தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் சனிக்கிழமையோடு ஓரளவிற்கு மழை ஓய்ந்தாலும் அவ்வப்போது மழை பெய்துகொண்டுதான் வருகிறது. இந்த நிலையில், கொடைக்கானலில் நேற்று 19 செ.மீ. மழை பெய்தது. மேலும் மலைச்சாலையில் மண்சரிவு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. நேற்றும் தொடர் மழை பெய்தது. இந்த மழையளவு போட்கிளப்பில் 19 சென்டி மீட்டராகவும், அப்சர்வேட்டரியில் 12 சென்டி மீட்டராகவும் பதிவாகி உள்ளது.
தொடர் மழை காரணமாக கொடைக்கானல் ஏரி, குடிநீர் வழங்கும் இரண்டு ஏரிகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. கொடைக்கானல் ஏரி நிரம்பி வழிகிறது. இதனால் படகு சவாரி நிறுத்தப்பட்டு உள்ளது.
ஏரியில் இருந்து வெளியேறும் வெள்ளம் பர்ன்ஹில் சாலையில் உள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்தது. இதனால் அப்பகுதிக்கு செல்லும் சாலைகள் துண்டிக்கப்பட்டு உள்ளது. இந்த வெள்ளத்தில் ஒரு வீடு அடித்துச் செல்லப்பட்டது. வீட்டில் யாரும் இல்லாததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
இதற்கிடையே வெள்ளம் காரணமாக வெளியே வர முடியாமல் தவித்த 8 பேரை தீயணைப்பு படையினர் மற்றும் காவல்துறையினர் ஏணி மூலம் பாதுகாப்பாக மீட்டனர்.
கனமழை காரணமாக கொடைக்கானல் -வத்தலக்குண்டு சாலையில் பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு நிலச்சரிவு ஏற்பட்டது. இதுகுறித்து அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர். இதையடுத்து நேற்று அதிகாலை 5 மணிக்கு சாலை சீரானது. இந்த நிலச்சரிவால் கொடைக்கானல் - வத்தலக்குண்டு இடையே சுமார் 8 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கொடைக்கானல், பெரும்பாறை, தாண்டிக்குடி, தர்மத்துபட்டி -ஆடலூர், சிறுமலைக்காட்டு சாலைப் பகுதி உள்ளிட்ட மலைப்பாதையில் மண்சரிவு காரணமாக சாலைகள் துண்டிக்கப்பட்டது. இந்த இடங்களில் மாவட்ட நிர்வாகத்தினர் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர்.