கொள்ளையடிக்கும் கொடைக்கானல்
, வியாழன், 14 ஜூலை 2011 (20:44 IST)
கோடைக்காலம் முடிந்தாலும் வெப்பம் தணியவில்லை. புவி வெப்பமடைந்துள்ளது என்பதை மறுக்க முடியாமல் நிரூபிக்கிறது இரவில் வெட்கை. தப்பிச் சென்று 4 நாட்கள் கொடைக்கானல் குளிரில் நனைவோம் என்று முடிவுகட்டி குடும்பத்துடன் புறப்பட்டுச் சென்ற எங்களுக்கு அங்கே நடக்கும் கொள்ளையைக் கண்டதும் வெப்பமடித்தாலும் சென்னையே பரவாயில்லை என்று தோன்றியது.கொடைரோடில் இருந்து மேலே செல்ல எவ்வளவு ஆகும் என்று தனியார் காரோட்டிகளைக் கேட்ட மாத்திரத்திலேயே, அந்த அதிகாலை நேரத்திலும் தலை சுற்றியது. ரூ.1,600 கொடுங்கள் என்று...ஏதோ ரூ.100 கேட்பது போல் மிகச் சாதாரணமாகக் கேட்டனர். மறுபேச்சு பேசாதது அந்த இடத்தை விட்டு நகரத் தொடங்கியதும்... “ரிட்டன் போர வண்டியில் போறீங்களா? அதுல ரூ.800தான்” என்று தொங்கினார் ஒரு காரோட்டி! அட, அங்கிருந்து புறப்பட்டுச் செல்லும் காரில்தான் மேலே போகவேண்டும் என்று எங்களுக்கு என்ன பிரார்த்தனையா? உள்ளத்தில் எழுந்த வினாவுடன் பார்த்தேன். எதிரில் கொடைக்கானல் செல்லும் தனியார் பேருந்து நின்றுக்கொண்டிருந்தது. உடன் பொருட்களின் சுமைதான் காரை நாடச் செய்தது, அதைச் சற்றுச் சமாளித்து பேருந்திலேயே போய்விடுவோம் என்று ஓடிச் சென்று, கூட கொண்டு வந்த பெட்டிகளையும், பைகளையும் சுமைப் பகுதியில் அமுக்கித் திணித்து அக்காடா என்று அமர்ந்தோம். பெரிய மகிழ்ச்சிதான்... ரூ.120இல் கொடைக்கானல் போய்விடலாமே! லக்கேஜூக்கும் மக்களுக்கும் எந்த வித்தியாசமும் பார்க்காமல் ஆட்களை ஏற்றி, அள்ளித் திணித்துக்கொண்டு பேருந்து புறப்பட்டது. உடல் உராய்தல்களால் பேருந்துக்கு உள்ளே சந்தை லெவலுக்குச் சண்டை நடந்தது. அதனாலெல்லாம் எந்த பாதிப்பும் ஏற்படாத ஒரு யோக நிலையில் நடத்துனர் பயணச் சீட்டு வணிகத்தை பத்திரமாக நடத்திக் கொண்டிருந்தார்.
அழகிய மலைகளின் காட்சியை ஒரு பக்கம் மட்டுமே பார்க்க முடிந்தது. இடையில் திணிக்கப்பட்ட மக்கள் சுமையால் அடுத்த பக்கத்தில் என்ன இருக்கிறது என்றே தெரியவில்லை. எனவே ஒரு பக்கத்து காலை நேர காட்சி கிடைக்காமல் போனது. அது காரில் கிடைத்திருக்குமே என்ற எண்ணம் ஏற்பட்டது.இந்த மகிழ்ச்சி கொடைக்கானல் பேருந்து நிலையத்திற்குச் சென்றதும் மறைந்தது. உடன்பொருட்களை இறக்கு வைத்த உடனேயே வந்து சூழந்த சுற்றுலா நிறுவனங்களின் முகவர் கூட்டம், எங்கெங்கே போகப் போகிறீர்கள் என்பதை முடிவு செயதுக்கொண்டு அறை தேடப் புறப்படுங்கள் என்று அழுத்தமாக வலியுறுத்தியது. தங்குவதற்கு நல்ல இடம் தேட வேண்டுமே? துணை இல்லாமல் போனால் எப்படி? ஒரு முகவரிடம் சுற்றுலாவிற்கு ரூ.600 செலுத்துவதாக ஒப்புக்கொண்டு (அறை காட்டி, தங்கும் முடிவு எடுத்தவுடன் அந்தப் பணத்தை காரோட்டியிடம் கொடுத்துவிட வேண்டும் என்று நிர்பந்தம்) தங்குமிடம் பார்க்க புறப்பட்டோம்.
அறைக்கு கட்டணம் எவ்வளவு என்கிற அட்டை பல விடுதிகளில் இல்லை. கட்டணத்தையும் ஆயிரத்திற்குக் குறையாமல் கேட்டார்கள் (காட்டிய காரோட்டிக்கு தரகு கொடுக்க வேண்டுமே). ஒரு வழியாக நல்ல ஒரு விடுதியில் - சர்ச்சைக்குரிய பிளசண்ட் ஸ்டே விடுதி அருகேயிருந்தது - மலைகளின் எழில் தோற்றத்தை காணும் வகையில் அமைந்திருந்த அறையை நாளுக்கு ரூ.1,700க்கு எடுத்து தங்கினோம். சொன்னபடி ரூ.600 வாங்கிக்கொண்டு காரோட்டி புறப்பட்டார்.