Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தாம்தூம் - விமர்சனம்!

தாம்தூம் - விமர்சனம்!
, வெள்ளி, 5 செப்டம்பர் 2008 (14:44 IST)
மறைந்த இயக்குனர் ஜீவாவின் விஷுவல் ஆக்சன் கவிதை தாம்தூம். திரைக்கதையின் எழுத்துப் பிழைகளை தவிர்த்திருந்தால், கவிதையின் மதிப்பு இன்னும் உயர்த்திருக்கும்.

மருத்துவரான ஜெயம் ரவி பொள்ளாச்சிக்கு அக்கா அனு ஹாசனை பார்க்க வருகிறார். வந்த இடத்தில் கங்கனா ரனவத்தின் காதலில் விழுகிறார். சின்ன பிரச்சனைக்குப் பின் நிச்சயதார்த்தம் வரை செல்கிறது காதல்.
webdunia photoWD

திருமணத்திற்கு சொற்ப நாட்கள் இருக்கும் நிலையில், மாஸ்கோ கான்ஃபரன்சுக்கு ஜெயம் ரவியை அனுப்புகிறது இந்திய அரசு. அங்கு கொலை பழி ஒன்றில் மாட்டிக்கொள்கிறார்.

மொழி தெரியாத ஊர். தனது நிரபராதித்துவத்தை நிரூபிக்க முடியாத நிலை. ஹீரோ என்ன செய்வார்? ஆம், போலீசிடமிருந்து தப்பித்து உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்து, அந்நிய மண்ணில் ஜெயம் நாட்டுகிறார்.

கங்கனா ரனவத்துடனான காதல் காட்சிகளில் ஜெயம் ரவி இளம் ரவி. கதை ரஷ்யா சென்றபின் புயல் ரவி. படத்துக்குப் படம் மெருகேறி வருகிறது ரவியின் நடிப்பும், தோற்றமும். போலீஸ், போதை கும்பல் இரண்டுக்கும் நடுவில் மாட்டிக்கொண்டு அவர் தவிப்பதும், ஆவேசத்தில் ஏறி மிதிப்பதும் ரசிக்க முடிகிறது.

ஆடிக் காற்றில் பறக்கும் சருகு போல் இருக்கிறார் கங்கனா. கிராமத்துக்கு பொருந்தாத தோற்றம். நடிக்க தெரிந்திருப்பது ஆறுதல்.

நடிப்பிலும், அழகிலும் கங்கனாவை கார்னர் செய்கிறார் மாஸ்கோவின் தமிழ் வக்கீலாக வரும் லட்சுமிராய். இந்திய தூதரக அதிகாரியாக ஜெயராம். அமைதியான வில்லன். தூதரக பதவி என்பது நேர்மை மிகத் தேவைப்படும் ஒன்று. இவரோ போதை கும்பலுடன் பழக்கம் வைத்திருக்கிறார். இப்படியா இருக்கிறார்கள் இந்திய தூதரக அதிகாரிகள்?

படத்தின் ஒவ்வொரு பிரேமும் ஜீவாவின் இழப்பை பிரமாண்டப்படுத்துகின்றன. ரஷ்யாவின் அழகை ஜீவாவின் கேமரா அள்ளியிருக்கும் விதம் அபாரம். பாடல்களில் அரியர்ஸ் வைக்கவில்லை ஹாரிஸ். ஒவ்வொன்றும் துளி தேன்!

ரஷ்ய காட்சிகளுடன் கங்கனாவின் கிராமத்து சோகத்தை இணைத்திருப்பதில் தடுமாற்றம் தெரிகிறது. குண்டடி பட்டபின் பைக்கில் கைகளை விரித்து கங்கனாவின் நினைவில் ஜெயம் ரவி லயிப்பது, எதார்த்தத்தை சிதைக்கிறது.

நம்ப முடிகிற ஆக்சனும், லயிக்க முடிகிற பாடல்களும் தாம்தூமின் பலம். இந்த இரண்டிற்காகவும் திரைக்கதையின் பலவீனத்தை மறந்து ஒருமுறை படத்தை ரசிக்கலாம்!

Share this Story:

Follow Webdunia tamil