Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜெயம் கொண்டான் - விமர்சனம்!

Advertiesment
ஜெயம் கொண்டான் - விமர்சனம்!
, வியாழன், 4 செப்டம்பர் 2008 (15:16 IST)
வம்பை கண்டால் வளைந்து போகும் வினய்க்கு வண்டி வண்டியாக பிரச்சனைகள். சாதாரண ஜனங்கள் சார்பாக தாதாவிடம் 'பன்ச்' வசனம் பேசி கிளைமாக்ஸில் வினய் ஜெயம் கொள்வதை சுவாரஸ்யம் சேர்த்து சொல்ல முயன்றுள்ளார் அறிமுக இயக்குனர் கண்ணன்.

லண்டன் வேலையை உதறிவிட்டு சென்னையில் சொந்தமாக தொழில் தொடங்க வருகிறார் வினய். அப்பாவின் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்கே தடையாக இருக்கும் அவரின் வெளிநாட்டு வேலை, நடைமுறை உண்மை.
webdunia photoWD

சம்பாதித்த பணத்தை அப்பா சேமித்து வைத்திருப்பார் என்று நினைத்தால், அவர் இன்னொரு குடும்பத்தை உருவாக்கி வைத்துள்ளார் என்ற உண்மை வினய்க்கு தெரிய வருகிறது. தொழிலுக்கு முதலீடாக இருக்கும் ஒரே சொத்து திருமங்கலத்தில் இருக்கும் வீடு. அதனை விற்க முயலும்போது, தடையாக வருகிறார் அப்பாவின் இன்னொரு குடும்பத்தின் வாரிசான, லேகா வாஷிங்டன். லேகாவுக்கு அமெரிக்காவில் படிக்க பணம் வேண்டும். அவரின் ஒரே நம்பிக்கை திருமங்கல வீடு.

லோக்கல் தாதா கிஷோரின் துணையுடன் வீட்டை விற்க முய‌ல்கிறார் லேகா. அதனை தடுக்கிறார் வினய். இதில் ஏற்படும் கைகலப்பில் எதிர்பாராத விதமாக தாதாவின் மனைவி இறந்துபோக, கிஷோரின் கோபம் வினய் மீது திரும்புகிறது.

சராசரி இளைஞனுக்குரிய கனவு, ஆசை, எமோஷனுடன் உருவாக்கப்பட்டிருக்கிறது வினயின் கதாபாத்திரம். அதற்கு அவர் உயிர் கொடுத்திருக்கும் விதம் அலாதி. பிசிறடிக்காத நடிப்புக்கு தரலாம் ஒரு மெகா பொக்கே.

வினய் நெருங்கி வரும் போதெல்லாம், வெடுக்கென்று விலகிப் போகும் லேகா வாஷிங்டன், தங்கை கதாபாத்திரத்திற்கு சரியான தேர்வு. அன்பு நிறைந்த அழுத்தக்காரி.

பாவனாவை திருமங்கல வீட்டிலிருந்து காலி செய்ய, வினய் சொல்லும் பிளாஷ்பேக் புரூடாக்கள் ரசிக்க வைக்கின்றன. பாவனா சொந்தக் குரலில் பேசி நடித்துள்ளார். சாதாரணமான பேச்சு வழக்கில் இடையிடையே மட்டும் மதுரை தமிழ் மணக்கிறது. வசனத்தில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.

வில்லனுக்கும் (கிஷோர்) ஒரு காதல் கதை வைத்துள்ளார் இயக்குனர். சத்தம் போடாத, காரியத்தை கச்சிதமாக முடிக்கும் வில்லன், ஏதாவது செய்வார் என்று பார்த்தால் கிளைமாக்ஸ் பைட்டுக்கு மட்டுமே உதவுகிறார்.

அருமையாக உருத்திரளும் கதையில் காதலும், தங்கை பாசமும் பிற்பகுதியில் தொய்வை ஏற்படுத்துகின்றன. படத்தின் மற்றொரு குறை, விவேக். கதையுடன் பார்வையாளர்கள் ஒன்றிப் போகும் வேளைகளில் சூழலுக்கு பொருந்தாத மூன்றாம் தர டயலாக்குகளை அவிழ்த்து விடுகிறார். அதேநேரம், பாவனா வீட்டு மிளகு மண்டியில் வேலை பார்க்கும் சந்தானம் கமிஷனுக்கு ஆசைப்பட்டு, பாவனாவுக்கு எதிராக மாறும் காட்சிகள் கலகலப்பூட்டுகின்றன.

லேகா வாஷிங்டனின் அம்மாவாக வரும் மாளவிகா, தாதாவிடம் உதவி கேட்டு உதை வாங்கும் ஹனஃபா என சின்னச் சின்ன கதாபாத்திரங்களும் நினைவில் நிற்பது திரைக்கதையின் பலம். நான் வரைந்த சூரியன் பாடல் பார்க்க, கேட்க பரவசம். டூயட் தேவையா என்ற மகேந்திரனின் கேள்வியை இயக்குனர்கள் மறுபரிசீலனை செய்வது நலம்.

குறையில்லாத ஒளிப்பதிவு (சுப்ரமணியெம்), நிறைவான எடிட்டிங் (வி.டி. விஜயன்).

அருமையாக உருக்கொள்ளும் செறிவான கதையை காதல், சென்டிமெண்ட் என பிற்பகுதியில் பாதை மாற்றாமல் இருந்தால், ஜெயம் கொண்டான் நினைவில் நின்றிருக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil