Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வள்ளுவன் வாசுகி - விமர்சனம்!

Advertiesment
வள்ளுவன் வாசுகி - விமர்சனம்!
, புதன், 20 பிப்ரவரி 2008 (17:03 IST)
webdunia photoWD
காதலுக்கு தடை விதிக்கப்பட்ட ஊரில் இளம் ஜோடி ஒன்று காதலிக்கிறது. எதிர்ப்பை மீறி காதல் ஜோடி ஒன்று சேர்ந்ததா, இல்லையா என்ற நாற்பது வருடங்களுக்கு முன் தமிழ் சினிமா உருவாக்கிய ஒற்றையடி பாதையில் பயணிக்கிறது கே. பாரதி இயக்கியிருக்கும் வள்ளுவன் வாசுகியின் கதை. கிளைப் பாதையாக அப்பா மகள் பாசமும் உண்டு.

ஊர் தலைவர் பொன்வண்ணன் தனது குடும்பத்தில் நடந்த காதல் திருமணத்தால் பாதிக்கப்படுகிறார். இதைத் தொடர்ந்து ஒட்டுமொத்த ஊருக்கும் காதலுக்கு தடா போடப்படுகிறது.

இந்தத் தடையை பொன்வண்ணனின் நண்பரான ரஞ்சித்தின் மகளே மீறுகிறார். அவருக்கு அணையில் வேலை பார்க்கும் சத்யாவின் மீது காதல். எதிர்ப்பை மீறி காதல் ஜெயிக்க, கடைசியில் சுபம்.

ஆட்டு மந்தைகளும், பச்சை வயல்காடுகளும் நிறைந்த கிராமத்துப் பின்னணிக்கு சுவேதாவின் கொழு கொழு தோற்றம் பொருந்திப் போகிறது. காதலின் வெட்கமும், பாசத்தின் குமுறலும் சுவேதாவின் முகத்தில் இயல்பாக வந்து போகிறது. அவருக்கு ஈடுகொடுக்க வேண்டாமா ஹீரோ? நடிப்பில் சத்யா இன்னும் நிறைய தூரம் போக வேண்டும்.

ஆனந்த கோணாராகவே வாழ்ந்திருக்கிறார் ரஞ்சித். ஆசிரியர் அடித்தார் என்று மகளை ஆடு மேய்க்க அனுப்புவதையும், கண்மூடித்தனமாக மகளை அடித்துவிட்டு, அவரே மருந்து போட்டு விடுவதையும் அபரிதமான அன்பினால் என்று காட்டுகிறார்கள். இதுபோன்ற அறியாமைகளை எத்தனை நாளைக்கு தமிழ் சினிமா தூக்கிப் பிடிக்கப் போகிறதோ!

கல்யாணம் என்ற கேரக்டரில் கிச்சு கிச்சு காட்ட முயல்கிறார் இயக்குனர் பாரதி. சீதா, பொன்வண்ணனின் மனைவியாக வரும் குயிலி இருவருக்கும் படத்தில் சொல்லும்படி எந்த வேலையும் இல்லை. ஏற்கனவே பார்த்துச் சலித்த வேடத்தில் பொன்வண்ணனும் வீணடிக்கப்பட்டிருக்கிறார்.

எஸ்.ஏ. ராஜ்குமாரின் இசை பரவாயில்லை ரகம். கிராமத்து அழகை அப்படியே படம்பிடித்திருக்கிறது ராஜேஷின் கேமரா.

அரதபழசான கதையை அதைவிட பழசான திரைக்கதையில் சொல்ல முயன்றிருக்கிறார் பாரதி. வள்ளுவன் வாசுகி - பழைய மொந்தையில் பழைய கள்!

Share this Story:

Follow Webdunia tamil