ஆயுதம் செய்வோம் - விமர்சனம்!
, சனி, 5 ஜூலை 2008 (18:30 IST)
அரைகுறை உடை நடிகைகள், அடிதடி நாயகன், அரைவேக்காடு கதாபாத்திரங்கள். இத்தனைக்கும் நடுவில் காந்தியின் அகிம்சையை புகுத்தியிருக்கும் இயக்குனருக்கு போர்த்தலாம்தான் ஒரு கதராடை. ஆனால், புகுத்தியிருக்கும் விதத்தில் கந்தலாடையே எஞ்சுகிறது.
தண்டனை என்று சொல்லி காந்தி மியூசியத்தில் பார்ட் டைம் ரவுடி சுந்தர் சி-யையும், அவரது நண்பர் கான்ஸ்டபிள் விவேக்கையும் இறக்கிவிட்டு செல்கிறார்கள். இருக்கிற இடத்தின் மதிப்பு தெரியாமல் மாளவிகாவை வரவழைத்து ஆட்டம் போடுகிறார்கள் இருவரும். இந்த காமெடி பிளஸ் கவர்ச்சி கலகலப்பில் ஓடிவிடுகிறது முதல் பாதி. சுந்தர் சி-யுடனான கைகலப்பில் எதிர்பாராத விதமாக இறந்துவிடுகிறார் ஊருக்கு நல்லது செய்யும் விஜயகுமார். இறக்கும்போது அவர் சொல்லும் வாழ்க வளமுடன் வாழ்த்து சுந்தர் சி-யை சுனாமியாக துரத்துகிறது. விஜயகுமாரின் லட்சியத்தை நிறைவேற்றுவதே இதற்கு சரியான பரிகாரம் என தியாகி நாசர் சொல்ல, வில்லன் மணிவண்ணனுக்கு எதிரான ஆதாரங்களைத் திரட்டுகிறார் சுந்தர் சி. ஆதாரங்கள் அழிந்துபோக அகிம்சை வழியில் சுந்தர் சி நினைத்ததை முடிப்பதுடன் சுபம். உறுமி வைத்து அடித்தாலும் உக்கிரம் ஏறாத முகத்துடன் ஆக்சன் வேடம் ஏற்றிருக்கிறார் சுந்தர் சி. ஐயோ பாவம். காந்தி மியூசியத்தில் மாளவிகாவை வைத்து அவர் அடிக்கும் கூத்து, நிஜமான சத்திய சோதனை. இதற்கு அவர் சொல்லும் சால்ஜாப்புக்கு நாசர் சபாஷ் சொல்லும்போது, அட போங்கடா என சீட்டில் சாய்ந்து கொள்கிறது பொதுஜனம்.
உடம்பில் ஒட்டு துணியில்லாமல் பார்த்ததால் சுந்தர் சி-யை காதலிக்கிறார் அஞ்சலி. இந்த கண்றாவி சிச்சுவேஷனை இன்னும் எத்தனை படங்களில் பார்க்கப் போகிறோமோ!
அண்ணனை கொன்றவனை பழிவாங்குவேன் என சபதம் போடும் அசிஸ்டெண்ட் கமிஷனர் நெப்போலியன் கேரக்டர் படிப்படியாக காமெடியன் ரேஞ்சுக்கு இறங்குவது பரிதாபம். விவேக்கின் காமெடியில் கொஞ்சம் சிரிக்கவும் முடிவது ஆச்சரியம்.
ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் மூன்று பாடல்கள் கேட்கும் ரகம்.
சுந்தர் சி-யின் அகிம்சை போராட்டத்துக்கு ஊரே திரண்டு ஆதரவு தருவதைப் பார்க்கும்போது நன்றாகத்தான் இருக்கிறது. யதார்த்தத்தில் இதெல்லாம் நடக்க வேண்டுமே!
காந்தியை கமர்ஷியலாக பயன்படுத்திய இயக்குனரின் முயற்சியில் புத்திசாலித்தனத்தைவிட பொத்தல்களே அதிகம் தென்படுகிறது!