பாங்காக் ரிட்டன் பளபள நதியா. அவருக்கு சவசவ என்றொரு மகள் (ராகிணி). சொந்த கிராமத்தில் சொன்ன தேதியில் மகளின் திருமணத்தை நடத்திக் காட்டுவேன் என்று நதியா சூளுரைக்கும்போது, வெடித்துக் கிளம்புகிறது அனைத்து வில்லங்கங்களும்.
கடைசி நேரத்தில் கல்யாண மாப்பிள்ளை வெளிநடப்பு செய்ய, தற்காலிகமாக மாப்பிள்ளையாகிறார் நதியாவால் பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்ட தாதா சுந்தர் சி. பிறகுதான் தெரிகிறது சுந்தர் சி.யின் சுயரூபம். முடிவு எல்லோருக்கும் தெரிந்த சுபம்.
ஆறடி அரிவாளுடன் நிற்கும் அடியாள் முன் எட்டடி அரிவாளுடன் எண்ட்ரி கொடுக்கும்போதே சுந்தர் சி.யின் கேரக்டரை கோடு போட்டு காட்டிவிடுகிறார் இயக்குனர். அவரும் விவேக்கும் வெளிநாட்டு மாப்பிள்ளையை விரட்ட போடும் வியூகங்களும், கடைசியில் அவர்களே அதில் மாட்டிக்கொள்வதும் வெடிச் சிரிப்பு.
ஆனாலும் ஆய் சங்கம் அநியாயத்துக்கும் ஓவர். நதியா போடும் சதித் திட்டங்களை சாதுர்யமாக உடைக்கும் சிந்தர் சி.யின் கதாபாத்திரம் அவரை காப்பாற்றுகிறதுஐ. பாடல் காட்சிகளில்தான் பாவம். நடப்பதைத் தாண்டி எதுவும் செய்யவில்லை.
அழகான அத்தை நதியா. மருமகனுடன் மல்லுகட்டும்போது ரிவால்வர் ரீட்டாவின் வேகம். கொத்தமங்கலத்தில் மருமகனை ஜெயிக்க அவர் நடத்தும் சித்து விளையாட்டுக்கள் பாம் வைக்கும் அளவுக்குப் போகும்போது, ரசிக்க முடியவில்லை, சிரிக்கத்தான் முடிகிறது.
ரீ-மிக்ஸ் பாடலில் தினா தெரிகிறார். மற்ற பாடல்களில் தினா ரொம்ப சுமார். கவர்ச்சி திணிப்பு நமிதாவைவிட, கலெக்ட்ராக வரும் நெப்போலியன் கவனம் ஈர்க்கிறார்.
நதியாவின் அண்ணன் மகன்தான் சுந்தர் சி. என்ற ட்டுவிஸ்ட்டில் சுவாரஸ்யமில்லை. அரிவாளுடன் அலையும் அடியாட்கள், குளோசப்பில் முறைக்கும் வில்லன்கள் ராஜ்கபூர், ரவிமரியா, காதல் தண்டபாணி என கமர்ஷியல் அயிட்டங்கள் அத்தனையும் உண்டு.
நாயகி நதியாவின் மகளாக வரும் ராகிணியாம். அய்யோ பாவம்!
ஃபார்முலா கதையை திரைக்கதையின் பரபரப்பும், விவேக்கின் வெடிச்சிரிப்பும் ரசிக்க வைப்பதை சொல்லியே ஆகவேண்டும்.