படிக்காதவன் என்று பெயர் வைத்ததால் லாஜிக் பற்றி எந்தக் கவலையும் படவில்லை இயக்குனர். இதனால் தமிழ் சினிமாவுக்கு லாபம் மற்றுமொரு கமர்ஷியல் படம். ஆனால், நமக்கு...?படித்த குடும்பத்தில் படிக்காத ஒரேயொருவர் கடைக்குட்டி தனுஷ். பத்தாம் வகுப்பையே தாண்டாத இவரை படுத்தியெடுக்கிறார் படித்த தந்தை, பிரதாப் போத்தன். இதிலிருந்து தப்பிக்க என்ன வழி? நண்பர்கள் குழாம் டூட்டோரியல் காலேஜில் சேரச் சொல்கிறது.
ஆனால், காலேஜையே இழுத்து மூடும் அளவுக்கு ரவுசு காட்டுகிறார் தனுஷ். படித்த பெண்ணை காதலித்து மணந்தால் தானாக கௌரவம் வந்து சேரும் என அடுத்த ஐடியா கொடுக்கிறார்கள் நண்பர்கள். தனுஷும் கல்லூரியில் படிக்கும் தமன்னாவை காதலிக்கிறார். தமிழ் சினிமாவின் வழமையான மோதலுக்குப் பின் தமன்னாவும் தனுஷை காதலிக்கிறார்.
இடைவேளை வரை இதுபோதும். அதற்குப் பிறகு? வருகிறார்கள் தடித்தடியாக மூன்று வில்லன்கள். ஒருவர் தமன்னாவின் அடிதடி அப்பா (சுமன்). இனனொருவர் அவரது எதிரி (சாயாஜி ஷிண்டே). மூன்றாவது அதுல் குல்கர்னி. மூவரையும் தன்னுடைய பென்சில் தேகத்தால் துவட்டியெடுத்து காதலியின் கரம் பிடிக்கிறார் தனுஷ்.
படத்தை காப்பாற்றுவது தனுஷின் நடிப்பு. டைமிங் காமெடியும், சரவெடி ஆக்சனும் தனுஷுக்கு சரளமாக வருகிறது. தமன்னாவை இவர் ரூட் விடும் இடங்கள் கலகலப்பானவை. மயில்சாமி, கணேஷ், சுமன் ஷெட்டி இவரது உருப்படாத நண்பர்கள். உருப்படியான சில காமெடிக்கு இவர்களே உத்தரவாதம்.
தமன்னாவுக்கு அழகை காட்டும் வேடம். நடிப்பு? அடுத்தப் படத்தில்தான் பார்க்க வேண்டும். விவேக் சிரிக்க வைக்கும் அளவுக்கு சித்திரவதையும் செய்கிறார். குறிப்பாக அந்த கோயில் குளத்தில் குளிக்கும் காட்சி. கெட்டப் போடாமல் நடிக்கவே வராதோ? மாத்தி யோசிங்க சார்.
தனுஷை திடீரென்று வில்லன்கள் தாக்குவதும், அவர்களின் குறி தனுஷ் அல்ல தமன்னா என தெரிய வருவதும் திரைக்கதையை விறுவிறுப்பாக்குகிறது. ஆனால், அடுத்த காட்சியிலேயே வழக்கமான ஃபார்முலாவுக்குள் படம் செட்டாகி விடுவது ஏமாற்றம்.
சுமன், சாயாஜி ஷிண்டே, அதுல் குல்கர்னி மூவரும் வீணடிக்கப் பட்டிருக்கிறார்கள். சேத்தன், தேவதர்ஷினி, ஷர்மிளா ஆகியோரும் படத்தில் உண்டு. மணி சர்மாவின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் சுமார். கதைக்கு ஏற்ற ஒளிப்பதிவு. காமெடியில் ஜெயிக்கும் இயக்குனர், ஆக்சனில் அளவுக்கதிகமான ஆந்திர காரத்தால் கோட்டை விடுகிறார்.
படிக்காதவன் - முட்டாளில்லை... புத்திசாலியுமில்லை.