அல்கா ஃபிலிம் கார்ப்பரேஷன் அஜய் சந்திரன் தயாரிப்பில் பிரசன்னா, காவ்யா மாதவன், அப்பாஸ், மனோஜ் கே. ஜெயன், கருணாஸ், எம்.எஸ். பாஸ்கர் நடித்திருக்கும் சாது மிரண்டா இயக்குனர் சித்திக்கின் மூன்றாவது தமிழ்ப் படம். அண்ணன், தம்பி இருவர் வங்கி ஒன்றை கொள்ளை அடிக்கின்றனர். இதற்கு மத்திய மந்திரியும் உடந்தை. கொள்ளை நடந்த அன்று வங்கி மேனேஜர் தூக்கில் தொங்கி தனது உயிரை மாய்த்துக் கொள்கிறார். கொள்ளை அடித்த அண்ணன் அமெரிக்கா சென்றுவிட, தம்பி பணத்துடன் இங்கேயே தங்கிவிடுகிறார். அமெரிக்கா சென்ற அண்ணனை எப்படி பிரசன்னா இங்கு வரவழைத்து பழி வாங்குகிறார். அதற்கான காரணம் என்ன என்பதை சஸ்பென்சாக கொண்டு செல்கிறார் இயக்குனர்.
அப்பாவியாக அறிமுகமாகும் பிரசன்னா, திடீர் திடீரென்று ஆக்ரோஷமாக சண்டையிடும் போது அவர் கேரக்டர் மீது தானாகவே ஒரு திகில் ஏற்படுகிறது. மூர்த்தி என்ற நண்பனின் பெயரில் அவர் ஆடும் டெலிஃபோன் விளையாட்டு அப்பாஸை அமெரிக்காவிலிருந்து சென்னைக்கு வரவழைப்பது சுவாரஸ்யம். அவர் ஏன் இதையெல்லாம் செய்கிறார், அவரது நோக்கம் என்ன என்பதை இடைவேளைக்குப் பிறகும் சஸ்பென்சாக இழுத்துக் கொண்டு போவது சலிப்பு தட்டுகிறது.
தனது அப்பா மணிவண்ணன் தற்கொலை செய்யவில்லை, கொலை செய்யப்பட்டார் என்பதை அறியும் போதும், பிரசன்னாவை வீட்டை விட்டுத் தூரத்தும் போதும் காவ்யா மாதவனின் எழுது எம் எம் கண்களில் நவரசங்கள். ஆக்ரோஷத்தை விட அப்பாவி வேடம் பிரசன்னாவுக்கு பொருந்தி வருகிறது.
அப்பாஸ் வில்லன். மத்திய மந்திரியாக வரும் கோட்டா சீனிவாசராவ், ஐந்து கோடி கமிஷனுக்காக அலைவதும், பொது இடத்தில் துப்பாக்கியுடன் திரிவதும், அவரை யாருமே அடையாளம் கண்டு கொள்ளாததும், அவர் மத்திய மந்திரியா இல்லை வார்டு மெம்பரா என கேட்க வைக்கிறது.
கந்து வட்டி எம்.எஸ். பாஸ்கர் தனது அடிபொடிகளுடன் கருணாஸை துரத்தும் காட்சிகள் கல கல.
டெலி·போனை வைத்து ஆள்மாறாட்டம் செய்வது உள்பட பல காட்சிகள் சித்திக்கின் முந்தைய மலையாளப் படங்களில் வந்தவை. நாய் துரத்தும் காமெடியையும், எம்.எஸ். பாஸ்கரின் காலை உடைப்பதையும் அப்படியே தனது பழைய படத்திலிருந்து எடுத்துப் பயன்படுத்தியிருக்கிறார்.
கிளைமாக்ஸில் வங்கியை கொள்ளையடித்தது வங்கி மேலாளரை கொன்றது அனைத்துமே அப்பாஸ் என்று சஸ்பென்ஸ் உடைந்த பிறகு காவ்யா மாதவன் கனவில் பிரசன்னாவுடன் டூயட் பாடுகிறார். பாதி திரையரங்கு காலியாகி விடுகிறது.
இசையும், ஒளிப்பதிவும் படத்திற்கு உதவவில்லை. திருப்பங்கள் நிறைந்த கதையை திரைக்கதையில் கோட்டை விட்டதால், திரையரங்கில் ஆங்காங்கே கொட்டாவி சத்தம்.