முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு!
, புதன், 9 ஜூலை 2008 (16:02 IST)
எம்மகனைத் தொடர்ந்து பரத் ஹீரோவாக நடிக்க திருமுருகன் இயக்கியுள்ள படம். எம்மகனை மனதில் வைத்துக்கொண்டு தியேட்டருக்குச் சென்றால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. முதல் கால் மணி நேரத்திலேயே, மீதம் இரண்டேகால் மணி நேரம் எப்படி இருக்கப் போகிறோம் என்கிற பீதிதான் மிஞ்சுகிறது.
ஒரு பட்டிக்காட்டு கல்லூரியில் விலங்கியல் மூன்றாமாண்டு படிக்கும் மாணவனாக பரத். அதே கல்லூரியில் கேண்டின் நடத்தும் பொன்வண்ணன் பரத்தின் தந்தை. தாயாக தாரா. ஏற்கனவே தனது மூத்த மகனை காதல் விவகாரத்தால் பலிகொடுத்த தாயும், தந்தையும் இரண்டாவது மகன் பரத்தை பொத்திப் பொத்தி வளர்க்கிறார்கள். இந்நிலையில் கல்லூரிக்கு முதலாமாண்டு மாணவியாக வருகிறார் அந்த ஊர் பெரும்பள்ளியின் மகள் பூர்ணா. அப்புறமென்ன பரத் பூர்ணாவிற்கு இடையே கிண்டல், கேலி, மோதல், காதல் கடைசியில் சுபம். முனியாண்டி கிராமத்தின் அடையாளம், மூன்றாமாண்டு கல்லூரியின் அடையாளம். கிராமத்தையும், கல்லூரி வாழ்க்கையையும் கலந்து சொல்லும் படம் என்று விளம்பரப்படுத்தியிருந்த இயக்குனர், இரண்டிலுமே கோட்டை விட்டிருப்பது நன்றாகத் தெரிகிறது.
ரேக்கிங் என்ற பெயரில் கிராமத்து கல்லூரி மாணவர்கள் (!?) செய்யும் சேட்டைகள், சாதிச் சமாச்சாரங்களால் ·பிரேமுக்கு ·பிரேம் கூச்சல் போடும் பெரும்புள்ளி வில்லன்கள், கையில் மருந்தோடும், கண்ணில் நீரோடும் எப்போதும் வசனம் பேசும் பொன்வண்ணன், தாரா என யாருமே மனதில் நிற்கவில்லை.
வடிவேலுவைக் கூட போஸ்டரில் போட்டதோடு சரி. படத்தில் சொரி முத்து அய்யனார் நமைச்சல்தான் கொடுக்கிறார். வித்யாசாகர் வித்தியாசமாய் எதுவும் தரவில்லை. ஒளிப்பதிவில் வைத்தியின் பணி குறிப்பிடத்தக்கது. பரத் பாவம் ரொம்பத்தான் இயக்குனரை நம்பி நடித்துள்ளார்.
மொத்தத்தில் முனியாண்டி இயக்குனர் திருமுருகனையும், திருமுருகன் படம் பற்றி இனி நம்மையும் யோசிக்க வைத்துள்ள படம்.