Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குசேலன் - விமர்சனம்!

Advertiesment
குசேலன் - விமர்சனம்!
, சனி, 2 ஆகஸ்ட் 2008 (16:42 IST)
இரு பால்ய நண்பர்கள். ஒருவர் பாப்பராகிவிட்ட பார்பர். இன்னொருவர் பாப்புலர் நடிகர். முப்பதாண்டுகளுக்குப் பின் இருவரும் சந்திக்கிறார்கள். பிரிந்தவர்கள் கூடினால்? அதே... கோடி இன்பம்!
webdunia photoWD

வறுமையின் பிடியிலும் தன்மானத்தை இழக்காத பார்பர் பாலு வேடத்தில் பசுபதி. நம்பி வந்த மனைவியை நன்றாக வைத்துக் கொள்ள முடியாத நெருடல்... குழந்தைகளின் ஸ்கூல் பீஸ் கட்ட முடியாத இயலாமை... சூப்பர் ஸ்டாராகிவிட்ட நண்பனை நெருங்குவதில் தயக்கம்... மிடில் கிளாஸ் தாழ்வு மனப்பாண்மையின் ஹைகிளாஸ் பிரதிபலிப்பு பசுபதியின் நடிப்பு... சபாஷ்!

ரஜினி சூப்பர் ஸ்டாராகவே வருவது புதுசு. வாசுவுக்கு இது நல்ல வாய்ப்பு. ரஜினியை அவரது ரசிகர்கள் எப்படி புகழ வேண்டும் என்று நினைக்கிறார்களோ, அப்படி புகழ்ந்திருக்கிறார். ரஜினி ஒரு சூப்பர் ஸ்டாராக என்ன பேச வேண்டும் என நினைக்கிறாரோ அனைத்தையும் பேச வைத்திருக்கிறார். இமயமலை பயணமா? விளக்கம் உண்டு. கமல் பற்றியா? பதில் உண்டு. அரசியலுக்கு வருவாரா? அதற்கு உண்டு விளக்கம். இறுதியில் வரும் ரஜினியின் மலரும் நினைவு மனதை கரைக்கும் அம்சம்.

நயன்தாரா நடிகை நயன்தாராவாகவே வருகிறார். அவர் வரும் காட்சிகள் எல்லாம் ஜில். வந்து போனதும் மனதிலிருந்து ஜிவ்! மனதில் தங்காத வேடம்.

ஹோம்லி கேரக்டரில் இன்றும் மீனாதான் ராணி. கொஞ்சும் பேச்சு இன்னும் அப்படியே!

வலுக்கட்டாயமாக ஆட்களை இழுத்து வந்து மொட்டையடிக்கிறார் வடிவேலு. அவரிடம் அகப்படுகிறவர்கள் எல்லாம் அய்யோ பாவம். நாமும்தான். லிவிங்ஸ்டனும் அவரது அடியாள் சந்தானபாரதியும் கிடைக்கிற சந்திலெல்லாம் சிரிக்க வைக்கிறார்கள்.

webdunia
webdunia photoWD

சினிமா சினிமா பாடலைத் தவிர மற்ற பாடல்களைக் கேட்க முடியவில்லை. என்ன ஆயிற்று ஜி.வி. பிரகாஷுக்கு, வெயிலோடு விளையாடிவரா இப்படி? நம்ப முடியவில்லை.

அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவும், கதையோட்டத்தை சிதைக்காத எடிட்டிங்கும் குசேலனின் நல்ல அம்சங்கள்.

முதல் பாதி இழுவையை படத்தின் கடைசி இருபது நிமிடங்கள் சரிகட்டுகின்றன. அதிலும் நண்பனை நினைத்து அழுவது ரஜினி என்பதால் காட்சிக்கு கூடுதல் அழுத்தம்.

பள்ளி நடத்தும் கன்னியாஸ்திரிகள் இப்படியா இருக்கிறார்கள்? ரஜினி பசுபதியின் நண்பர் என்று தெரிந்ததும் பசுபதியின் குழந்தைகளின் பீஸை பள்ளி நிர்வாகவே கட்டுவதும், பள்ளி விழாவுக்கு ரஜினி வரவேண்டும் என்பதற்காக எக்ஸ்ட்ராவாக குழைவதும்... வலுக்கட்டாயத் திணிப்பு.

ரஜினி படப்பிடிப்புக்காக பசுபதியின் ஊருக்கு வருகிறார். முதலில் அண்ணாமலை பார்ட் டூவின் படப்பிடிப்பு என காட்டுகிறார்கள். இன்னொரு காட்சியில் சந்திரமுகி பார்ட் டூ என்கிறார்கள். கவனப் பிழையா, காட்சிப் பிழையா?

ஏழ்மையில் இருப்பவன் இன்னொருவன் உயர ஏணியாக இருப்பதும், அவன் ஏழை நண்பனை கிளைமாக்ஸில் கட்டிக்கொண்டு அழுவதும் ஏற்கனவே பல விக்ரமன் படங்களில் பார்த்ததுதான். குசேலன் கிளைமாக்ஸ் விக்ரமனின் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் கிளைமாக்ஸையே பிரதிபலிக்கிறது. அப்படியானால் குசேலனின் பிளஸ்?

ரஜினி! இந்த மூன்றெழுத்து மந்திரமே குசேலனை குபேரனாக்கியிருக்கிறது!

குசேல‌ன் - ‌ட்ரெ‌ய்ல‌ர்!

Share this Story:

Follow Webdunia tamil