Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எவனோ ஒருவன் - விமர்சனம்

எவனோ ஒருவன் - விமர்சனம்
, புதன், 12 டிசம்பர் 2007 (12:59 IST)
எவனோ ஒருவ‌ன் பட‌ம் சராச‌ரி‌ வ‌ர்‌த்தக‌ப் பட‌ங்களை‌ப் போ‌ல் அ‌ல்லாம‌ல், சமூக‌த் தா‌க்க‌த்தை ஏ‌ற்படு‌த்து‌ம் சராச‌ரி இளைஞ‌னி‌ன் கதை.

மாதவன், சங்கீதா, சீமான் நடிப்பில் சஞ்சய்-ஜாதவ் ஒளிப்பதிவில் ஜி.வி.பிரகாஷ்குமார் (டைட்டில் பாடல்) பி.சமீர் இசையில் மாதவன் வசனத்தில் கதை, திரைக்கதை அமைத்து இயக்கியிருப்பவர் நிஷிகாந்த். தயாரிப்பு அப்பாஸ் மஸ்தான் மற்றும் லூக்காஸ் பிலிம்ஸ்.

எவனோ எதையோ செய்துவிட்டுப் போகிறான் நமக்கென்ன? நம் வேலையைப் பார்த்து விட்டுப் போவோம் நமக்கெதுக்கு ஊர்வம்பு... என்றிருப்பது தான் இன்று 99% பேரின் கொள்கையாக இருக்கிறது. ஆனால் இதை எவனாவது ஒருவன் கேட்க மாட்டானா என்கிற ஆதங்கம் எல்லாருக்குள்ளும் இருக்கிறது.

சமூகத்தில் நடக்கும் வரம்புமீறல், முறைகேடுகள், கேலிக்கூத்துகள், கடமை தவறுதல்கள் எல்லாம் ஒரு நடுத்தரக் குடும்பத்தின் தலைவனை அழுத்தி, அவனது நேர்மைக்கு சவால் விட்டு குத்திக் கொண்டே இருந்தால்... அவன் என்ன செய்வான்... வேறு வழியில்லாமல் வெகுண்டெழுகிறான். அவனை சட்டை செய்யாதவர்கள் எல்லாம் அவன் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டபோது சலாம் போடுகிறார்கள். ஆனால் அதை அவன் விரும்பவில்லை. ஆனால் அவன் ஒரு மனநோயாளியாக தீவிரவாதிபோல சித்தரிக்கப்படுகிறான். முடிவு என்ன என்பதுதான் 'எவனோ ஒருவன்' படம்.

மராத்தியில் பெரிய வெற்றி பெற்று பல விருதுகளைக் குவித்த படம் தமிழில் உருவாகியுள்ளது. முதலில் இப்படிப்பட்ட படத்தை தயாரிக்க முன் முயற்சி எடுத்த மாதவனுக்கு பாராட்டைக் கூறவேண்டும்.

படம் ஆரம்பித்ததுமே சென்னை வாழ்க்கையின் நகர-நரக எந்திரத் தனத்தைச் சொல்கிறார்கள் - ஒரு வசனம் கூட இல்லாமல். ஆரம்பம் முதலே காட்சிப்படுத்தலில் அசத்தி உட்கார வைத்து விடுகிறார் இயக்குனர். தண்ணீர் லாரிக்காரன் நீர்விட மறுப்பது, தகுதியில்லாதவனுக்கு வங்கியில் லோன் தர மேனேஜர் ஆதரவு தருவது, நோ பார்க்கிங்கில் வண்டி நிறுத்துவது, குறிப்பிட்ட விலைக்கு மேல் பொருளுக்கு விலை வைத்து விற்பது, மருத்துவமனையில் முதியவர்களுக்கு அட்மிட் மறுப்பது... என்று மாதவன் சந்திக்கும் எல்லாமே கோணலாக... நேர்மையற்றதாக இருக்கின்றபோது... கோபம் கோபமாக வருகிறது.

விரும்பிய பள்ளியில் தன் மகளுக்கு அட்மிஷன் கிடைத்தும் பீஸ் அதிகம் என்று சேர்க்க மறுக்கிறார் கணவர் என்று வீடு வரை திட்டிக் கொண்டே வருகிற மனைவி. அத்தனை திட்டுகளையும் பொறுமையாக கேட்டுக் கொண்டு ஜீரணிக்கிற பொறுமைசாலியான ஒரு குடும்பத்தலைவன் எப்படி கோபப்பட்டு நிறம் மாறி அனைத்தையும் எதிர்க்கிறான் என்பதை இயல்பாகக் காட்டியிருக்கிறார்.

அது கோபாவேசம் தானே தவிர வீராவேசமா ஹீரோ ஆகும் ஆவேசமோ இல்லை. வழக்கமாக இப்படி சமூக சீர்கேடுகளுக்கு எதிராகக் கிளம்புகிறவர்களை ஹீரோ ஆக்கிவிடுவது தமிழ் சினிமாவின் மசாலா சூத்திரங்களில் ஒன்று. ஆனால் இந்த ஸ்ரீதர் வாசுதேவன் அப்படிப்பட்ட ஆள் அல்ல. நம்மில் ஒருவன்.

ஒரு சாமான்யன். இந்திய குடிமக்களில் எவனோ ஒருவனாக இருப்பவன். அதனால் ஒரு சாமான்யன் இப்படிப்பட்ட சமூக அவலங்களுக்கு எதிராகக் கிளம்பினால் என்ன நடக்குமோ அதுவே ஸ்ரீதர் வாசுதேவனுக்கும் நடக்கிறது. யதார்த்த நடிப்பில் பட்டையக் கிளப்பும் மாதவன் முகத்தில் லட்சக்கணக்கான இந்தியன்களைத் தரிசிக்கலாம். எனவே இந்த எவனோ ஒருவன்... உங்களில் ஒருவன் நம்மில் ஒருவன் என்கிற உணர்வு படம் பார்க்கும் அனைவருக்கும் ஏற்படுவது இயல்பு. அந்த மிடில்க்ளால் மனைவியாக வரும் சங்கீதா அச்சு அசலான பாத்திர வார்ப்பு. நல்ல போலீஸ் இன்ஸ்பெக்டராக இருக்க விரும்பும் சீமான் மட்டுமல்ல் தரையில் ஓவியம் வரையும் பையனும் கூட மனதில் நிற்கிறார்கள்.

ஆட்டுக்குத் தாடி மாதிரித்தான் பல படங்களுக்குப் பாடல்கள் இருக்கின்றன. இதில் பாடல்கள் இல்லை. படங்களில் பாடல்கள் இடம்பெற இரண்டு காரணங்கள். 1. படம் பற்றி விளம்பரப்படுத்த ஈர்த்திட வேறு விஷயம் இல்லாமலிருப்பது. 2. பாடல்கள் இல்லாமல் தொடர்ந்து அரைமணி நேரத்திற்குமேல் கதை சொல்லும் அளவுக்கு விறுவிறுப்பான கதை பலம் இல்லாமலிருப்பது.

இயல்பான விறுவிறுப்பான சமூகத் தாக்கத்துடனான மனசைத் தொடும்படியான ஒரு கதையும் களமும் இருக்கும்போது செயற்கைத் திணிப்புகளாக பாடல்காட்சிகளும் சண்டைக்காட்சிகளும் வேண்டாம் என்று நினைத்து இருக்கிறார்கள். இந்த துணிவும் தெளிவும் பாராட்டத்தக்கது.

எந்திரமயமான சுயநலமிக்க சமூகச் சூழலில் வாழ்க்கையை தொலைத்துவிட்டு ஓடிக் கொண்டிருக்கிற நமது கதையை சினிமாத்தனம் துளியும் இல்லாமல் ஆபாசம் அருவருப்பின்றி மிகவும் நேர்மையான சினிமாவாக கொடுக்க முடியும் என்று நிரூபித்துள்ளனர். இந்த நல்ல முயற்சிக்கு இயக்குனர் நிஷிகாந்தை பாரா‌ட்டாம‌ல் விட்டால் பாவம் நம்மைச் சேரும்.

இப்படியும் கூட ஒரு படம் எடுக்க முடியும் என்று உணர்ந்து மகிழும்போது இத்தனை நாள் வணிக ரீதியிலான குப்பைகளை நாம் சுமந்து கொண்டாடிய அவமானத்தையும் உணர முடிகிறது.

'எவனோ ஒருவன்' சராசரிப் படமல்ல. சமூகத் தாக்கத்தை ஏற்படுத்தும் படம்.

Share this Story:

Follow Webdunia tamil