தமிழ் சினிமாவில் ஹீரோக்களுக்கு தங்கைகள் இருப்பதே ஹீரேராக்களின் தங்கை பாசத்தை வெளிக்காட்டுவதற்கும், வில்லன் தங்கையை பாலியல் பலாத்காரம் செய்த பிறகு அவைன பழி வாங்குவதன் மூலம் ஹீரோவின் வீரத்தை வெளிப்படுத்துவதற்கும்தான்.
'தங்கம்' படத்தில் சத்யராஜுக்கும் ஒரு தங்கை இருக்கிறார். அவர் மீது பாசத்தைக் கொட்டுகிறார். நடுவில் வில்லன் வர வேண்டுமே? அவரும் வருகிறார். தங்கையை கெடுத்த வில்லனுக்கே அவளை கட்டி வைக்கிறார். திருமண நாளில் வில்லன் செய்த கொலைப் பழி ஏற்று சத்யராஜ் ஜெயிலுக்கும் போகிறார். ஆறு வருடங்கள் கழித்து ஆசையாக தங்கையைப் பார்க்க வந்தால், அதற்கு முன்பே அவளை கொடுமைப்படுத்தி சாகடிக்கிறான் வில்லன். அப்புறமென்ன... சண்டைதான், துரத்தல்தான், பழிவாங்கல்தான்.
துரு ஏறிய இந்த தகர கதைக்கு தங்க முலாம் பூசுவது சத்யராஜின் தாய் மாமனாக வரும் கவுண்டமணி. மனிதர் வனவாசம் சென்று திரைவாசம் திரும்புவது இது நான்காவது முறையாம். பேசுகிற வசனத்தில் 'கேப்' பே இல்லாமல் சிரிப்பு வெடிச் செருகி படத்தை கலகலப்பாக்குகிறார்.
பன்ச் வசனம் பேசும் சத்யராஜை இடைமறித்து 'நாட்டுக்கு சுதந்திரம் வாங்கித் தந்த காந்தி ஒரு பன்ச் டயலாக்கை பேசியிருப்பாரா. ஏம்பா நாட்டை கெடுக்கிறீங்க' என்று கலாய்ப்பதாகட்டும், அரிவாளுடன் திரிபவர்களைப் பார்த்து 'நீங்கயெல்லாம் 'வேல்' படத்துல நடிச்சவங்களா' என நக்கலடிப்பதாகட்டும்... கவுண்டரின் கவுண்டர் வசனங்களுக்கு கைதட்டல் காதை பிளக்கிறது.
பெரியாராகவும், மாதவப் படையாச்சியாகவும் பார்த்த சத்யராஜ் மீண்டும் தனது ட்ரேட் மார்க் நடிப்புக்கு திரும்பியிருக்கிறார். தங்கையாக வரும் ஜெயஸ்ரீ, திருவிழாவில் சத்யராஜைப் பார்த்து மையல் கொள்ளும் மேகா நாயர், வில்லனாக வரும் சண்முகராஜன் அனைவருமே கடந்த முப்பதாண்டுகளாக தமிழ் சினிமாவில் பார்த்து வரும் சலிப்பான கதாபாத்திரங்கள்தான்.
ஸ்ரீகாந்த் தேவா இசையில் இரண்டு பாடல்கள் மட்டுமே கேட்கும்படி உள்ளன. புரஜெக்டர் கோளாறா என்று எண்ண வைக்கும் 'டல்'லான ஒளிப்பதிவு.
இயக்குனர் கிச்சாவுக்கு கதையை விட கவுண்டமணிதான் கைகொடுத்திருக்கிறார்.