ஜாலி திருடனை வைத்து கோலி விளையாடும் போலீஸ் கதை. திருடன் சீரியஸாகும் போது தீப்பிடிக்கிறது திரைக்கதை.
சிட்டியில் இளம் பெண்கள் திடீர் திடீரென்று கற்பழித்து கொல்லப்படுகிறார்கள். குற்றவாளிகளை கண்டுபிடிக்க தீவிர தேடுதலில் இறங்குகிறார் போலீஸ் கமிஷனர் (பிஜு மேனன்). அவரது காரில் குண்டு வைக்கிறார்கள் எதிரிகள். நேர்மையான அவர் மீது லஞ்சப் புகாரும் கூறப்படுகிறது.
குழப்ப ரூட்டில் செல்லும் கதையில் குறுக்கே வருகிறார் ஜாலி திருடன் வேலு (கிருஷ்ணா). கமிஷனர் காரை திருட முயலும்போது கார் வெடிக்கிறது. தன்னை அறியாமலே கமிஷனரை காப்பாற்றியதை உணர்கிறான் வேலு. அவனை அழைத்து வீட்டில் விருந்து வைக்கிறார் போலீஸ் கமிஷனர்.
இதனிடையில் வேலுவின் அக்கவுண்டில் லட்சம் லட்சமாக பணம் சேர்கிறது. யார் பணத்தை போடுகிறார்கள் என்பது தெரியாத நிலையில் அதனை கண்டுபிடிக்க முயல்கிறார் வேலுவின் தந்தை (பிரகாஷ் ராஜ்). இந்த முயற்சியில் அவர் கொல்லப்படுகிறார்.
தந்தை இறந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் கமிஷனரின் கொலைப் பழியும் வேலு மீது விழுகிறது. தன்னை வைத்து பகடையாடும் நிஜக் குற்றவாளியை வேலு கண்டுபிடித்து தண்டிப்பதுடன் சுபம்.
அறிமுக நடிகராம் கிருஷ்ணா. அனுபவ நடிகர்போல் நடிப்பில் பின்னியிருக்கிறார். பன்ச் வசனம் பக்கம் போகாமலிருந்தால் கோலிவுட்டில் வூடு கட்டி அடிக்கலாம். இரவு நண்பனுடன் வீடு திரும்பும் மகனுக்கு பொறுப்பாக தோசை சுட்டுக் கொடுத்து திருந்தவே மாட்டிங்களாடா என்று செல்லமாக கடிந்துகொள்ளும் அப்பாவாக பிரகாஷ் ராஜ்.
அவர்கள் பெட்டி படுக்கையுடன் கிளம்பும் போதுதான், அது திருட வந்த வீடு என்பதும், திருடிய வீட்டிலேயே தோசை சுட்டு சாப்பிட்டிருக்கிறார்கள் என்பதும் தெரிய வருகிறது. உழைப்பை திருடக் கொடுக்கிறதுக்கு பதிலாக திருடுறதே உழைப்பா இருந்தா பெட்டர் இல்லையா என்று பிரகாஷ் ராஜ் திருட்டுத் தொழிலுக்கு வியாக்கியானம் கொடுக்கும் இடம் ரகளை. அமைதியாக வந்து அதிரடி செய்கிறார் மனிதர்.
திருடனை காதலிக்கும் வழக்கமான தமிழ் சினிமா நாயகி ஜனனி. டூயட்டுக்கும், திருடனுக்கும் உதவுவதுடன் இவர் வேலை முடிந்து விடுகிறது.
நேர்மையான போலீஸ் கமிஷனர் பிஜு மேனன், மிரட்டலுக்கு பணிந்து போகும் டி.ஜி.பி. அழகம்பெருமாள், அரசியல்வாதி ராதாரவி, லைவ் செக்ஸ் ரசிகர் திலகன் என அனைவரும் கதாபாத்திரத்துக்கு கச்சிதமாக பொருந்துகிறார்கள்.
குற்றவாளி கமிஷனராக இருக்குமோ என்று ஆரம்பமாகும் சந்தேகம், டி.ஜி.பி., அமைச்சர் என்று தாவத்தாவி உண்மை குற்வாளியில் வந்து நிற்கும்போது, அட போங்கப்பா என்று அலுப்பாகிறது. யோசிக்காமல் கத்திரி போட்டிருக்கலாம். பாடல்களில் இரண்டு தேறினாலும், க்ரைம் த்ரில்லருக்கு அவைகளும் ஸ்பீடு பிரேக்கர்கள்தான்.
இயல்பை மீறாத வசனத்திற்கு ஒரு சபாஷ். எடிட்டிங், ஒளிப்பதிவு கதையை சிதைக்காதது ஆறுதல்.
வித்தியாசமான கதையில் ஆங்காங்கே திரைக்கதை தொய்வதை தவிர்த்திருந்தால், அலிபாபாவை ஆயிரத்தில் ஒருவன் என்றிருக்கலாம். இப்போது ஆயிரத்தில் இன்னொருவன்!