கொடைக்கானலில் மழை பெய்து வருவதால் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கொடைக்கானல் பகுதியில் பெய் கன மழையால் அருவிகளிலும், நீரோடைகளிலும் நீர்வரத்து அதிகமாக இருந்தது.
இதனை அடுத்து கடந்த வாரத்தில் மழை நின்று பனி கொட்டியது. மழை நின்றதாலும், குளிரும், பனியும் சேர்ந்ததாலும் கொடைக்கானல் சுற்றுலாப் பயணிகளால் அதிகம் களை கட்டியது.
ஆனால் கடந்த சில நாட்களாக மீண்டும் கொடைக்கானலில் மழை பெய்து வருகிறது.
இதனால் வெள்ளி நீர் வீழ்ச்சி, பாம்பார் அருவி, வட்டக்கானல் அருவி, பியர் சோழா அருவி, செண்பகா அருவி மற்றும் நீரோடைகளிலும் தண்ணீர் வரத்து அதிகம் உள்ளது.
அருவிகளில் நீர் வரத்து அதிகமாக இருந்தும், சுற்றுலாப் பயணிகள் மழையால் கடும் அவதிக்குள்ளாகி அருவிகளில் குளிக்க முடியாமல் உள்ளனர். பல இடங்களை சுற்றிப் பார்க்க முடியாமல் அறைகளில் அடைந்து கிடக்கின்றனர்.
எனினும் ஓரிரு நாட்களில் நிலைமை சரியாகிவிடும் என்று கூறப்படுகிறது.