பரத், காஜல் அகர்வால், பிஜூ மேனன், குஷ்பூ, ஐஸ்வர்யா, ராஜ்கபூர் நடிப்பில் விஜய் மில்டனின் ஒளிப்பதிவில் ஸ்ரீகாந்த் தேவா இசையில் பேரரசு இயக்கியுள்ள படம். தயாரிப்பு சினிமா பேரடைஸ் சார்பில் ஷக்தி சிதம்பரம்.ஜெயிலிலிருந்து விடுதலையாகி வருகிறார் பரத். வந்தவர் குஷ்பூ வீட்டில் வேலைக்குச் சேர்கிறார். அம்மா அம்மா என்று குஷ்பூவிடம் பாசம் காட்டுகிறார். குஷ்புவின் கணவர் பிஜூ மேனனுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் தொடர்பு இருப்பது தெரிகிறது. பரத் இதைத் தடுக்க முயல்கிறார். ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து கொண்டு சொத்துக்காக குஷ்பூவைத் தீர்த்துக் கட்ட நினைக்கிறார் பிஜூ. இதை குஷ்பூவிடம் பரத் சொல்ல நினைக்க... பரத்தான் குஷ்பூவைக் கொல்ல முயற்சி செய்கிறார் என்று பிஜூ பரத் மீது கொலைப்பழி போடுகிறார்.பரத் யாரோ ஒருவன் அல்ல தன் தம்பிதான் என்பதும் தன் அம்மாவைக் காப்பாற்ற ஒரு கொலை செய்துவிட்டு ஜெயிலுக்குப் போனவர் என்பதும் குஷ்புவுக்குத் தெரிகிறது. பிஜூ மேனன் பரத்தை பழி வாங்கத் துடிக்கிறபோது பிஜூ வேறொரு ஆபத்தில் சிக்கிக் கொள்கிறார். தன் அக்காவுக்காக பரத் பிஜூவை காப்பாற்றுகிறார். அக்கா குடும்பத்து எதிரிகளை அழிக்கிறார். இதில் இடைச்செருகலாக காஜல் அகர்வால் காதல்.
பரத் ஆக்ஷன் நடிப்பில் புதுமுகம் காட்டி பொளந்து கட்டுகிறார். அவரது எடைக்கு இது அதிகம்தான் என்றாலும் சோபிக்கிறார். ஜெயிலில் வெள்ளையனாக ஒரு சண்டைக் காட்சியில் விளாசும்போதும் பிஜூ மேனனுடன் அடிக்கடி நடக்கும் மோதலில் ஆவேசம் காட்டுகிறார். காஜல் அகர்வாலுடன் பழகும்போது வாலிபனாக குழைகிறார். அக்கா குஷ்பூவிடம் தம்பி என்று சொல்லாமல் மறைத்து பழகும்போது இழைகிறார். நடிக்கவும் அடிக்கவும் பரத்துக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார் பேரரசு. பாந்தமான அக்கா குஷ்பு சரியான தேர்வு. குஷ்பூ கணவர் பிஜூ மேனன் வில்லத்தனம் கொண்ட பாத்திரம். ஐஸ்வர்யா செய்யும் அடாவடி ரகளை. ராஜ்கபூர் வழக்கமான கெட்டவன் வேடத்தில் வருகிறார்.
பரத்தை எப்படியாவது ஆக்ஷன் ஹீரோ ஆசனத்தில் அமரவைக்க வேண்டும் என்கிற ஓர் அம்சத்திட்டத்தில் உருவாகியிருக்கும் படம் பழனி. அதில் இயக்குநர் வெற்றியும் பெற்றிருக்கிறார்.
ஆனால், பல அடிகளில் பழைய நெடி வீசுகிறது. கதையை புதிதாக செய்திருக்கலாம். கொஞ்சம் காதல், கொஞ்சம் பாசம், நிறைய அதிரடி சண்டை, ஆவேச பஞ்ச் வசனம் என்று தான் போட்டு வைத்துள்ள அதே பிரேமில் பரத் படத்தை ஒட்டியுள்ளார் பேரரசு. அடுத்த படத்திலாவது பிரேமை மாற்றுவாரா?
அது என்ன ரகசியமோ வெறும் அஜால் குஜால் பாட்டுகளாகப் போட்டுவிட்டு ஸ்ரீகாந்த் பேரரசு படத்திற்கு மட்டும் அழகான மெட்டுக்களை போட்டுவிடுகிறார்.
பேரரசு பேனா பிடிக்கத் தெரிந்தவர் என்பது எந்த இடத்திலும் பஞ்ச் டயலாக் வைக்க முடியும் என்று காட்டியிருப்பதில் புரிகிறது. ஒரு காட்சியில் நடித்தும் இருக்கிறார்.
சொன்னபடியே கமர்ஷியல் பஞ்சாமிர்தம் கிண்டியிருக்கிறார் இயக்குநர்.