Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிலம்பாட்டம்

Advertiesment
சிலம்பாட்டம்
webdunia photoWD
கடவுளை நினைத்து கண்மூடி உருகும் சிம்புவின் குரல் கேட்டு, மதம் பிடித்த கோயில் யானை, பூனையாக பம்முகிறது. அட, சிம்பு திருந்திவிட்டாரா என ஆச்ச‌ரியப்பட்டால், அடுத்த காட்சியிலேயே அக்ரஹார கும‌ரிகளுக்கு பஞ்சாமிர்தம் பிசைய கற்றுத் தருகிறார். மாற்றம் ஒன்றே மாறாதது தத்துவம் சிம்புவுக்கு பொருந்தாது போல.

அக்ரஹாரத்தில் தாத்தா நெடுமுடி வேணுவின் பராம‌ரிப்பில் வளர்க்கப்படும் அம்மாஞ்சி பிள்ளை சிம்பு. ஊருக்கு பயந்தவராக தெ‌ரியும் அவர் திரைமறைவில் ரவுடிகளை பந்தாடுகிறார்.

இதனிடையில் சிறையில் இருக்கும் பிரபுவின் ஆட்கள் எம்.பி. ஆகப் போகும் ‌கிஷோரை கொலை செய்ய முயல்கின்றனர். அவர்களில் ஒருவனை கிஷோரின் ஆட்களிடமிருந்து காப்பாற்றுகிறார் சிம்பு. சிறையிலிருந்து விடுதலையாகும் பிரபு சிம்புவை சந்தித்து நீ என் தம்பியின் மகன் என்கிறார். பிளாஷ்பேக் வி‌ரிகிறது.

பிரபுவும், சிம்புவும் (அப்பா சிம்பு) அண்ணன் தம்பிகள். ஊரை ஏமாற்றும் பங்காளிகளுக்கெதிராக கொம்பு சீவி நிற்கிறார் சிம்பு. அவரை எதுவும் செய்ய முடியாது என்பதை உணரும் பங்காளி பொன்வண்ணன் தன்னைத்தானே குத்திக் கொண்டு பழியை சிம்பு மீது போடுகிறார். அப்பாவின் சாவுக்கு காரணம் சிம்புதான் என்று நினைக்கும் பொன்வண்ணனின் பத்து வயது மகன் (கிஷோர்) சிம்புவின் குடும்பத்தினரை கொலை செய்கிறான்.

தொடர்ந்து நடக்கும் சண்டையில் சிம்பு கொல்லப்படுகிறார். பிரபு ஜெயிலுக்கு போகிறார். சிம்புவின் மனைவி சினேகாவை தன்னுடன் அழைத்து செல்லும் அவரது அப்பா நெடுமுடிவேணு, சினேகாவுக்குப் பிறக்கும் மகனை யாருக்கும் தெ‌ரியாமல் அடிதடி அறியாத அம்மாஞ்சியாக வளர்க்கிறார்.

பிளாஷ்பேக் தெ‌ரிய வந்ததும் அக்ரஹார வேசத்துக்கு விடை கொடுத்து வில்லன் கிஷோரை பழி தீர்க்கிறார் சிம்பு.

அப்பா, மகன் என சிம்புவுக்கு இரண்டு வேடம். முறுக்கிய மீசையுடன் அப்பா தமிழரசன் வேடத்தில் சிம்புவின் நடிப்பு மிடுக்கு. அக்ரஹார காட்சிகளில் வக்கிரம் தலைகாட்டுகிறது. அங்குள்ள பெண்களெல்லாம் இப்படியா ஆண்களை ஈஸிக் கொண்டு தி‌ரிகிறார்கள்?

webdunia
webdunia photoWD
சனா கான் இளமை பூ‌ரிக்கும் அறிமுகம். காலம் காலமாக தமிழ் சினிமா அக்ரஹார பெண்கள் செய்யும் அதே விஷயங்களை இவரும் செய்கிறார். பிளாஷ்பேக்கில் வரும் சினேகாவும் அப்படியே.

நிரோஷா, யுவராணி இருவரும் வீணடிக்கப்பட்டவர்கள் லிஸ்டில் வருகிறார்கள். பிரபுவுக்கும் அதிக வேலையில்லை. கிஷோரின் வழக்கமான வில்லத்தனம் பெரும் சலிப்பு. சாமாவாக வரும் சந்தானத்தின் பேச்சில் சாக்கடை வாசம்.

இளமை பொங்கும் யுவனின் இசை மனதில் தங்கும் விதமாக இல்லை. பார்ட்டி பாடல் இன்னும் பல மாதங்கள் இளசுகளின் ஹாட் லிஸ்டில் இடம் பிடித்திருக்கும். சிம்புவின் நடனம் ரசிக்க வைக்கிறது. அதே நேரம் ரசிக்க வேண்டும் என்பதற்காக அவர் கஷ்டப்பட்டு ஸ்டெப்கள் போடும் போது, நடனம் என்பதிலிருந்து உடற்பயிற்சியாக அது மாறிவிடுகிறது. குறிப்பாக நலந்தானா பாடலின் இறுதிப் பகுதி. மதியின் கேமரா படத்தின் நிறைவான விஷயம்.

அக்ரஹாரத்து சிம்புவை சுற்றி ஏதோ ரகசியம் இருப்பதுபோல் திரைக்கதை அமைத்திருப்பதால், பிளாஷ்பேக்கில் வரும் சிம்புவும் இவரும் ஒன்றுதானோ என பார்வையாளர்கள் தவறாக நினைக்கும் வாய்ப்பு அதிகமிருக்கிறது.

திரைக்கதையின் விதிகள் தெ‌ரியாமல் ஆடியிருக்கிறார் இயக்குனர்.

Share this Story:

Follow Webdunia tamil