சிம்பு, வேதிகா, சங்கீதா, லால், நிலா, சண்முகராஜன், சந்தானம், சீமா நடிப்பில் ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவில் ஜிவி பிரகாஷ்குமார் இசையில் தருண்கோபி இயக்கியுள்ள படம்.
தயாரிப்பு நிக் ஆர்ட்ஸ் சார்பில் எஸ்.எஸ். சக்ரவர்த்தி.
காளை போன்ற வீரமுள்ள தேனி மண்ணின் இளைஞன் சிம்பு. தன் பாட்டியை தீவைத்துக் கொளுத்திய போலிஸ் அதிகாரி லாலைப் பழிவாங்கத் துடிக்கிறார். லாலின் மகளைக் காதலிப்பது போல் நடித்து லாலை மடக்கி பழிவாங்குவதே கதை.
சிம்பு திமிறும் காளையாக வந்து யாருக்கும் அடங்காமல் திரிகிறார். கல்லூரியில் படிக்கும் அவர் வாய் பேச மாட்டார். கை மட்டுமே பேசும். அவர் வலையில் மாணவி வேதிகா விழுகிறார். ஒரு கட்டத்தில் சென்னையிலிருந்து வேதிகாவுடன் தேனி செல்கிறார். டிசியாக இருக்கும் லால் தேனி செல்கிறார். அங்கு சுரசம்ஹாரம்.
படம் முழுக்க சிம்புவின் ராஜ்யம் கொடி கட்டிப் பறக்கிறது. வேதிகா ஐ லவ் யூ சொல்ல அலைகிறார். டெபுடி கமிஷனராக வரும் லால் நம்ப முடியாத அளவுக்கு வளைவது, ரவுடிகளுக்குப் பயப்படுவது டூமச்.
நிலா ஒரு பாட்டுக்கு ஆடி கிளுகிளுப்பூட்டுகிறார். சங்கீதா ஒரு பக்கம் தூக்குங்கடா அவனை என்று சொல்லி அரற்றுகிறார். குழப்பம் வருகிறது யார் இவரென்று,
ஒரு கட்டத்தில் சிம்பு ரவுடியா, சைக்கோவா என்று மண்டை காயவைத்துவிட்டு ப்ளாஷ் பேக் போடுகிறார்கள்.
சீமாவின் அதிரடி ஆட்டம் ஆரம்பிக்கிறது. அடங்காத வீராங்கனையாக ஆர்ப்பாட்டம் செய்து எல்லாரையும் ஆட்டி வைக்கிறார் சீமா. இந்த ஆட்சி வயதான பிறகும் தொடர்கிறது.
அப்படிப்பட்ட சீமாவைத்தான் லால் போலிஸ் ஸ்டேஷனிலேயே கொன்று விடுகிறார்.
சீமா பேரன்தான் சிம்பு என்று காட்டுகிறார்கள். அப்பாடா... இப்போதுதான் புரிகிறது சிம்புவின் முறைப்பும் முரட்டுத்தனமும் கண்களில் தெரியும் வெறியும் தன்பாட்டியின் மரணத்துக்கு காரணமானவர்களைப் பழிவாங்கவே என்று.
சிம்பு பாடல் காட்சிகளில் வேதிகாவுடன் ஆடுகிறார். அதிகபட்ச கவர்ச்சி காட்டி உரித்த கோழியாக வருகிறார் வேதிகா. எல்லா டூயட் பாடல்களிலும் வேதிகாவின் தரிசனம் பாதி சிம்புவின் நடனம் பாதி என்று உள்ளது-
தேனியில் கதை நடக்கும்போது மண்ணின் மணமும் திரையில் தெரிகிறது.
சிம்புவை அசகாய சூரனாக அதிசய வீரனாகக் காட்டி யதார்த்தத்தை விட்டு விலகி போயிருக்கிறார் இயக்குநர். காளை காளை, குத்தாலக்கடி பாடல்கள் சரியான கமர்ஷியல் பஞ்ச். சிம்புவை தூக்கிப் பிடிக்கவே கதை உருவாக்கி குடை பிடித்து இருப்பதால் இயக்குநர் குடைகாயும் நிலைக்கும் போய்விட்டது நியாயமா?
திமிரு படத்தில் தெரிந்த பல இதிலும் ரிபீட் ஆகியுள்ளது சரியா?
சீறுகிற காளையில் களை போதாது.