மாதவன், பாவனா, கூத்தப்பட்டறை முத்துசாமி, இளவரசு, மல்லிகா சுகுமாரன் நடிப்பில், பி.எல். சஞ்சய் ஒளிப்பதிவில், யுவன் சங்கர்ராஜா இசையில், சீமான் இயக்கியுள்ள படம்.
தயாரிப்பு பிரமிட் சாய்மீரா அண்ட் அம்மா கிரியேஷன்ஸ்.
மாதவன் நண்பன் திருமணமானவன். அவன் மனைவி சண்டைபோட்டதன் விளைவாக நண்பனின் பெற்றோர் வீட்டை விட்டு வெளியேறி முதியோர் இல்லம் சென்று விடுகிறார்கள். நண்பனின் மனைவியே இதற்குக் காரணம். திருமணமானால் தன் பெற்றோருக்கும் இந்த நிலை வந்துவிடுமோ என பயன்படும் மாதவன், தன் பெற்றோரை மதிக்கிற மாதிரி ஒரு பெண் கிடைக்கமாட்டாள் என்று நினைக்கிறார்.
அப்போது மாமியாரையும் தாயைப் போல நினைப்பதாகக் கூறும் ஒருவளின் பேட்டி டிவியில் வருகிறது. அது பாவனா.
கோவை வேளாண் கல்லூரி மாணவி. எப்படியும் பாவனாவை மனைவியாக அடைவது என்று திட்டமிடுகிறார் மாதவன்.
கல்லூரி சென்று கால்கடுக்க காத்து இருந்தும் பாவனா கவனிக்கவில்லை. தான் ஒரு சாப்ட்வேர் கம்பெனி நடத்திவந்தாலும், பாவனா வீட்டிற்கு இண்டீரியர் டெக்கரேஷன் செய்து தருபவராக உள்ளே நுழைகிறார். பாவனாவின் இல்லத்தில் நுழைந்தவர் உள்ளத்திலும் புகுந்து கொள்கிறார். இருவருக்குள்ளும் காதல் பூக்கிறது.
பாவனாவின் வீடு ஆனந்தம் குடியிருக்கும் வீடு. கூட்டுக்குடும்பம். தாத்தாவின் நிர்வாகத்தில் இயங்குகிறது. ஒரு கட்டத்தில் மாதவன் - பாவனா காதல் தெரிகிறது. எதிர்க்கிறார்கள். அனைவரையும் அன்பால் வளைத்து எதிர்ப்புகளை வென்று காதலுக்கு மரியாதை பெற்று பாவனாவை மாதவன் எப்படி கைபிடிக்கிறார் என்பது உச்சக்கட்டம்.
ஒரு காதல் கதையை கவிதையாகக் கொடுத்திருக்கிற சீமானைப் பாராட்ட வேண்டும். கதைத்தளம் வண்ணமயமாகத் தெரிய இன்டீரியர் டெக்கரேஷன் பின்னணியை எடுத்துக் கொண்டு வெற்றியும் பெற்றிருக்கிறார். எல்லாரும் நல்லவர்களாகவே காட்டி கதையை நகர்த்தி இருப்பதும் ஒன்று.
மாதவன் அளவு பார்த்து தைத்த சட்டை போட்ட கதிரவன் பாத்திரம். பாவனா குடும்பப் பாங்கான கோலத்தில் வந்து கொள்ளை கொள்கிறார். பாவனா வீட்டு தாத்தாவாக வரும் கூத்துப்பட்டறை முத்துசாமி அமைதியாக இருந்து அளவோடு பேசியே அசத்திவிடுகிறார்.
மாதவனின் அம்மாவாக வரும் மல்லிகா சுகுமாரன் அளவுக்கு அப்பாவாக வரும் மருது பாத்திரம் அமையவில்லை.
லிட்டர் என்பது தவிர ஆங்கில வார்த்தை கலக்காமல் முழுப் படமும் உரையாடல் அமைக்கப்பட்டு இருக்கும். அழகும் எளிமையும் பாராட்டத்தக்கது. சில இடங்களில் நாடகத்தனமான காட்சிகளை தவிர்த்திருந்தால் அழகாய் இருந்திருக்கும்.
குறிப்பாக பாவனா மாமா வீட்டை விட்டு வெளியேறும் காட்சி மிகையாக தெரிகிறது. பாடல் காட்சிகளுக்கு பதிவாகியிருக்கும் இடங்கள் கண்களையும், பாடல்வரிகள் மனத்தையும் கொள்ளை கொள்கின்றன.
இசை யுவன், வரிகள் முத்துக்குமார், ஒளிப்பதிவில் செறிவு காட்டியிருக்கிறார் சஞ்சய்.
நல்லன பலவற்றைக் கூறி நல்ல பட முயற்சியில் இறங்கியுள்ள இயக்குநர் சீமானுக்கு நாம் பாராட்டுகளுடன் சொல்வோம் வாழ்த்துகள்.