சினிமா இயக்குனர் தலைவாசல் விஜயை கொலை செய்து, சூட்கேஸில் பார்சலாக்கி கூவத்தில் வீசுகிறான் கொலையாளி. அவன் யார்? எதற்கு கொலை செய்தான்? தலைவாசன் விஜயின் மனைவி, வக்கீல், திருடன், ரவுடி, சவ ஊர்வலத்தில் நடனம் ஆடுகிறவர் என சந்தேகம் பட்டாம்பூச்சியாக நபருக்கு நபர் தாவ, இறுதியில் கொலையாளி யார் என கண்டுபிடிப்பது கதை. வழக்கமான காதல், அடிதடி பாதையில் பயணிக்காததற்கு இயக்குனருக்கு சபாஷ். க்ரைம் த்ரில்லரில் திகட்டும் அளவுக்கு கவர்ச்சியை திணித்ததற்கு ஒரு குட்டு. தலைவாசல் விஜயின் பிணத்தை சூட்கேஸில் வைத்து கூவத்தில் வீசும் வக்கீல் பத்மாதான் கொலைகாரியோ என போலீஸைப் போல நாமும் சந்தேகப்படுகிறோம். இந்த சந்தேகத்தின் நிழல் தலைவாசல் விஜயின் மனைவி, திருடன், ரவுடி என வேறு வேறு நபர்கள் மீது விழுவது சுவாரஸ்யம்.
கணவர் வயதானவர் என்பதால் உளவுக்கார இளைஞனை கரெக்ட் பண்ணுகிறார் சோனா. கவர்ச்சி ஆறு கேள்விப் பட்டிருக்கிறோம். சோனா கடல். உறவுக்கார இளைஞனுடன் இவர் நடத்தும் கல்லாபம் இளமை சுனாமி. இதில் இரு பெண்களின் லெஸ்பியன் நடனம் வேறு.
பிக்பாக்கெட் திருடனுக்கும், போலீஸ் அதிகாரி போஸ் வெங்கட்டுக்கும் நடக்கும் சடுகுடு காமெடி கலக்கல்.
கொலைகாரனை கண்டுபிடிக்கும் போலீஸ் அவனை கோட்டை விடுவதும், கொலைகாரனின் எதிர்பாராத முடிவும் கிளைமாக்ஸின் எதிர்பார்ப்பை குறைத்துவிடுகிறது.
சுமாரான இசை. சராசரியான ஒளிப்பதிவு. திரைக்கதையை நகர்த்திச் செல்லும் சின்ன சுவாரஸ்யமும், சோனாவின் அன்லிமிடெட் கவர்ச்சியுமே படத்துக்கு பலம்.
கூட்டிக் கழித்தால் வருவது, பத்துக்கு மூன்று!