தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த 32 வயது மார்கன்வாலன்டைன் ஸ்பெர்லாக்கிற்கு திடீரென்று திரைப்படம் இயக்கும் எண்ணம் உதிக்கிறது. உடடினயாக அவர் மது அருந்துவதை நிறுத்துகிறார். ஆறு வாரங்கள் கழித்து தனது உடம்பை முழுமையாக பரிசோதனை செய்து கொள்கிறார். மருத்துவர்கள் அவர் பூரண ஆரோக்கியத்துடன் இருப்பதாகக் கூறுகிறார்கள். பரிசோதனையின் போது மார்கனின் உடல் எடை 84.1 கிலோ கிராம்.
இந்தச் செய்தி மார்கனை குறித்த விந்தையான சாயலை படிப்பவர் மனதில் தரக்கூடும். சூப்பர் சைஸ் மீயை பார்க்கும் பார்வையாளனும் முதலில் இதுபோன்ற வேடிக்கையான கேளிக்கையை ரசிக்கும் மனநிலைக்கே தள்ளப்படுகிறான். ஆனால் மார்கனின் நோக்கம் கேளிக்கையல்ல. அமெரிக்கர்களின் ஆரோக்கியத்திற்கு சவாலாக இருக்கும் துரித உணவு நிறுவனங்களை கேள்விக்குட்படுத்துவது. அதற்காக தன்னை சோதனைக்கூடத்தின் பரிசோதனைப் பொருளாக மாற்றிக் கொண்டார் மார்கன். அதுவொரு மோசமான ஆச்சரியப்பட வைக்கும் ஐடியா!
துரித உணவு அமெரிக்க வாழ்வின் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. வால் மார்ட், பர்கர் கிங், ஸ்டார் பக்ஸ், மெக் டொனால்ஸ் போன்ற பெரிய நிறுவனங்கள் அமெரிக்காவின் துரித உணவுத் தேவையை பூர்த்தி செய்கின்றன. இதில் மெக் டொனால்ஸின் வளர்ச்சி அபாரமானது. அமெரிக்காவின் மொத்த துரித உணவு வர்த்தகத்தில் ஏறக்குறைய பாதியை கைவசப்படுத்தியிருக்கும் இந்நிறுவனம் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பல்லாயிரக்கணக்கான உணவகங்களுடன் பிரம்மாண்டமாக கிளை பரப்பி நிற்கிறது.
அதிகபடியான கலோரிகள் கொண்ட துரித உணவுகளால் உருவாகும் மோசமான விளைவுகளில் ஒன்று உடல் பருமன். அமெரிக்கர்களில் பாதிக்கும் மேல் ஓபெசிடி எனப்படும் அதிக உடல் பருமன் கொண்டவர்கள். குழந்தைகளில் 37 விழுக்காடு பேர் தேவையில்லாத உடல் பருமனுடன் இருக்கிறார்கள் என்கிறது ஓர் ஆய்வு.
இதய நோய், நீரிழிவு, கல்லீரல் பாதிப்பு ஆகியவற்றின் தோற்றுவாயாக உடல் பருமன் இருக்கிறது.
தனது வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த மார்கன், இரண்டு பருமனான பெண்கள், தங்களது அதிக உடல் பருமனுக்கு மெக் டொனால்ஸ் உணவுகளே காரணம் எனக் கூறுவதை காண்கிறார். அப்பொழுது அவர் மனசுக்குள் ஓர் எண்ணம். அந்த எண்ணமே சூப்பர் சைஸ் மீ விவரணப் படமாக உருவாகிறது.
சூப்பர் சைஸ் மீ படத்தில், நோயில்லாத ஒருவர் மருத்துவரை எதிர்கொள்ளும் கலகலப்பான மனநிலையுடன் தன்னைப் பரிசோதிக்கும் மருத்துவர்களுடன் உரையாடுகிறார் மார்கன். மருத்துவர்கள் அவரைப் பரிசோதித்து குறிப்பெடுத்துக் கொள்கின்றனர். பிறகு பார்வையாளர்களுக்கு தனது திட்டத்தை விளக்குகிறார் மார்கன்.
தொடர்ந்து முப்பது நாட்கள் தினம் மூன்று வேளை உணவையும் மெக் டொனால்ஸ் துரித உணவகத்தில் எடுத்துக் கொள்வது. இரண்டாவது, முப்பது நாட்களுக்குள் மெக் டொனால்ஸின் மெனு கார்டில் உள்ள உணவுகள் அனைத்தையும் ஒரு முறையாவது சாப்பிடுவது.
திட்டம் தயாரானதும் மார்கனின் பயணம் தொடங்குகிறது. முதல் நாள் தனது மான்ஹட்டன் வீட்டின் அருகிலுள்ள மெக் டொனால்ஸ் துரித உணவகத்தில் காலை உணவை எடுத்துக் கொள்கிறார். பிறகு வெவ்வேறு வாகனங்கள். வெவ்வேறு நகரங்கள். ஆனால் மூன்று வேளையும் அதே மெக்டொனால்ஸ் துரித உணவுகள்; தண்ணீர் உட்பட.
நாட்கள் நகர நகர மார்கனின் உடல்நிலை மோசமாவதை பார்வையாளர்களால் உணர முடிகிறது. ஐந்தாவது நாள் சோர்விலும், உடல் தளர்ச்சியிலும் பாதிக்கப்படுகிறார் மார்கன். உடல் எடையும் கணிசமான அளவு அதிகரித்திருக்கிறது. அவரை பரிசோதிக்கும் மருத்துவர், மார்கனின் கல்லீரல் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இந்தப் பைத்தியக்காரத்தனத்தை நிறுத்திவிடும்படியும் கூறுகிறார்.
ஆனால், மார்கனின் பயணம் தொடர்கிறது. மூன்று வேளை உணவுடன் தினம் ஐயாயிரம் அடிகள் நடப்பதையும் தனது முப்பது நாள் திட்டத்தில் மார்கன் சேர்த்துக் கொண்டிருந்தார். இது ஒரு அமெரிக்கன் தினசரி நடக்கும் சராசரி தூரம். பயணத்தின் நடுவே மருத்துவர்கள், உடற்பயிற்சி ஆசிரியர்கள், அதிக உடல் பருமன் கொண்டவர்கள் ஆகியோரை சந்தித்து அவர்களுடனான உரையாடலையும் படத்தில் சேர்த்துள்ளார் மார்கன்.
முப்பது நாள் முடிவில் மார்கனின் உடல்நிலை மிகவும் மோசமடைகிறது. இறுதிகட்ட சோதனையில் மார்கனின் உடல் எடை 95.35 கிலோ கிராமாக அதிகரித்திருப்பது தெரிய வருகிறத. இதேபோல சர்க்கரை அளவும், கொழுப்பும் நம்ப முடியாத அளவு அதிகரித்துள்ளது. படத்தின் உச்சமாக, மார்கனின் அன்றைய காதலியும் இந்நாள் மனைவியுமான அலெக்ஸான்ட்ரா ஜெபிசன் பேசுகிறார். மார்கன் மெக் டொனால்ஸ் உணவை எடுத்துக் கொண்ட காலத்தில் அவர் சோர்ந்து போயிருப்பதை தன்னால் உணர முடிந்தது என்றும், மார்கனின் செக்ஸ் செயல்பாடுகளை மெக் டொனால்ஸ் பெருமளவு பாதித்தது என்றும் அவர் கூறும்போது நாம் அதிர்ந்து போகிறோம்.
அமெரிக்க திரை வரலாற்றில் அதிகம் வசூல் செய்த விவரணப் படங்களில் ஏழாவது இடம் பிடித்த மார்கனின் இப்படம் அதன் உள்ளடக்கத்துக்காக ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. படம் வெளியான பின் மெக் டொனால்ஸ் பல்வேறு நெருக்கடிகளுக்கு ஆளானது. மார்கன் ஒரு சராசரி மனிதன் எடுத்துக் கொள்ளும் கலோரிகளை விட அதிக கலோரிகள் கொண்ட உணவுகளை எடுத்துக் கொண்டார் என்ற அதன் குற்றச்சாட்டு பயனில்லாமல் போனது. நெருக்கடிகளிலிருந்து மீள, படம் வெளியான இரண்டு மாதங்களுக்குள் மெக் டொனால்ஸ் அறிவிப்பு ஒன்றை வெளியிட வேண்டி வந்தது. அதில், ஆரோக்கியமான உணவு விஷயத்தில் தீவிர கவனம் எடுத்துக் கொள்ளப்படும் என்றும், சூப்பர் சைஸ் மீ யில் காட்டப்பட்ட மெக் டொனால்ஸ் மெனுவில் உள்ள எந்த உணவும் இனி விநியோகிக்கப்பட மாட்டாது எனவும் உறுதி அளித்தது.
தமிழர்களின் கனவுகளில் தமிழ்நாட்டின் கலையும், கலாச்சாரமும், கிராமங்களும், எளிய வாழ்க்கை முறையும், நவதானியங்களும் சுத்தமாக இட நீக்கம் செய்யப்பட்டு பீட்சாவும், கெண்டகி சிக்கனும் நிறைந்த கார்ப்பரேட் கனவுகள் விதைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் உலகமயமாக்கலின் தவிர்க்க முடியாத கொடையாக மெக் டொனால்சும் இந்தியாவுக்குள் கடைபரப்பியிருக்கிறது.
பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருப்பது நிரூபிக்கப்பட்ட பின்பும் கோக்கும் பெப்சியும் தாராளமாக இந்தியாவில் கிடைக்கிறது. இவற்றை வாங்க நமக்கு எந்த மனத்தடையும் இல்லை. நமது இந்த விழிப்புணர்வின் பின்னணியில் மெக் டொனால்ஸின் வருகையை எண்ணிப் பார்க்கும்போது அச்சமே மேலோங்குகிறது.
சூப்பர் சைஸ் மீ படம் குறித்து சொல்லும்போது, சரியான நேரத்தில் நாங்கள் அதை எடுத்தோம் என்றார் மார்கன். அதே போன்றதொரு படத்தை தமிழிலும் எடுக்க இது சரியான நேரம்தான். என்ன செய்வது மார்கன் ஸ்பெர்லாக்குகள் நம்மிடையே இல்லையே!