வெள்ளித்திரை - விமர்சனம்
, செவ்வாய், 11 மார்ச் 2008 (16:10 IST)
மலையாளத்தில் வெளிவந்த உதயநானு தாரம் படத்தின் ரீ- மேக் 'வெள்ளித்திரை'.
இயக்குனராகும் முயற்சியில் இருக்கும் பிருத்வி ராஜின் திரைக்கதையை திருடி, பெரிய நடிகர் ஆகிறார் அவரது அறை நண்பர் பிரகாஷ் ராஜ். திருடியவன் ஜெயிக்க, திருட்டு கொடுத்தவன் தோற்கிறான். வாழ்க்கை திருடியவனிடமே திருட்டுக் கொடுத்தவனை மண்டியிடச் செய்கிறது. இறுதி வெற்றி யாருக்கு என்பது உணர்ச்சிகரமான கிளைமாக்ஸ்.
பிருத்வி ராஜ், பிரகாஷ் ராஜ் கதாபாத்திரங்களின் வழியாக சினிமாவின் திறமை, திறமையின்மை என்ற எதிர்மறையை நுட்பமாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் விஜி. சினிமா வேறு சினிமா யதார்த்தம் வேறு என்பதை 'நச்' சென்று சொன்னதற்காக இயக்குனருக்கு தரலாம் சில்வர் கிரீடம்.உதவி இயக்குனருக்குரிய கனவு, எதிர்பார்ப்பு, ஏமாற்றம் அனைத்துடனும் வாழ்ந்திருக்கிறார் பிருத்வி ராஜ். தோல்வியில் துவண்டு கோபிகாவிடம் கலங்கும் காட்சியில் கலக்கல் ராஜ்!
திமிரையும் தெனாவெட்டையும் உடல்மொழியில் வெளிப்படுத்தும் பிரகாஷ் ராஜ் பிரம்மிக்க வைக்கிறார். பைக்கிலிருந்து இறங்காமல் கேட்டை உதைத்து திறக்கும் காட்சியில் அவரின் ஒவ்வொரு அவயமும் நடிக்கிறது. நடிகரான பிறகு வழக்கமான அலட்டலுக்கு திரும்பி விடுவது ஏமாற்றம்.
உதவி இயக்குனரை காதலிக்கும் பிரபல நடிகையாக கோபிகா. குறைவில்லாத நடிப்பு. பிரகாஷ் ராஜின் மேனேஜராக வரும் எம்.எஸ்.பாஸ்கர், நண்பனாக வரும் முஸ்தபா என சின்னக் கதாபாத்திரங்களும் சிறப்பாக உருவாக்கப்பட்டிருப்பது படத்தின் பிளஸ். சார்லியின் கதாபாத்திரம் ஒட்டு மொத்த தமிழ் சினிமாவின் ஒரு விள்ளல், அற்புதம்!
சினிமாவில் வெற்றி பெற்றவங்க, அவங்க வறுமையைத்தான் ஜெயிச்சிருக்காங்களே தவிர, சினிமாவை ஜெயிக்கலை. 'சுருக்'கென்று தைக்கும் இதுபோன்ற 'நறுக்' வசனங்கள் படம் நெடுக வருகிறது.குடும்பம் எப்படி லட்சியத்துக்கு இடையூறாக இருக்கிறது என்பதையும் கோடிட்டு காட்டியது படத்துக்கு இன்னொரு பரிமாணத்தைக் கொடுக்கிறது.
பிருத்வி ராஜ், த்ரிஷாவிடம் கதை சொல்லும்போது பின்னணியில் உற்சாகமான வயலின் இசை கிளம்புகிறது. அந்தக் கதையில் தான் பிரகாஷ் ராஜ் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பதை த்ரிஷா சொன்னதும், அதே வயலின் சோகத்திற்கு மாறுகிறது. பின்னணியில் இசையில் சோபிக்கும் ஜீ.வி.பிரகாஷின் பாடல்கள் ஹம் செய்ய முடியாதபடி இருப்பது ஏமாற்றம். விதிவிலக்கு உயிரிலே என் உயிரிலே... பாடல். பாடலும் விஷுவலும் இன்னொரு முறை பார்க்கத் தூண்டுகிறது.படத்தின் கதையை சிதைக்காத ஒளிப்பதிவும், எடிட்டிங்கும் பாராட்டுக்குரியவை. நடு இரவில் கோபிகாவை அடித்து வீட்டை விட்டு துரத்தும் பணத்தாசை அண்ணன், கோபிகா ஒன்றுமில்லாமல் திரும்பி வரும்போது ஏற்றுக் கொள்வதை நம்பமுடியவில்லை. இனி நடிக்கப்போவதில்லை என்று வேறு கூறுகிறார்.
ஒரு படத்தை ரீ-மேக் செய்யும் போது, ஒரிஜினலின் ஆன்மா சிதையாமல் எடுப்பதில் வல்லவர் பாசில். வெள்ளித்திரையில் அதனை சாதித்திருக்கிறார் விஜி!