இயற்கை எழில் ததும்பும் திம்பம், ஆசனூர்!
, வெள்ளி, 25 ஏப்ரல் 2008 (13:00 IST)
ஈரோடு மாவட்டத்தில், தமிழக - கர்நாடக எல்லைப் பகுதியில் உள்ள திம்பம், ஆசனூர் (ஹாசனூர் என்றும் அழைக்கின்றனர்) இயற்கை எழிலுடன் திகழும் மலை வனப் பகுதிகளாகும்.ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்திலிருந்து 13 கி.மீ. தூரத்திலுள்ள புகழ்பெற்ற பண்ணாரியம்மன் கோயிலிற்குச் சென்று அம்மனை தரிசித்துவிட்டு, ப கோயிலைக் கடந்து செல்லும் தேச நெடுஞ்சாலை (எண்: 209 ) இந்த அழகிய வனப்பகுதிக்கு நம்மை அழைத்துச் செல்கிறது.சாலையின் இருபுறங்களிலும் அடர்ந்த வனம். மாலை வேளையில் எச்சரிக்கையாக வாகனத்தை ஓட்டிச் செல்ல வேண்டும். யானை உட்பட பல விலங்குகள் சாலையைக் கடந்து வனத்தின் மறுபகுதிக்குச் செல்வதைக் காணலாம்.
மேற்கொண்டு சென்றால் திம்பத்தை நோக்கிச் செல்லும் மலைப்பாதை. 10 கி.மீ. தூரமும் 27 கொண்டை ஊசி வளைவுகளும் கொண்ட, சற்று ஆபத்தான, ஆனால் கண்ணிற்கு அழகிய காட்சிகளை அள்ளித் தரும் பாதை. பண்ணாரியில் இருந்து 14 கி.மீ. பயணத்திற்குப் பின்னர் திம்பம் மலைப்பகுதியை அடையலாம். அங்கிருந்து மேலும் 4 கி.மீ. சென்றால் ஆசனூர்.கடல் மட்டத்திலிருந்து 1,105 மீட்டர் உயரமுடைய இந்த வனப்பகுதி, தமிழக வனத்துறையால் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டதாகும்.திரும்பிய திக்கெங்கிலும் இயற்கையின் பசுமை, சில்லென்ற காற்று, பறவைகளின் இனிய குரலோசை, அவ்வப்போது கடந்து செல்லும் கர்நாடக, தமிழக வாகனங்கள்.இந்த மலை வனப்பகுதியில் சாலையின் இருபுறங்களிலும் ஆங்காங்குள்ள புல் வெளிகள் அலாதியானவை. வனத்திற்கு நடுவே இயற்கையே அமைத்துத்தந்த பூங்காவைப் போல இந்தப் புல்வெளிகள் திகழ்கின்றன.சுற்றிலும் மலைகள் சூழ்ந்த இப்பகுதியில் குடும்பத்துடனும், நண்பர்களுடனும் சென்று இங்கு இனிமையாகப் பொழுதைக் கழிக்கலாம். லேசாகக் குளிரும் மென்காற்று. விலங்குகளும் இங்கு உலா வரலாம், ஏனேனில் இது அவர்கள் இடம். பொதுவாக பகலில் எந்த விலங்கும் தென்படுவதில்லை. இங்குள்ள வனத்துறை ஓய்வகத்தில் தங்கினால், இரவில் பல விலங்குகளை மிகச் சாதாரணமாகக் காணலாம். வனத்துறையினரின் பாதுகாப்பின்றி இரவில் உலா வருவது ஆபத்தானது.
சத்தியமங்கலத்திலிருந்து காலையில் புறப்பட்டு மதியம் முதல் மாலை வரை பொழுதைக் கழிக்கலாம்.
இரண்டு, மூன்று உணவு விடுதிகளும் இங்குண்டு.