மலையாளத்தில் இயக்கிய சிந்தாமணி கொல கேஸை தமிழில் எல்லாம் அவன் செயலாக ரீ-மேக் செய்திருக்கிறார், ஷாஜி கைலாஷ்.
சுரேஷ்கோபியின் முரட்டு வழக்கறிஞர் வேடத்தில் கச்சிதமாக பொருந்துகிறார், புதிய ஹீரோ ஆர்.கே. குற்றவாளிகளை தனது வாதத்திறமையால் விடுவித்து எவிடென்சே இல்லாமல் எமலோகம் அனுப்புவது இவரது ஸ்டைல்.
சிந்தாமணி என்ற மருத்துவ கல்லூரி மாணவி சக மாணவிகளால் ராகிங் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கு ஆர்.கே.யிடம் வருகிறது. வழக்கம்போல அந்த மாணவிகளை தப்ப வைக்கும் ஆர்.கே., மாணவிகளை போட்டுத் தள்ளுவார் என எதிர்பார்த்தால், திடீர் திருப்பம்.
சிந்தாமணியை கொலை செய்தது அவர்கள் இல்லை. உண்மையான குற்றவாளிகள் யார்? ஆர்.கே. எப்படி அவர்களை பழி வாங்கினார் என்பதை ரத்தமும், சத்தமுமாக சொல்லியிருக்கிறார்கள்.
லக்ஷ்மன் கிருஷ்ணன் என்ற கொலைகார வக்கீல் வேடத்தில் அதிக கொலையும், அளவுக்கு மீறிய டயலாக்குமாக அசத்தியிருக்கிறார் ஆர்.கே. கோர்ட் காட்சிகள் சுவாரஸியம். சிந்தாமணியாக வரும் பாமா அனுதாபத்தை அள்ளிக் கொண்டு இடையிலேயே செத்துப் போகிறார். மணிவண்ணனுக்கு கிளிசரின் வேடம்.
என்.ஆர்.ஐ. கல்லூரி மாணவிகளின் ராகிங் கொடுமைகள் அநியாயத்துக்கு ஓவர். வடிவேலின் காமெடி சலிக்கத் தொடங்கும் போது முடிந்து போவதால் ஆறுதல். ரகுவரன், நாசர், சுகன்யா என அனைவருக்கும் வந்துபோகும் வேடம். முரட்டு வக்கீல் வேடம் ரோஜாவுக்கு இயல்பாக பொருந்தி விடுகிறது.
குரலை உயர்த்தாமல் வில்லத்தனம் செய்வது எப்படி என்பதை யாராவது ஆசிஷ் வித்யார்த்திக்கு சொல்லித்தந்தால் நல்லது. ஒரேயொரு பாடல் என்பதால் படத்தின் விறுவிறுப்பு குறையவில்லை. படத்தின் மிகப் பெரிய ப்ளஸ், ஒளிப்பதிவு. ஆக்சன், படத்துக்குரிய லைட்டிங், கோணங்கள். சபாஷ் ராஜரத்னம்.
பாமாவை சக மாணவிகள் கொலை செய்வதாக காட்டிவிட்டு அவர்கள் கொலை செய்யவில்லை என விளக்குவதில் நிறைய குழப்பம். தவிர்த்திருந்தால் இயக்குனரின் செயல் முழுமை பெற்றிருக்கும்.