ஒரு கொலையை அதற்கான காரணத்தை பல்வேறு கோணங்களில் அலசியிருக்கிறார் அறிமுக இயக்குநர் தினேஷ் செல்வராஜ்.
சந்தனக் கடத்தல் வீரப்பனை நினைவுப்படுத்தும் கதை. காட்டு கொள்ளையன் வீரய்யன் மந்திரியை கடத்தி வைத்து மூன்று கோடி பணம் கேட்கிறான். அதிரடிப் படையின் நடவடிக்கையால் மந்திரியை சுட்டுக் கொன்றுவிட்டு குண்டுகாயத்துடன் தப்பிக்கிறான் வீரய்யன். அவனுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கும் டாக்டர் பிரேமும் கொல்லப்படுகிறார்.
இது நடந்த இருபது வருடங்களுக்குப் பிறகு நான்தான் இறந்துபோன டாக்டர் என்று கூறி கிராமத்துக்குள் நுழைகிறார் அனூப் குமார். முற்பிறவியில் நான் பிரேமாக இருந்தேன் என்று கூறி, அதற்கு ஆதாரமாக பழைய சம்பவங்களை அவர் கூறும்போது, திரைக்கதை வேகம் பிடிக்கிறது.
அனூப்பைத் தேடி அவரது மனைவி பூர்ணிதாவும் கிராமத்துக்கு வருகிறார். இவர்களின் மீது சந்தேகம் கொள்ளும் போலிஸ் அதிகாரி சந்திரபோஸ் அனூப் குமாரை கண்காணிக்கிறார்.
அனூப்பின் நோக்கம் என்ன? உண்மையில் வீரய்யனையும், டாக்டர் பிரேமையும் கொன்றவர்கள் யார்? சஸ்பென்ஸ் குறையாமல் கதையை முடித்துள்ளார் இயக்குநர்.
படத்தின் ஆச்சரியம் அதிர்ச்சி இரண்டும் டாக்டர் பிரேமின் மனைவியாக வரும் மீரா வாசுதேவன் தான். சர்ச்சில் வளரும் மீரா, பிரேமின் மனைவியாக இறுதியில் கணவனை கொன்றவர்களை பழிவாங்குகிறார். இருபது வருடங்களுக்குப் பிறகும் அவரை அதே இளமையுடன் காட்டியிருப்பது காலச் சறுக்கல்.
அனூப் குமார் நம்பிக்கை தரும் புதுவரவு. வீரய்யன் மறைத்து வைத்த பணத்திற்காகவே அனூப்பும் அவரது மனைவி பூர்ணிதாவும் வந்திருக்கிறார்கள் என்பது தெரிய வரும்போது பேய் கதை த்ரில்லராக உருமாறுகிறது.
அளவுக்கு மீறிய நேர்மையுடன் காண்பிக்கும்போதே போலிஸ் அதிகாரி சந்திரபோஸ்தான் அனைத்துக்கும் காரணகர்த்தா என்பது தெரிந்து விடுகிறது.
ஒரு கொலையின் பின்னணியில் அதன் காரணத்தை பலமுனைகளில் ஆராயும் யுக்தி, கத்திக்கப்பலின் ப்ளஸ். அதுவே கதையை சில இடங்களில் கத்தியாகவும் கிழித்திருக்கிறது.
இசையும், ஒளிப்பதிவும் கதைக்கு இயைந்து செல்கிறது. குழந்தை நட்சத்திரத்தை அனூப்புக்கு ஜோடியாக்கி விட்டார்களோ என்று நினைவுக்கும் வகையில் இருக்கிறார் பூர்ணிதா.
துப்பாக்கி முனையில் போலிசை நிறுத்தி மீரா வாசுதேவன் பக்கம் பக்கமாக வசனம் பேசும்போது பாதி தியேட்டர் காலியாகி விடுகிறது.
கத்திக் கப்பல் - பரிதாபத்தில் முடியும் பரிசோதனை முயற்சி.