கலைக்கு மொழி இல்லை. எல்லையும் இல்லை என்பதை மீண்டுமொருமுறை நிரூபித்திருக்கின்றன இந்திய திரைப்படங்கள்.
1965-க்குப் பிறகு பாகிஸ்தானில் இந்திய திரைப்படங்களுக்கு நிரந்தர தடை விதிக்கப்பட்டது. குறிஞ்சி பூப்பதுபோல் எப்போதாவது ஒரு படத்திற்கு தடை விலக்கப்படும். அந்த அபூர்வ தருணம் வாய்ப்பது பாகிஸ்தான் ஆட்சியாளர்களின் கருணையை பொறுத்தது.
கடைசியாக மொகல் இ ஆசம் படம் பாகிஸ்தானில் திரையிடப்பட்டது. புதிய பிரதமர் பதவியேற்றப் பிறகு தடையின் இறுக்கம் தளரத் தொடங்கியது. குறிப்பிட்ட படங்களை மட்டும் பாகிஸ்தானில் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக நேற்று 19 திரையரங்குகளில் அமீர்கானின் பிளாக் பஸ்டர் தேரே ஜமீன் பர் திரையிடப்பட்டது.
திருட்டு டி.வி.டி.யில் இந்திய சினிமாக்களை கண்டு களித்து வந்த பாகிஸ்தான் மக்களுக்கு, அந்நாட்டு அரசின் இந்த திடீர் முடிவு எல்லா வகையிலும் திருப்தி அளிக்கும் ஒன்றாகவே இருக்கும்.