யாருக்கும் சொந்தமில்லாத நிலம்!
, செவ்வாய், 22 ஜூலை 2008 (15:37 IST)
அவர்கள் மூன்று பேர். நினோ, சிக்கி மற்றும் சிரா. அவர்கள் உரையாடலின் நடுவே சிறு நகர் ஒன்றில் வசிக்கும் பெண்ணைப் பற்றி பேச்சு வருகிறது. சிக்கி சொல்லும் அடையாளம் உள்ள பெண்ணை நினோவுக்கு தெரிந்திருக்கிறது. சிக்கி ஆச்சரியத்துடன் சிராவிடம் சொல்கிறான். "நாம் அடிக்கடி செல்கிற அந்தப் பெண்ணை இவனுக்கும் தெரிந்திருக்கிறது."
டேனிஷ் தனோவிச்சின் நோ மேன்ஸ் லேண்ட் திரைப்படத்தில் வரும் இந்தக் காட்சியைப் பார்க்கும் எவருக்கும் சாதாரண நகைச்சுவை காட்சியொன்றைப் பார்ப்பதாகவே தோன்றும். சமயத்தில் இதழோரம் புன்னகைக்கூட அரும்பலாம். அனால், அந்த மூவரும் இருக்கும் சூழல் பயங்கரமானது. மரணத்தின் விளிம்பில் வெளிப்படும் இருண்மையான நகைச்சுவையையே தனோவிச் தனது படத்தில் வெளிப்படுத்துகிறார்.போர்க்களத்தில் போஸ்னிய, செர்பிய படைகளுக்கு நடுவே அவர்கள் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். இருதரப்புக்கும் சொந்தமில்லாத அந்தப் பதுங்குக் குழியிலிருந்து அவர்கள் வெளியே வந்தால், உயிருக்கு உத்தரவாதமில்லை. நினோ செர்பிய படையைச் சேர்ந்தவன். சிக்கியும், சிராவும் போஸ்னிய தரப்பு. செர்பிய படை சற்றுமுன் வீசிய 'செல்'லின் ஒரு பகுதி சிக்கியின் இடது மார்பில் இரத்தக் கசிவுடன் இருக்கிறது. சிக்கியின் துப்பாக்கி குண்டுகளில் ஒன்று நினோவின் வயிற்றில் புதைந்திருக்கிற்து. படுகாயத்துடன் தரையில் கிடக்கும் சராவின் முதுகுக்குக் கீழே, கண்ணி வெடி ஒன்று வெடிப்பதற்கு தயார் நிலையில் உள்ளது. சிரா அசைந்தால் அந்தப் பகுதியே வெடித்துச் சிதறும்.டேனிஷ் தனோவிச்சின் திரைப்படம் தொண்ணூறுகளின் முற்பகுதியில் நடந்த போஸ்னியப் போரை சித்தரிக்கிறது. போரில் காயம்படும் போஸ்னிய வீரன் சிக்கி இருதரப்புக்கும் சொந்தமில்லாத நிலத்தில் மாட்டிக்கொள்கிறான். உளவறிய அங்கு வரும் இரண்டு செர்பிய வீரர்கள், போஸ்னிய வீரனொருவனின் சடலத்துக்குக் கீழே, கண்ணிவெடி ஒன்றை பொறித்து வைக்கிறார்க்ள். நண்பனை தேடி வரும் போஸ்னிய வீரர்கள் சடலத்தை அகற்றும்போது, கூண்டோடு வெடித்துச் சிதற இந்த ஏற்பாடு. கண்ணிவெடியை பொறித்து வைக்கும் இரண்டு செர்பிய வீரர்களில் ஒருவனின் உயிரை மறைந்திருக்கும் சிக்கியின் துப்பாக்கி பறித்துவிடுகிறது.
மற்றொருவனான நினோ குண்டு காயத்துடன் சிக்கியால் துப்பாக்கி முனையில் நிறுத்தப்படுகிறான். பிறகுதான் அவர்களுக்கு தெரிய வருகிறது. பிணம் என்று அவர்கள் நினைத்த அந்த போஸ்னிய வீரன் சிரா உண்மையில் இன்னும் சாகவில்லை. உயிரோடுதான் இருக்கிறான். சிரா அசைந்தால்அவர்கள் மூவருமே வெடித்துச் சிதறவேண்டி வரும். அங்கிருந்து வெளியேறலாம் என்றாலோ இருபுறமும் துப்பாக்கியுடன் போஸ்னிய, செர்பிய படைகள் காத்திருக்கின்றன. தப்பிப்பதற்கு சிக்கிக்கு துருப்புச் சீட்டாக நினோ தேவை. நினோவுக்கு சிக்கி!
இநதப் பயங்கரமானச் சூழலை முன்னிறுத்தி போரின் அபத்தத்தை தனது இருண்மையான நகைச்சுவை மூலம் கிண்டல் செய்கிறார் தனோவிச்.
பதுங்கு குழியிலிருந்து வெறியேறி உள்ளாடை மட்டும் அணிந்தபடி சிக்கியும், நினோவும் கையிலிருக்கும் துண்டை விசிறியபடி நடமாடுகிறார்கள். இருதரப்பும் அவர்களை நோக்கிச் சுட தயங்குகிறது. ராணுவ உடை அணியாத அவர்கள் எந்தத் தரப்பைச் சேர்ந்தவர்கள் என்று எப்படி கண்டறிவது.
நோ மேன்ஸ் லேண்டின் பிற்பகுதியில் போரின் இன்னொரு முகத்தை வெளிப்படுத்துகிறார் தனோவிச். குழியில் மாட்டிய வீரர்களைக் காப்பாற்ற ஐ.நா. படை வருகிறது. உயரதிகாரியின் உத்தரவை மீறி, அந்த மூவரையும் காப்பாற்ற ஐ.நா. வீரனுக்கு மீடியாவின் உதவி தேவைப்படுகிறது. போர்க்களத்தில் அமைதியை மீட்டெடுப்பதைவிட, மீடியாக்களில் ஐ.நா. படையின் நேர்மையை, கவுரவத்தை உறுதி செய்வதே ஐ.நா. உயரதிகாரிகளின் பெரும் கவலையாக இருக்கிறது.ஊடகங்களையும தனோவிச் விட்டு வைக்கவில்லை. போர் முனையிலும் ஊடகங்களின் அகோரப்பசி மனிதாபிமானமற்ற முறையில் வெளிப்படுகிறது. கண்முன் தெரியும் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாமல், மரணத்தையும் தலைப்புச் செய்தியாக்கும் அவற்றின் போலி கரிசனத்தை தனக்கே உரிய அள்ளலுடன் கூறிச்செல்கிறார் தனோவிச்.
படத்தின் இறுதிப் பகுதியில் போர், போரின் அபத்தம், ஐ.நா. சபையின் சமாதான நடிவடிக்கை அனைத்தும் கட்டுடைக்கப்படுகிறது. ஐ.நா. படையில் பாதுகாப்பில் இருக்கும்போதே நினோவும், சிக்கியும் கொல்லப்படுகிறார்கள். சிரா இப்போதும் அதே கண்ணிவெடியின் மீது குற்றுயிராக. கண்ணிவெடியை செயலிழக்க வைக்க அழைத்து வரப்படும் ஜெர்மன் வீரனும் தன்னால் இயலாது என கை விரிக்கிறான். இப்போது ஐ.நா. படையின் சமாதானப் பணியை உலகத்தின் முன்னிலையில் அவர் உறுதி செய்தாக வேண்டும்.
பாதுகாப்பின் பொருட்டு ஊடகங்களைச் சேர்ந்தவர்கள் அப்புறப்படுத்தப் படுகிறார்கள். சிரா ஸ்ட்ரெச்சரில் வைத்து தயாராக நிற்கும் ஹெலிகாப்டரில் ஏற்றப்படுகிறான். உடன் காப்பாற்றப்பட்ட சிராவுடன் அனைவரும் ஐ.நா. படைகள், நிருபர்கள் கிளம்புகிறார்கள். கண்ணி வெடியில் சிக்கிக் கொண்ட போஸ்னிய வீரன் இவ்வாறாக மரணத்தின் வாயிலிலிருந்து ஐ.நா. சமாதானப் படையால் மீட்கப்படுகிறான். ஊடகங்கள் இதற்கு சாட்சி.
தனோவிச் தனது உச்சபட்ச விமர்சனத்தை இந்த இடத்தில் தான் வைத்துள்ளார்.
படத்தின் இறுதிப்பகுதி சிராவிடமிருந்து தொடங்குகிறது. சிரா இன்னமும் கண்ணி வெடியின் மீது கையறு நிலையில் இருக்கிறான். ஜெர்மன் வீரன் கண்ணி வெடியை அகற்ற இயலாது என கைவிரிக்க, சிரா காப்பாற்றப்படுவது போல் நாடகம் அரங்கேறுகிறது. அனைவரும் நீங்கிய நிலையில் பதுங்குக்குழியில் இப்போது சிரா மட்டும். அவன் அசையும் அடுத்த கணம் எல்லாம் முடிவுக்கு வந்துவிடும்.
கேமரா இப்போது டாப் ஆங்களில், சுயநினைவுடன் கண்ணி வெடி மீது படுத்திருக்கும் சிராவை காட்டுகிறது. கேமரா மேலே நகர, மரணத்தின் மீது படுத்திருக்கும் சிராவுடன் நம்மை தனித்துவிட்டு படத்தை முடித்துக் கொள்கிறார் தனோவிச்.
போரை நிறுத்த எடுக்கப்பட்ட ஐ.நா. சபையின் நடிவடிக்கைகள் உள்பட அனைத்தும் போரை முடிவுக்கு கொண்டுவராமல் போரின் ஓர் அங்கமாக மாறிவிடுவதை தனது யாருக்கும் சொந்தமில்லாத நிலத்தில் அதிர்ச்சியுடன் பதிவு செய்கிறார் தனோவிச்.
படம் பார்த்துவிட்டு வெளியேறும் ஒவ்வொரு பார்வையாளனும், பொறிக்கப்பட்ட எப்போதும் வெடிப்பதற்கு தயார் நிலையில் இருக்கும் ஒரு கண்ணிவெடியை தன்னுடன் எடுத்துச் செல்கிறான். படம் உருவாக்கும் இந்த பதற்றமே தனோவிச்சின் படத்தை முக்கியமானதாக்குகிறது.