Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கண்ணும் கண்ணும் - விமர்சனம்

Advertiesment
கண்ணும் கண்ணும் - விமர்சனம்
, வியாழன், 27 மார்ச் 2008 (13:25 IST)
webdunia photoFILE
உறவுகள் இடம் மாறியதால் இதயங்கள் தடுமாறும் கதை. கே.பி. முதல் விக்ரமன் வரை பலரும் கையாண்ட கதைதான் என்றாலும், மார்கழி பனியாக மனசுக்குள் ஊடுருவும் திரைக்கதை பழசை மறக்கச் செய்கிறது.

கடிதம் மூலம் காதலித்தப் பெண்ணைத் தேடி குற்றலாம் வருகிறார் பிரசன்னா. சூழலின் கரங்கள் அவரை காதலியின் அண்ணன் ஸ்தானத்தில் உட்கார வைக்கிறது. வென்றது காதலா? கடமையா?

இருவேறு உணர்வுகளுக்கு நடுவில் அலைபாயும் கதாபாத்திரம் பிரசன்னாவுக்கு. பிசிறில்லாமல் பிரமாதப்படுத்துகிறார். அரிவாளின் கூர் பார்க்கும் ஆ‌க்சன் ஹீரோக்களுக்கு மத்தியில் நடிப்பின் சீர் பார்க்கும் பிரசன்னாவுக்கு ஸ்பெஷல் பொக்கே தரலாம்.

கண்களிலேயே பாதி கதை சொல்கிறார் புதுமுகமான உதயதாரா. அண்ணனின் மறைவுக்கு வெடித்து கதறி அழுவதும், பிரசன்னாதான் தனது காதலன் என்பதை அறிந்தபின் மனசுக்குள்ளேயே மருகி கசிவதுமாக உதயதாரா உணர்ச்சிக் குவியல்.

காதலில் அவர் காட்டும் உறுதி அவரது கதாபாத்திரத்திற்கு மேலும் வலு சேர்க்கிறது.

திரைக்கதையில் தொய்வு ஏற்படும் போதெல்லாம் தரிசனம் கொடுக்கிறார் வடிவேலு.

தோண்டாத கிணறு காணாமல் போனதாக அவர் கிளப்பும் பூதம் திரையரங்கை திணறடிக்கிறது.

இயக்குநர் மாரிமுத்துவுக்கு இது முதல் படமாம். நம்ப முடியவில்லை. துலக்கி வைத்த வெள்ளி குத்து விளக்காக அத்தனை பளபள. சின்னக் கதாபாத்திரங்களிலும் அவர் காட்டியிருக்கும் சிரத்தை திரைக்கதையின் சிறிய கோளாறுகளை மறைத்து விடுகிறது.

தினாவுக்கு இதமாக இசையமைக்கவும் தெரியும் என்பதை கண்ணும் கண்ணும் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம். வைரமுத்துவின் சீரிய வரிகள் பாடல்களை வசீகரிக்கின்றன.

கதையின் எல்லையை தாண்டாத பாலசுப்ரமணியம்மின் ஒளிப்பதிவு கொள்ளை அழகு. எதையும் திணிக்காமலேயே குற்றாலத்தைப் பார்த்த திருப்தியை ஏற்படுத்தி விடுகிறார்.

பிரசன்னாதான் தனது காதலன் என்று உதயதாராவுக்கு தெரிந்த பிறகு, படத்தை அதிகம் இழுக்காமல் முடித்திருந்தால், இனிமை கூடியிருக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil