சுப்பிரமணியபுரம் - விமர்சனம்!
, வியாழன், 10 ஜூலை 2008 (18:33 IST)
28
வருடங்களுக்கு முன் ஐந்து நண்பர்களுக்கிடையே நடைபெற்ற சம்பவங்கள்தான் படத்தின் கதை. மதுரை மத்திய சிறையிலிருந்து வெளியே வரும் ஒரு கைதி, சிறை வாசலிலேயே கொல்லப்பட கொலையின் பின்னணியைக் காண 1980-ஐ நோக்கி நகர்கிறது கதை.
மதுரை - சுப்பிரமணியபுரத்தில் அழகன், பரமன், காசி, சித்தன், தும்கான் ஐவரும் நண்பர்கள். சித்தனின் சவுண்ட் சர்வீஸ் கடைதான் மற்ற நால்வருக்கும் புகலிடம். இவர்களில் அழகனும், உள்ளூர் பெரும்புள்ளி சோமு மகள் துளசியும் காதலிக்கிறார்கள். துளசியின் சித்தப்பாவின் தூண்டுதலால் அழகனும், பரமனும் ஒரு கொலை செய்ய நேர்கிறது. கொலைக்கு காரணமான துளசியின் சித்தப்பா, நண்பர்கள் இருவரையும் ஜாமீனில் எடுக்காமல் விட்டுவிடுகிறான். அவனைத் தீர்த்துக்கட்ட அழகனும், பரமனும் திட்டத்தோடு சிறையிலிருந்து வெளியே வருகிறார்கள்? அதன்பிறகு நடந்து என்ன? அழகன்-துளசி காதல் கைகூடியதா? என அடுத்தடுத்த திகில் திருப்பங்களோடு கிளைமேக்ஸை நோக்கி நகர்கிறது சுப்பிரமணியபுரம். பழைய ஸ்டெப் கட்டிங், பெல்பாட்டம், கண்ணாடி, பெரிய காலர் சட்டை, தாடி என 1980-க்கான எல்லா விஷயங்களையும் திரையில் விரிய விட்ட இயக்குனர் சசிக்குமாருக்கு ஒரு ஸ்பெஷல் பாராட்டு. இயக்கத்தில் மட்டுமின்றி, நடிப்பிலும் அசத்துகிறார். நண்பர்களாக வரும் ஜெய், கஞ்சா கருப்பு, மோகன், மாரி அனைவரும் அருமையான தேர்வு. அற்புதமான நடிப்பு. ஜெய்க்கு தமிழ் சினிமாவில் தனி இடமுண்டு என்று நிரூபித்துள்ளார். வில்லனாக வரும் சமுத்திரகனியின் நடிப்பு பாராட்டைப் பெற்றுச் செல்கிறது.
நட்புக்கும், காதலுக்கும், சமூகத்துக்கும் நிகழ்கின்ற உன்னதங்களை, உராய்வுகளை, சிக்கல்களை காட்சி வழியே பதிவு செய்துள்ள சுப்பிரமணியபுரம் இயக்குனர் விறுவிறுப்பும், வேகமும் குறையாத திரைக்கதை மூலம் நகர்த்திச் சென்றிருப்பது அருமை.
ஆர்.எஸ். கதிரின் ஒளிப்பதிவும், ஜேம்ஸ் வசந்தனின் இசையும் படத்துக்கு பலம் கூட்டுகின்றன.
முதல் காட்சி தொடங்கி, கிளைமாக்ஸ் வரை எதார்த்தம் குறையாமல் வேகத்தோடு செல்லும் 'சுப்பிரமணியபுரம்' தரமான படங்களின் வரிசையில் இடம்பெற்றுவிட்டது ஒன்றும் ஆச்சர்யமல்ல.