இப்படி பில்லாவின் சாகசங்களை ஓர் அஜீத் கண் முன் நிறுத்துகிறார் என்றால் பிக்பாக்கெட் வேலுவாக வரும் இன்னொரு அஜீத்தும் சளைக்காமல் சாதுர்யம் காட்டுகிறார்.அந்த ஆறுமுகனுக்கு ஆறுதலை எனக்கு ஒரே தலை என வசனம் பேசி கலகலப்பூட்டுகிறார். பில்லாவாக நிறம்மாறி நடிப்பில் அசத்தியிருக்கிறார்.நயன்தாரா, நமீதா இருவருமே இருக்கிறார்கள். நயன்தாரா ஹாலிவுட் கனவுக்கன்னி ரேஞ்சுக்கு கவர்ச்சியில் ஜொலிக்கிறார். உயரமான கட்டடத்திலிருந்து கயிற்றில் தொங்கி சாகசமும் காட்டியிருக்கிறார் நயன். ஆனால் பெரும்பாலும் முகத்தையும் உடைகளையும் இறுக்கமாக வைத்துக் கொண்டே வந்து போவதால் கவர்ச்சி வெளிப்பட்ட அளவுக்கு நடிப்பு வெளிப்படவில்லை. நயன்தாராவில் கவர்ச்சி முன்பு நமீதா காணாமல் போய்விடுகிறார்.டி.எஸ்.பி. ஜெயப்பிரகாஷாக வரும் பிரபு குறையில்லாமல் செய்திருக்கிறார். உயர் போலிஸ் அதிகாரி கோகுல்நாத்தாக வரும் ரகுமான் நல்ல தேர்வு. அவர்தான் ஜெகதீஷ் என கதை திரும்புவது புது திருப்பம். சந்தேகக் கண்ணுடன் வரும் ஆதித்யா நல்லவர் என்பதும் நல்ல திருப்பம்.படத்தில் கொடி கட்டிப் பறப்பது அஜீத்தின் ஆட்சி என்பது தெரியும். இன்னொருவர் கொடியும் உயரே பறக்கிறது. அவர்தான் ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா. படத்தை ஹாலிவுட் படம் போல பளிச்சிட வைத்திருப்பது இவரது கேமராவின் உழைப்பினால்தான்.மலேசியாவைக் கண்முன் நிறுத்தியிருப்பது, அந்த உயரமான தொங்கு பாலம்... சம்பந்தப்பட்ட காட்சிகள், முருகன் கோவில் காவடியாட்டம் திருவிழா என நீரவ்ஷாவின் கேமரா கோணங்கள் விழிகளை விரிய வைப்பவை.
யுவன் சங்கர் ராஜாவின் பாடல்களில் புதுமை உள்ள அளவுக்கு இனிமை இல்லாதது ஒரு குறை. அளவோடு அழகான வசனங்களை எழுதியிருக்கிறார் ராஜ் கண்ணன். பழைய படமென்றாலும் புது மெருகுடன் புது பாலிஷாக - புது ஸ்டைலில் உருவாக்கி இயக்குநர் விஷ்ணுவர்தன் வெற்றி பெற்றுள்ளார்.