்கள் எழுந்தருளியுள்ள மலைக்கோயில். மேற்படி இரண்டு மலைக்கோயில்களும் நகரிலிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் கொண்டபாளையம் என்ற சிற்றூரில் அமையப் பெற்றுள்ளது.

3. ஊர் திருக்கோயில் : அருள்மிகு பக்தோசித பெருமாள், அருள்மிகு ஆதிகேசவப் பெருமாள் ஆகிய எம்பெருமான்கள் ஊரிலேயே எழுந்தருளியுள்ளனர். இக்கோயில் சோளிங்கர் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. உற்சவருக்கென்று (அருள்மிகு பக்தோசிதசுவாமி) தனிக்கோயில் அமைந்திருப்பது தனிச்சிறப்பாகும். இங்குதான் முக்கிய திருவிழாக்கள், பிரம்மோற்சவம், தேர்த் திருவிழா ஆகியன நடைபெறுகிறது.

தலச் சிறப்பு :

இக்கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும், தொண்டை நாட்டு வைணவ திருப்பதிகள் 22-ல் ஒன்றாகவும், பிரார்த்தனை திருத்தலமாகவும் விளங்கி வருகிறது. ஸ்ரீ நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், பேயாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பெற்றிருப்பது கூடுதல் சிறப்பு. ஏழு மாமுனிவர்களான வாமதேவர், வசிஷ்ட, கத்யபர், அத்திரி, ஜமதக்னி, கௌதமர், பரத்துவாஜர் ஆகியோர் சிங்கப் பெருமானை சாந்த வடிவில் தரிசிக்க விரும்பி இறைவனைத் தொழ எம்பெருமான், ஸ்ரீ யோக நரசிம்மசுவாமி, முனிவர்கள் நினைத்த மாத்திரத்தில் ஒரு கடிகை (நொடிப்பொழுது) நேரம் அவர்களுக்கு திருமலையில் காட்சி அருளியதால் இத்தலம் கடிகாசலம் என பெயர் பெற்றதாக புராணத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீமன் நாராயணன் எடுத்த அவதாரங்களில் ஒப்பற்று உயர்ந்து நிற்பது நரசிங்க அவதாரமாகும்.

பெற்ற தகப்பனே பகையாய் பிறர் எவரும் எவ்வகையிலும் உதவிட முடியாத நிலையில், பள்ளியில் படித்து வந்த சிறுவன் பிரகலாதனின் சொல்லை சத்தியமாக்க தன்னை அண்டியவர்க்காக நரசிங்கமாய் அவதரித்து உதவியவனின் மேன்மையும் நேர்மையுமே அடியவர்க்குப் பெரும் பலமாகும். அத்தகைய தெள்ளிய சிங்கமாகிய தேவனே யோக நரசிங்கனாய் திருக்கோயில் கொண்டுள்ளான் திருக்கடிகை மலையில்.

Share this Story:

Follow Webdunia tamil