பாகன் இல்லாத யானையாக திக்கு தெரியாமல் ஓடி சுபத்தில் முடிகிறது ஏகன். தித்திப்பான காமெடி முதல் பகுதி மட்டுமே படத்தின் தும்பிக்கை... ஸாரி நம்பிக்கை.ஒன் மேன் ஆர்மி என்று அப்பா நாசரால் பாராட்டப்படும் இளம் போலீஸ் அதிகாரி அஜித். ஹாங்காங்கில் ஒரு அஸைன்மெண்ட்டை முடித்துவிட்டு வருகிறவருக்கு தயாராக இருக்கிறது இன்னொரு வேலை.
வில்லன் சுமனுக்கு பயந்து தலைமறைவாக இருக்கிறார் அவரின் முன்னாள் கூட்டாளி தேவன். அப்ரூவராக தீர்மானித்திருக்கும் தேவனால் தனக்கு சவப்பெட்டி தயாராகிவிடும் என்பதை உணர்ந்த சுமன் அவரை கொலை செய்ய முயல்கிறார்.
சுமனால் தேவனின் மகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என நினைக்கும் போலீஸ் அவரை காப்பாற்றும் பொறுப்புடன், தேவனை கண்டுபிடிக்கும் வேலையையும் அஜித் வசம் ஒப்படைக்கிறது. கடைமையை காமெடியுடன் கச்சிதமாக அஜித் முடிப்பதுடன் சுபம்.
இந்த பெரிய வயிற்றை வைத்து நான் எப்படி ஸ்டுடண்டா காலேஜுக்கு போறது என்று தன்னைத்தானே கமெண்ட் பண்ணும் அஜித் அடுத்த காட்சியில் சிக்கென்று ஸ்டூடண்டாக வந்து நிற்பதுடன் தொடங்குகிறது காமெடி கலாட்டா.
கல்லூரி முதல்வர் ஜெயராமும் சத்யனும் சேர்ந்து நடத்தும் நகைச்சுவை தர்பார் சிம்ப்ளி சூப்பர். அவர்களுடன் அஜித்தின் ஜுனியர் ஹனிஃபாவும் சேரும்போது சிரிப்பில் புரையேறுகிறது.
அஜித்துக்கு காமெடி நன்றாக வரும் என்பதை வில்லனுக்குப் பிறகு நிருபித்திருக்கிறது ஏகன். நயன்தாராவை பார்த்ததும் காதல் மன்னனில் வரும் உனை பார்த்த பின்பு நான் நானாக இல்லையே பாடலை பாடி கலாய்ப்பது சரவெடி.
நடனங்களில் புது அஜித். உபயம் ராஜு சுந்தரம். கிளாமர் உடையில் புரஃபஸரா, ஸ்டூடண்டா என திகைக்க வைக்கிறார் நயன்தாரா. டூயட்டுடன் அவரின் பணி இனிதே நிறைவேறுகிறது.
தேவனின் மகள் பியாவின் பாதுகாப்புக்காக அவர் படிக்கும் கல்லூரிக்கு மாணவராக அஜித் வந்த பிறகே அவருக்கு ஒரு தம்பி - நவ்தீப் - இருக்கும் விவரம் தெரிய வருகிறது. பிளாஷ்பேக் காட்சிகள் தவிர்த்திருக்க வேண்டிய கொட்டாவி. சும்மா வந்து போகும் வேடத்துக்கு சுமனா? வேஸ்ட்.
சண்டைக் காட்சிகளில் அஜித்துடன் ஸ்கோர் பண்ணுகிறது அர்ஜுன் ஜின்னாவின் கேமரா. பாடல் காட்சிகளும் ஜோர். பின்னணி இசையில் பார்டரில் பாஸாகிறார் யுவன். ஏ சாலா பாடல் அஜித் ரசிகர்களின் பிபி-யை ஏறுமுகமாக்கும்.
ஆக்சனில் தொடங்கி, காமெடியில் புரண்டு, சென்டிமெண்டில் தோய்ந்து எப்படி முடிப்பது என்று தெரியாமல் எப்படியோ முடித்திருக்கிறார் இயக்குனர் ராஜு சுந்தரம். மெய்ன் ஹுன் நா படத்தின் ரீ-மேக் இல்லை என்று அவர் சொன்னாலும் காட்சிக்கு காட்சி அதிலிருந்தே எடுத்திருக்கிறார்கள்.
ரீ-மேக் அத்தனை சாதாரணமான வேலையில்லை என்பதை ராஜு சுந்தரம் இப்போது உணர்ந்திருப்பார்.
பாகன் (இயக்குனர்) சரியில்லாததால் ஏகன் ஏமாற்றமே.